×

வேலூர் விஐடியில் நடந்த எஸ்ஐ பணிக்கு போட்டித்தேர்வை 5,669 பேர் எழுதினர் * 1189 பேர் ஆப்சென்ட் * டிஐஜி, எஸ்பி நேரில் ஆய்வு

வேலூர், ஆக. 27: வேலூர் விஐடியில் நேற்று நடந்த எஸ்ஐ பணிக்கான போட்டி தேர்வை 5,669 பேர் எழுதினர். 1189 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். மேலும் தேர்வு மையத்தை டிஐஜி, எஸ்பி ஆகியோர் ஆய்வு செய்தனர். தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம், சப் இன்ஸ்பெக்டர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு நேற்று மாநிலம் முழுவதும் நடந்தது. ஆயுதப்படை மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படைகளில் காலியாக உள்ள 464 ஆண்கள் மற்றும் 152 பெண்கள் உள்பட மொத்தம் 621 சப்-இன்ஸ்பெக்டர் பணியிடங்கள் இந்த போட்டித்தேர்வு மூலம் நிரப்பப்படுகிறது.

மேலும், தற்போது காவல்துறை பணியில் உள்ளவர்களும் இப்போட்டித்தேர்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். அதற்காக, மொத்த பணியிடங்களில் 20 சதவீத பணியிடங்கள் அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த போட்டி தேர்வில் பங்கேற்க, ஏதேனும் ஒரு இளங்கலை பட்டப்படிப்பு குறைந்தபட்ச கல்வி தகுதியாகும். கடந்த ஜூன் 1ம் தேதி முதல் 30ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

தகுதி உள்ள விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு, போட்டி தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஆன்லைனில் வெளியிடப்பட்டது. எழுத்துத் தேர்வு பொது பிரிவினருக்கு நேற்றும், இன்றும் துறை ரீதியான ஒதுக்கீடும் நடக்கிறது. அதன்படி வேலூர் மாவட்டம் காட்பாடி விஐடி பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த தேர்வு மையத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களை சேர்ந்த 6,858 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து, வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த தேர்வை 5,669 பேர் எழுதினர். 1189 பேர் ஆப்சென்ட் ஆகி இருந்தனர். தேர்வை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி தலைமையில் எஸ்பி மணிவண்ணன் மேற்பார்வையில் 3 ஏடிஎஸ்பிகள், 5 டிஎஸ்பிக்கள், காவல் அதிகாரிகள், மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என மொத்தம் 900 பேர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வு நடைபெறும் அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

முன்னதாக, தேர்வு மையத்திற்கு வந்தவர்கள் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்பட்டனர். எழுத்துத் தேர்வுக்கு வந்த விண்ணப்பதாரர்கள் கையில் எந்த விதமான பொருட்களையும் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை. தேர்வு நுழைவு சீட்டில் உள்ள புகைப்படம் அவர்களது தானா என்பதை சரி பார்க்கப்பட்ட பின்னர் அனுமதிக்கப்பட்டனர். எழுத்து தேர்வு முடியும் வரை தேர்வு கூட்ட அறையை வீட்டு வெளியே செல்ல யாரையும் அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

The post வேலூர் விஐடியில் நடந்த எஸ்ஐ பணிக்கு போட்டித்தேர்வை 5,669 பேர் எழுதினர் * 1189 பேர் ஆப்சென்ட் * டிஐஜி, எஸ்பி நேரில் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Vellore ,VIT ,SI ,Vellore VIT ,Dinakaran ,
× RELATED வேலூரில் தினகரன் -விஐடி இணைந்து...