×

குடியிருப்புகள் கட்டப்படுவதால் சாலைகள் சேதம் கட்டுமான நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை: திருப்போரூர் அருகே பரபரப்பு

 

திருப்போரூர், ஆக.27: திருப்போரூர் அருகே காலவாக்கம் கிராமத்தில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படுவதால் மனைப்பிரிவின் சாலைகள் சேதமடைவதை கண்டித்து, பொதுமக்கள் கட்டுமான நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்போரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட காலவாக்கம் கிராமத்தில் தனியார் வீட்டு மனைப்பிரிவு உள்ளது. இந்த மனைப்பிரிவில் 100க்கும் மேற்பட்டோர் மனை வாங்கி வீடுகட்டி குடியிருந்து வருகின்றனர். இதையொட்டி சென்னையை சேர்ந்த பிரபல கட்டுமான நிறுவனம் சார்பில், அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணிகளுக்காக வரும் பிரம்மாண்ட லாரிகளால் குடியிருப்பு மனைப்பிரிவின் சாலைகள் சேதமடைந்துள்ளன.

மேலும், அடுக்குமாடி கட்டுமான நிறுவனம் மழைநீர் செல்லும் வாய்க்கால்களை அடைத்து பணிகளை செய்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதன் காரணமாக இந்த அடுக்குமாடி குடியிருப்பு பணிகள் நடைபெறும் பகுதியினை ஒட்டி உள்ள மனைப்பிரிவில் காலியாக உள்ள மனைகளில் தண்ணீர் தேங்கி கொசு உற்பத்தியாகி 2 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதியாகி உள்ளது. இதையடுத்து கடந்த வெள்ளிக்கிழமை சுகாதாரத்துறையினர் வந்து அப்பகுதி முழுவதும் மருந்து தெளித்து மாத்திரை வழங்கினர். அப்போது மனைப்பிரிவில் தண்ணீர் தேங்குவதால் நன்னீர் கொசு உற்பத்தியாவதாகவும், அதன் காரணமாக டெங்கு காய்ச்சல் பரவுவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.

இதையடுத்து நேற்று தனியார் மனைப்பிரிவில் வசிக்கும் 100க்கும் மேற்பட்டோர் தங்களது மனைப்பிரிவை ஒட்டி உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமானப் பணி நடைபெறும் பகுதிக்கு சென்று, அங்குள்ள அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த திருப்போரூர் பேரூராட்சி தலைவர் மு.தேவராஜ், விரைந்துவந்து போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களிடமும், கட்டுமான நிறுவனத்திடமும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அடுக்குமாடி குடியிருப்பு நிறுவனம் கால்வாய்களை அடைத்து பணிகள் மேற்கொள்வதாக வந்த புகார் குறித்தும், அவற்றை பார்வையிட்ட பேரூராட்சி நிர்வாகம் மூலம் கால்வாய்கள் தூர் வாரப்படும் என்றும், மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், கட்டுமான நிறுவனத்தின் செயல்பாடுகளுக்கும் எச்சரிக்கை விடுத்தார். பொதுக் கால்வாய்களை ஆக்கிரமிப்பதை ஏற்க முடியாது என்றும் உரிய நடவடிக்கையும், அபராதமும் விதிக்கப்படும் என்றும் உறுதியளித்தார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post குடியிருப்புகள் கட்டப்படுவதால் சாலைகள் சேதம் கட்டுமான நிறுவனத்தை பொதுமக்கள் முற்றுகை: திருப்போரூர் அருகே பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Tiruporur ,Kalavakkam ,
× RELATED திருப்போரூர் பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு நாடகம்