×

சைலன்ட் மோடுக்கு மாறிய சின்ன மம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘அல்வா மாவட்டத்துல இலை கட்சியின் இணைப்பு அல்வா மாதிரி இனிப்பாக இல்லை போல…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலை கட்சி தொடர்பாக தீர்ப்பு சேலம்காரருக்கு ஆதரவாக வந்ததை வரவேற்று, கட்சியினர் அனைத்து மாவட்டத்திலும் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி முடிச்சாங்க. அல்வா மாவட்டத்திலும் தீர்ப்பை கேட்டதும் ராஜாவான மாவட்ட செயலாளரின் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு அல்வா கொடுத்தும் அப்பகுதியை அதிர வைத்தனர். அதே நேரத்தில் சிவன் பெயரைக் கொண்ட ஆவின் முன்னாள் சேர்மன் தலைமையிலும் ஒரு கோஷ்டி தனியாக கோர்ட் தீர்ப்புக்காக இனிப்பு வழங்கி கொண்டாடி மகிழ்ந்தாங்களாம்.

அல்வா மாவட்டத்தில் தேனிக்காரர் – சேலம்காரர் கோஷ்டிகள் அடிக்கடி மோதிக் கொள்வது தமிழ்நாட்டிலேயே இங்கே தான் அதிகம். குக்கர், தேனிக்காரரின் ஆதரவாளர்கள் தான் இங்கே அதிகமாக கோலோச்சி கொண்டு இருந்தாங்க. கோர்ட் தீர்ப்புக்கு பிறகு விரல் விட்டு எண்ணும் வகையில் தேனிகாரர் குரூப்பும், கூட்டி கழித்து பார்க்கும் அளவுக்கு குக்கர் குரூப் தொண்டர்களும் இருந்தாங்க. இப்போது தீர்ப்பு மாறியதால் கட்சி தொண்டர்களும் அணியை மறந்துவிட்டு சேலம்காரர் அணியில் இணைந்தனர். இருந்தாலும் அரசியல் களத்தில் யார் பெரியவர் என்ற கோஷ்டி பூசல் காரணமாக அல்வா மாவட்டத்திலும் சேலம்காரர் அணி கோஷ்டிகளாக பிரிந்து சண்டை போட்டு வருவதாக சொல்றாங்க.

இதுல அப்பாவி தொண்டர்கள் இனிப்பு கொடுக்கும் இடத்துக்கு போனால், தேனி குரூப்பில் இருந்து பிரிந்துவந்துவிட்டாயா என்று கேட்டு ஸ்வீட் கொடுத்தாங்களாம். விஷயம் தெரியாம இந்த இடத்துக்கு வந்துட்டோமோ என்று விழுந்தடித்து தேனிகாரரின் ஆதரவாளர் தலைதெறிக்க ஓடினாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘மழை சத்தம் கூட கேட்குது, சின்ன மம்மியின் பேச்சு சத்தமே கேட்கலையாமே, உண்மையா…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைகட்சியில் சேலம்காரர், தேனிக்காரர் என இரண்டு அணியாக இருக்காங்க. சிறையில் இருந்து வந்த சின்னமம்மி இலைகட்சியில் சேருவதற்கான பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால் அவை எடுபடவில்லை.

இதனால் வேறு வழி இல்லாமல் சேலத்துக்காரருக்கு ‘செக்’ வைக்கப்பதற்கான முயற்சியில் சின்னமம்மி இறங்கினாராம். இதற்காக தொடர்ந்து, தேனிக்காரர் மற்றும் குக்கர்காரரை இணைத்து போராட்டத்துக்கு விதை போட்டார். இருவரும் சேர்ந்த பிறகும் சின்னமம்மி மவுனமாக இருந்து வருகிறார். இதற்கான காரணத்தை கண்டறிய தேனிக்காரர், குக்கர் தலைமையும் களமிறங்கி உள்ளார்களாம். இதற்கிடையில் சமீபத்தில் நெற்களஞ்சியம், மனுநீதி சோழன், கடலோர மாவட்டங்களில் ரகசியமாக விசிட் அடித்த சின்னமம்மி தனது ஆதரவாளர்களை சந்தித்தாராம். இந்த ரகசிய சந்திப்புக்கு பிறகு சின்னமம்மி ஏதாவது ஒரு திட்டத்தை கையில் எடுக்கலாம்.

இந்த திட்டம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் ‘ரகசியமாக’ வைத்துள்ளார்களாம்… அதாவது நாடாளுமன்ற தேர்தலுக்குள் சேலம்காரரை அணுகுவதில் மிகப்பெரிய மாற்றம் வர இருக்கிறதாம். அதுதான் சின்ன மம்மி ஆதரவாளர்கள் சொல்கிறார்களே தவிர, அவர் என்ன சொன்னார் என்று கேட்டால், அனைவரும் ‘சைலன்ட் மோடிற்கு’ மாறிவிடுகிறார்களாம்…’’ என்றார் விக்கியானந்தா ‘‘ஜெயிலில் கைதியை கண்காணிக்க கைதிகளே டொனேஷன் கொடுத்த கதையை சொல்லுங்க…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘மாங்கனி மாவட்டம் ஆத்தூருல இருக்கிற ஜெயில்ல இருநூறு கைதிகள் வரை அடைக்கலமாம். அந்த ஜெயிலுக்கு கண்காணிப்பு கேமரா இல்லாததால தடை செய்யப்பட்ட பொருட்களின் புழக்கம் அதிகமாக இருந்துச்சாம்.

கொரோனா காலத்துல எய்ட்ஸ் கைதி, வெளியே இருந்து பிரியாணி பொட்டலத்தையும், மதுபாட்டிலையும் கயிறு கட்டி உள்ளே இறக்கி சாப்பிட்ட சம்பவமும் நடந்துச்சி. சமீபத்துல பிரபல ரவுடி கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல் செஞ்சாங்க. இதனால முக்கிய பகுதிகளில் கேமரா பொருத்தியே ஆகணுமுன்னு அங்குள்ள அதிகாரிகள் முடிவு பண்ணி, அதுக்கான செயலிலும் இறங்கியிருக்காங்க. இதற்கான நிதி ஆதாரத்தை எப்படி திரட்டுவதுன்னு யோசிச்சப்போ, அவங்க கண்ணுக்கு முன்னாடி வந்து நின்னது மனைவியை மர்டர் பண்ணின அந்த ரவுடி கைதி தானாம். போலீசில் தவறு செய்யமாட்டேன்னு எழுதி கொடுத்த உறுதிமொழியை மீறியதால, அவருக்கு மேலும் 8 மாசம் வெளியே வரமுடியாத அளவுக்கு சிறை தண்டனை கொடுத்து இருக்காங்களாம்.

இந்த காலக்கட்டத்தை எப்படி சமாளிப்பதுன்னு முடிவு செஞ்ச அந்த ரவுடி, சிசிடிவி கேமரா வாங்கறதுக்காக ரூ.15 ஆயிரத்தை நீட்டியிருக்காரு. அதே போல இன்னொரு கைதி கொடுத்த பணத்தை எல்லாம் ஒன்னு சேர்த்த ஆபீசர்ஸ், 5 கேமராவை வாங்கி அங்கங்க பொருத்தியிருக்காங்களாம். அந்த ரவுடி கைதி ரூ.15 ஆயிரத்தை முதலீடு செஞ்சாலும், அதுக்கு மேலயே சம்பாதிச்சிடுவாருன்னு சக வார்டன்களே பேசிக்கிறாங்களாம்… இது நல்லா இருக்கே என்று சக கைதிகள் பேசிக்கிறாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘சிறையில் ஆட்டம் போட்டவரை மாற்றும் பணி நடக்குதாமே, அவரு யாரு…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மாவட்டத்தில இருக்கிற சென்ட்ரல் ஜெயில்ல பஞ்சாயத்துக்கும், பிரச்னைகளுக்கும் குறையே கிடையாது போலிருக்கு. ஜெயில்ல அடைக்க தண்டனை கைதியிடம் பணம் கேட்டும் மிரட்டும் உதவி ஜெயிலர் சுந்தரமானரும், காவலர்களான முருகனின் கையில் வேல் பெயர் கொண்டவரும், பிரேமானவர், சுரேவானவரும் சேர்ந்து தாக்கியதாக அவரது மனைவி சென்னை ஹை கோர்ட்ல மனு தாக்கல் செய்தாங்களாம். இந்த புகார் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய வெயிலூர் ஜெயில் டிஐஜிக்கு ஹை கோர்ட் உத்தரவிட்டது.

புகார் தொடர்பாக டிஐஜி விசாரித்து வருகிறாராம். சிறையில பணியாற்றும் சக காவலர்கள் மத்தியில ஏற்கனவே பிரேமானவர் மற்றும் அவரது குழுவினர் ஆட்டம் அதிகமாக இருக்கும்போது, அதிகாரிங்க யாரும் கண்டுகொள்வில்லையாம். இதனால தான் அவர்களின் விவரம் இப்போ கோர்ட் வர போயிருக்குதாம். இந்த புகாரின் பேரில் பிரேமானவர் டீம்ல இருக்கிற ஆட்களை பணியிட மாற்றம் செய்தால் தான் நன்றாக இருக்கும் என்று சிறை காவலர்களிடையே வெளிப்படையாக பேச்சு எழுந்துள்ளதாம்…’’ என்றார் விக்கியானந்தா.

The post சைலன்ட் மோடுக்கு மாறிய சின்ன மம்மி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Tags : wiki ,Yananda ,Leaf Party ,Alva ,Uncle ,Peter ,
× RELATED ரூ4 கோடி விவகாரத்தில் சொந்த கட்சி...