×

வடசென்னையில் அதிநவீனமாகும் 6 பஸ் நிலையங்கள்: திருவிக நகர், அம்பத்தூர் பேருந்து நிலையங்களை ரூ50 கோடியில் புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது

சென்னை: வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னையில் உள்ள திருவிக நகர், அம்பத்தூர் உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்கள் அதிநவீன வசதிகளுடன் தரம் உயர்த்தப்படுகின்றன. இவற்றில் அம்பத்தூர், திருவிக நகர் ஆகிய இரண்டு பேருந்து நிலையங்கள் 2024ல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர உள்ளது. சென்னையில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர், வேலைக்கு செல்வோர், பொதுமக்கள் என அனைவரும் அரசு பேருந்துகளில் கணிசமாக பயணித்து வருகின்றனர். அதன்படி, சென்னையில் இருக்கக்கூடிய பழமையான பேருந்து நிலையங்களை மறுசீரமைப்பு மற்றும் கட்டமைப்புகளை தரம் உயர்த்த சென்னை மாநகர போக்குவரத்து கழகமும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமமும் இணைந்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகின்றன.

அதன்படி, சென்னையில் குறிப்பாக, வடசென்னை பகுதியில் உள்ள சில பேருந்து நிலையங்கள் தரைகள் மற்றும் மேற்கூரைகள் சிதலமடைந்தும், கழிப்பறைகள் பாழடைந்தும் காணப்படுகின்றன. இந்த குறைகளை போக்கும்விதமாக திரு.வி.க. நகர், தண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், முல்லை நகர், பெரியார் நகர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட 6 பேருந்து நிலையங்களை அதிநவீன கட்டமைப்புகளுடனும், சகல வசதிகளுடனும் தரம் உயர்த்த பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘வடசென்னையை பொறுத்தவரை சில பேருந்து நிலையங்கள் பழமையானதை கருத்தில் கொண்டு அதனை தரம் உயர்த்த வேண்டும் என பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டிருந்தன.

அதன்படி, 6 பேருந்து நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டு அதனை உயர்தர நவீன வசதிகளுடன் கட்டமைத்து தர வேண்டும் என சிஎம்டிஏவிடம் கேட்டிருந்தோம். அதன்படி, ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பயணிகளின் வசதிகளுக்கு ஏற்ப அதற்கான பணிகள் தொடங்க உள்ளது’’ என்றார். இதுதொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் கூறியதாவது: தற்போது அமைக்கப்பட்ட உள்ள பேருந்து நிலையங்களில் தரமான மேற்கூரைகள், சோலார் தகடுகள், மிகவும் தூய்மையான கழிப்பிட வசதி, அமர்ந்திருக்கும் வசதியுடன் காத்திருக்கும் அறைகள், சுத்தமான குடிநீர் வசதி, 24 மணி நேரமும் கண்காணிக்க கூடிய வகையில் சிசிடிவி கேமரா, அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைகள் உள்பட பல்வேறு வசதிகளை மேம்படுத்துதல் திட்டத்தின் கீழ் செயல்படுத்த உள்ளோம்.

தற்போது திரு.வி.க.நகர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை நிலையங்களுக்கான டெண்டர்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளது. இதற்காக வளர்ச்சி குழுமத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ள கட்டிடக்கலை வடிவமைப்பாளர்கள் தங்கள் வரைபட பணிகளை செய்து முடித்துள்ளனர். மேலும் இந்த இரண்டு இடங்களுக்கு மட்டும் ரூ50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், விரைவில் பணிகள் முடிந்து 2024ம் ஆண்டு மக்கள் பயன்பாட்டிற்கு வரக்கூடும். இந்த நிலையங்கள் நவீனமயமாக்கல் மூலமாக வட சென்னையின் வளர்ச்சிக்கான பல திட்டங்களில் ஒன்றாக இத்திட்டமும் அடங்கும்.இவ்வாறு தெரிவித்தனர்.

The post வடசென்னையில் அதிநவீனமாகும் 6 பஸ் நிலையங்கள்: திருவிக நகர், அம்பத்தூர் பேருந்து நிலையங்களை ரூ50 கோடியில் புதுப்பிக்கும் பணி தொடங்குகிறது appeared first on Dinakaran.

Tags : North Chennai ,Tiruvik Nagar ,Ambattur ,Chennai ,Tiruvika Nagar ,
× RELATED திருவிக நகர் தொகுதியில் மக்கள்...