×

மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை: ஏடிஜிபி வனிதா பேட்டி

மதுரை: மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை என ஏடிஜிபி வனிதா தெரிவித்துள்ளார். உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவிலிருந்து ஆன்மீக சுற்றுலாவிற்காக 60க்கும் மேற்பட்டோர் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று தமிழ்நாட்டிற்கு வந்துள்ளனர். இவர்கள் நேற்று நாகர்கோவில் பத்மநாப சுவாமி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு இன்று அதிகாலையில் மதுரை வந்தடைந்தனர்.

இவர்களின் ரயில் பெட்டி மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று அதிகாலை சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

ரயில்பெட்டியில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக பயன்படுத்திய சிலிண்டரால் விபத்து நேரிட்டதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மதுரையில் தீ விபத்து ஏற்பட்ட ரயில் பெட்டியில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் தென்னக ரயில்வே முதன்மை பாதுகாப்பு அதிகாரி சோம்நாத் தலைமையிலான குழுவும் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

ரயில்வே போலீசார் சார்பில், தெற்கு ரயில்வே காவல் கூடுதல் இயக்குனர் வனிதா விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டார் . அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரையில் தீ விபத்து ஏற்பட்டு ரயில் பெட்டி எரிந்த இடத்தில் ரயில்வே ஏடிஜிபி வனிதா நேரில் ஆய்வு செய்தார். பின்னர், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ரயில் பெட்டியில் சிலிண்டர் அடுப்பில் தேநீர் போட்டுக் கொண்டிருந்தபோது தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அடுப்பு எரிப்பதற்கான விறகு, கரி உள்ளிட்டவை ரயில் பெட்டியில் இருந்தன. மதுரை ரயில் நிலையத்துக்கு முன்பாகவே ரயில் நிறுத்தப்பட்டிருந்ததால் சோதனை நடத்தவில்லை. பயணிகளை அனுப்பிவைத்த டிராவல்ஸ் நிறுவனத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஏடிஜிபி தெரிவித்தார். விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனை செய்யும் பணிகள் தொடங்கியது. பிரேத பரிசோதனை முடிந்தவுடன் 7 பேரின் உடல்கள் சென்னை கொண்டுவரப்பட்டு, விமானம் மூலம் உ.பி. அனுப்பி வைக்கப்படும்” எனக் கூறினார்.

The post மதுரையில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் சதி வேலைக்கான சாத்தியம் ஏதும் இல்லை: ஏடிஜிபி வனிதா பேட்டி appeared first on Dinakaran.

Tags : Madurai ,ADGB ,ATGB ,Vanita ,Dinakaran ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை