×

இந்த வார விசேஷங்கள்

குங்கிலியக் கலய நாயனார் குரு பூஜை
26.8.2023 – சனி

சீவமலி திருக்கடவூர்க் கலய னாராந்
திகழ்மறையோர் பணிவறுமை சிதையா முன்னே
தாலியைநெற் கொளவென்று வாங்கிக்கொண்டு
சங்கையில்குங் குலியத்தாற் சார்ந்த செல்வர்
ஞாலநிகழ் திருப்பனந்தா ணாதர் நேரே
நரபதியுந் தொழக்கச்சா னயந்து போதப்
பாலமுத முண்டாரு மரசு மெய்திப்
பரிந்தமுது செயவருள்சேர் பான்மை யாரே.

என்பது குங்கிலியக் கலய நாயனாரின் வாழ்வைச் சொல்லும் பாடல்.

காலசம்ஹார மூர்த்தி அருள் கொடுக்கும் தலம் திருக்கடவூர். அன்னை அபிராமி காட்சிதரும் தலமும் அதுவே. அட்டவீரட்டத் தலங்களில் ஒன்று. மறலியை உதைத்து மார்க்கண்டேயனின் ஆயுளைக் காத்த தலம் என்பதால் இத்தலத்தில் ஆயுள் தோஷம் நீங்கவும், அன்னை அபிராமியின் அருள் பெறவும் பலரும் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். சாந்தி ஹோமங்கள் செய்து கொள்கின்றனர்.

அங்கே அவதரித்தவர் குங்கிலியக் கலய நாயனார். குங்கிலியம் எனும் நறுமணப் பொருள் கொண்டு தூபம் இடும் திருப்பணியை தினசரி இறைவனுக்கு செய்து வந்ததால் இவருடைய இயற்பெயர் மறைந்து குங்கிலியக்கலய நாயனார் என்று அழைக்கப்பட்டார். தன்னுடைய நிலங்களையும் மற்ற பொருட்களையும் விற்று இடைவிடாது திருப்பணியைச் செய்து வந்ததால், கொஞ்சம் கொஞ்சமாக குடும்பத்தில் வறுமை சூழ்ந்தது. உணவுக்கே வழியில்லாத நிலை ஏற்பட்டது. அப்பொழுது அவருடைய மனைவி தன்னுடைய மாங்கல்யத்தைத் தந்து, இதனை விற்று உணவுப் பொருள்களைக் கொண்டு வருக என்று சொன்னார்.

அப்பொழுது வணிகன் ஒருவன் வாசனையுள்ள குங்கிலிய மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்தான். இந்த குங்கிலியப் பொதிகளை வாங்கினால் பல நாட்கள் இறைவனுக்குத் தூபம் போடலாமே என்று மகிழ்ந்து, உணவுப் பொருட்களை வாங்குவதற்காக வைத்திருந்த தாலிக்கொடியை தந்து, குங்கிலியப் பொதிகளை சுமந்து வீட்டில் சேமித்து வைத்தார். இறைவன் தொண்டு தடைப்படவில்லையே என்ற மகிழ்ச்சி இருந்தாலும் வயிற்றில் பசி வாட்டியது. ஆயினும் அதைப்பற்றி கவலைப்படாமல் ஈரத் துணியை வயிற்றில் போட்டு கொண்டு சிவ சிந்தனையுடன் உறங்கினார்.

இவருடைய வைராக்கியத்தைக் கண்ட இறைவனார் குபேரனை அழைத்து பொற்குவியலை அவருடைய வீட்டில் நிறைக்குமாறு கட்டளையிட்டார். அச்செல்வத்தை கொண்டு வறுமை நீங்கி தொடர்ந்து திருப்பணியை செய்து வந்தார். அந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி சற்று சாய்ந்தது. அரசன் மனம் கலங்கினான். கயிறு கட்டி சிவலிங்கத்தை நிமிர்த்த முயன்றான். நடக்கவில்லை. இதனை அறிந்த குங்கிலியக் கலயனார் தானே நேரில் சென்று சிவலிங்கத் திரு மேனியைக் கட்டிய கயிற்றை தன் கழுத்தில் கட்டி மிகவும் சிரமப் பட்டு இழுத்தார்.

அடியாரின் அன்புக்குக் கட்டுப்பட்ட இறைவன் அதற்கு மேலும் சாய்ந்திருக்காமல் நிமிர்ந்தார். இதனைக் கண்டு அரசன் மகிழ்ச்சி அடைந்தான். நாயனார் அங்கேயே சில நாட்கள் தங்கி திருப்பணியாற்றி விட்டு திருக்கடவூர் திரும்பினார். நாயனாரின் சிவத்தொண்டு அறிந்து, அப்பரும் ஞானசம்பந்தரும் இத்தலத்திற்கு எழுந்தருளினர். அவர்களை நன்கு உபசரித்தார். இப்படி பலவாறு சிவனுக்கும் சிவனடியார்களுக்கும் தொண்டு செய்து, நிறைவாக சிவனடி அடைந்தார். அவருடைய குருபூஜை நாள் ஆவணி மாதம் மூல நட்சத்திரம். இன்று.

மதுரையில் புட்டுத்திருவிழா
27.8.2023 – ஞாயிறு

இன்று மதுரையில் புட்டுத்திருவிழா. வைகையில் பெரும் வெள்ளம் வருகிறது. வெள்ளத்தை அடைக்க மன்னர் உத்தரவின்படி வீட்டுக்கு ஒரு நபர் மண் சுமக்க வேண்டும் என்பதால், வந்தி எனும் வயதான பாட்டி தனக்கென ஆள்யாரும் இல்லையே என்று யோசிக்கும் வேளையில் சிவபெருமான் மண் சுமக்கும் வாலிபனாக வந்து வந்தியிடம், ‘‘பாட்டி, உனக்காக நான் மண் சுமந்து போடுகிறேன், எனக்குக் கூலியாக புட்டு தருவாயா? நீ அவிக்கும் புட்டில் உதிர்ந்துள்ள புட்டெல்லாம் எனக்கு. உதிராத புட்டெல்லாம் உனக்கு, சரியா?’’ என்று கூற, வந்தியும் ஒப்புக் கொள்கிறாள்.

வந்தி அவிக்கும் புட்டெல்லாம் உதிர்ந்து கொண்டே இருக்க, அதை யெல்லாம் இவரே சாப்பிட்டு விட்டு, கரையை அடைக்க மண் சுமக்காமல் உண்ட மயக்கத்தில் அயர்ந்து தூங்கி விடுகிறார். அவ்வழியே வந்த மன்னன், கரையை அடைக்காமல் தூங்கிக் கொண்டிருப்பதால், கோபமடைந்து பிரம்பால் அடிக்கிறார். முதுகில் பிரம்படி வாங்கிய பெருமான், துள்ளி ஓடிச் சென்று ஒரு கூடையில் மண்ணை அள்ளிப்போட அதுவரை அடைக்க முடியாதவெள்ளத்துக்கு அணை போடப்பட்ட, அதிசயத்தை அனைவரும் கண்டு வியக்கின்றனர். மேலும் அனைவரது முதுகிலும் பிரம்படி தடம் இருப்பது தெரிய வருகிறது. வந்தது ஈசன்தான் என்பதை மன்னர் உட்பட அனைவரும் உணர்ந்து அவன் தாள் பணிந்து வணங்குகின்றனர். இந்த திருவிளையாடல் புராண வரலாறு இன்று உற்சவமாக மதுரையில் நடக்கிறது.

விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி
27.8.2023 – ஞாயிறு

வாமன அவதாரத்தை ஒட்டி வருகின்ற ஏகாதசி விஷ்ணு பரிவர்த்தன ஏகாதசி. இந்த ஏகாதசி திதியில் தான் பகவான் வாமன அவதாரம் எடுத்தார் என்பதால் அவசியம் எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டிய ஏகாதசி விரதம். இந்த விரதத்தை குழந்தைகள், முதியவர்கள், ஆடவர்கள், பெண்கள், பிரம்மச்சாரிகள், சம்சாரிகள், துறவிகள் என அனைவரும் அனுஷ்டிக்கலாம். இதற்கு பத்ம ஏகாதசி என்றும் ஒரு பெயர் உண்டு.

சகல பாவங்களையும் தோஷங்களையும் தூளாக்கும் ஏகாதசி விரதம் இது.
ஏகாதசி இரவு பெருமாள் ஆலயங்களுக்குச் சென்று வணங்கி, ஸ்ரீமத் பாகவதம் விஷ்ணு புராணம் முதலிய நூல்களை வாசித்து, அடுத்த நாள் துவாதசியில் தூய்மையான உணவு சமைத்து, பெருமாளுக்குப் படைத்துவிட்டுச் சாப்பிட வேண்டும். இதற்கு துவாதசி பாரணை என்று பெயர்.

விறகு விற்றருளிய லீலை மதுரை
28.8.2023 – திங்கள்

வரகுணபாண்டியனின் ஆட்சிக்காலத்தில், ஹேமநாதன் என்ற யாழ் இசை வாணன் மதுரை வந்தார். அவரை வரவேற்றார் வரகுணன், ஹேமநாதன் இசையில் வல்லவர் என்றாலும், அந்தத் திறமையே அவருக்கு அகந்தையையும் வளர்த்து விட்டிருந்தது. அவர் தன்னோடு வந்த சீடர்களை பாண்டிய நாடெங்கும் அனுப்பி, யாழ் வாசிக்கச் சொன்னார். அவர்களது இசை நாட்டு மக்களைக் கவர்ந்தது. ஹேமநாதனின் புகழ் எங்கும் பரவியது. அரசரிடமே அகந்தையோடு நடந்து கொண்டு எல்லோரையும் போட்டிக்கு அழைத்தார்.

அவ்வூரில் பாணபத்திரர் என்ற யாழிசைக் கலைஞர் இருந்தார். அவரை அழைத்த வரகுணன், “பாணபத்திரரே! இங்கே வந்துள்ள ஹேமநாதன் அகந்தை கொண்டுள்ளார். அதை அடக்க வேண்டும். அவர் முன்னால் யாழிசைக்க வேண்டும்’’ என்றான். ஹேமநாதனின் திறமை அறிந்த பாணபத்திரர் மறுத்தார். மன்னன் வற்புறுத்த இணங்கினார். மதுரை ஆலவாய் அண்ணலை வணங்கி சரணடைந்தார். ‘‘பாண்டியநாட்டின் பெருமையை உலகறியச் செய்வது உன் பொறுப்பு’’ என்று மெய்யுருகி வணங்கி விட்டு சென்று விட்டார்.

சோமசுந்தரர் விறகு வெட்டியாக வேஷம் பூண்டு மதுரை நகர தெருக்களில் அலைந்தார். விறகுக்கு அநியாய விலை சொல்லிக்கொண்டு யாருக்கும் விற்க மறுத்து, மாலை வரை நேரத்தை ஓட்டினார். பின், ஹேமநாதன் தங்கியிருந்த அரண்மனை போன்ற வீட்டுத் திண்ணையில் அமர்ந்தார். விறகு கட்டை இறக்கி வைத்து விட்டு, தன்னிடமிருந்த யாழை எடுத்து மீட்டத் துவங்கினார். ஹேமநாதனை அந்த இசை ஈர்த்தது. விறகுவெட்டியிடம் சென்ற அவர், தம்பி, நீ யாரப்பா? நீ இசைத்தால் பொருட்கள் அசைவதையும், இசையை நிறுத்தினால் உயிர்களே அசைவில்லாமல் போய் விடுவதையும் கவனித்தேன். இப்படிப்பட்ட அரிய இசையை யாரிடம் கற்றாய்? என்றார்.

‘‘ஐயா! இவ்வூரிலுள்ள யாழிசைக் கலைஞர் பணபத்திரர்தான் என் குரு அவர் மாணவர்களில் சுமாராக வாசிக்கத் தெரிந்தவன் நான் மட்டுமே…’’ ஹேமநாதர் அதிர்ந்தார். சுமாராக வாசிக்கத்தெரிந்த இந்த விறகு வெட்டியிடமே இவ்வளவு திறமை இருந்தால், குருவிடம் எந்தளவுக்கு திறமை இருக்கும் என நினைத்தவர், “பாணபத்திரருக்கு என் திறமை அனைத்தும் சமர்ப்பணம்”. என எழுதிக் கொடுத்து விட்டு சீடர்களுடன் இரவோடு இரவாக கிளம்பிச் சென்று விட்டார். அந்த லீலைதான் இன்று விழாவாக மதுரையில் நடக்கிறது.

ஓணம் பண்டிகை
29.8.2023 – செவ்வாய்

இன்று பல விசேஷம்.

1.பிரதோஷம்.
2.நடராஜரின் ஆறு அபிஷேகத்தில் ஒன்று இன்று நடைபெறுகிறது.
3.திருவோண விரதம்.
4.மஹாவிஷ்ணு வாமனராக அவதாரம் செய்த வாமன ஜெயந்தி நாள்.

சகல விஷ்ணு ஆலயங்களிலும், குறிப்பாக உலகளந்த பெருமாள் சன்னதி இருக்கக்கூடிய ஆலயங்களில், வாமன ஜெயந்தி சிறப்பாகக் கொண்டாடப்படும். வாமன அவதாரத்தை வணங்கினால் நினைத்த காரியம் நிறைவேறும். இழந்த பொருள் எதுவாயினும் திரும்பக் கிடைக்கும். பொதுவாக எந்த அவதாரத்திலும் அனுக்கிரகம், நிக்கிரகம் என்று இரண்டு நிலைகள் உண்டு. ஆனால் வாமன அவதாரத்தில் மகாபலி சக்கரவர்த்தியை அழிக்கவில்லை.

அவனுடைய அகந்தையை மட்டும் அழித்து அருள்புரிந்தார். தன்னுடைய பக்தனாக மகாபலி சக்கரவர்த்தியை மாற்றி, பாதாள உலகத்தை ஆளும்படி முடிசூட்டினார். எனவே முழுமையான அனுக்கிரகம் தரும் அவதாரமாக வாமனாவதாரம் போற்றப்படுகிறது. அதனால் ஆண்டாள் வாமனனை உத்தமன் என்னும் பெயரைச் சூட்டி அழைக்கின்றாள்.

வாமன ஜெயந்தி நாளில் வாமன காயத்ரி மந்திரம் சொல்வது சிறப்பு.

ஓம் ஸ்ரீவிக்ரமாய வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ வாமன ப்ரசோதயாத்

ஹயக்ரீவர் ஜெயந்தி
30.8.2023 – புதன்

பொதுவாக கல்விக்கு அதிபதியாக சரஸ்வதி தேவியை வணங்குகிறோம். அந்த சரஸ்வதி தேவியின் குருவாக ஸ்ரீஹயக்ரீவர் திகழ்கிறார். மது, கைடபர் என்ற அசுரர்கள், தேவர்களைத் துன்புறுத்தி வந்தனர். படைக்கும் தொழிலை வேதத்தின் துணை கொண்டு நடத்திவந்தார் பிரம்மா. இந்நிலையில் வேதத்தைத் திருடிக்கொண்டு போய் ஒளித்து வைத்துவிட்டனர் அசுரர்கள். தேவர்களால் மீட்க இயலாத வேதத்தை மகாவிஷ்ணு, ஹயக்ரீவ குதிரை முகத்துடன் மனித உருவம் தாங்கி, அசுரர்களுடன் போரிட்டு மீட்டார் என்பது ஹயக்ரீவ அவதார வரலாறு.

இன்று விரதமிருந்து ஏலக்காய் மாலை சாற்றி ஸ்ரீலட்சுமி ஹயக்ரிவ மூர்த்தியை வணங்குவதன் மூலம் கல்வியறிவை பெருகுவதோடு புத்திக் கூர்மையையும் அதிகரிக்கும். கல்வித்தடை நீங்கும். திருவஹீந்திரபுரம், செட்டிபுண்ணியம், பாண்டிச்சேரி முதலிய ஊர்களில் ஹயக்ரீவருக்கு சந்நதிகள் உண்டு. இன்று பௌர்ணமியும் கூட. காலை 10.46 முதல் நாளை வியாழன் காலை 8.17 வரை கிரிவலம் வரலாம்.

ஸ்ரீராகவேந்திரர் ஆராதனை
1.9.2023 – வெள்ளி

மகாவிஷ்ணுவின் மகா பக்தரான பிரஹலாதனின் அவதாரமாகப் போற்றப் பட்ட மகான் ஸ்ரீராகவேந்திர சுவாமி. மூன்று தத்துவங்களில் ஒன்றான துவைதத்தை (ஹரி சர்வோத்தம; வாயு ஜீவோத்தம) பரப்பியவர். ஸ்ரீராகவேந்திர சுவாமிகளின், 352வது ஆராதனை விழா இன்று நடைபெறுகிறது. புவனகிரியில் அவதரித்த அவர், மந்திராலயத்தில் ஜீவ சமாதி அடைந்தார். அவருடைய மிரித்திகா பிருந்தாவனங்கள் நாடெங்கிலும் இருக்கின்றன. அங்கு இந்த ஆராதனை விழா சிறப்பாகக்
கொண்டாடப்படும்.

தொகுப்பு: விஷ்ணுபிரியா

The post இந்த வார விசேஷங்கள் appeared first on Dinakaran.

Tags : Kungiliyak Kalaya ,Guru Pooja ,Shani Sivamali ,Thirukkadavoork Kalaya ,
× RELATED உலகளாவிய மலை வழிபாடு