×

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் தரிசனம்

*தங்க ரதத்தில் சுவாமி வீதியுலா

திருமலை : திருச்சானூர் பத்மாவது தாயார் கோயலில் வரலட்சுமி விரத பூஜையில் ஆயிரக்கணக்காகன பெண்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயில் ஆஸ்தான மண்டபத்தில் வரலட்சுமி விரத பூஜை நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. வரலட்சுமி விரதத்தையொட்டி, அதிகாலையில் மூலவருக்கு சுப்ரபாதம், சகஸ்ரநாமர்ச்சனை, நித்ய அர்ச்சனையும் பின்னர் மூலவருக்கும், உற்சவருக்கும் அபிஷேகம் நடைபெற்றது.

பின்னர், பத்மாவதி தாயார் தங்க ரதத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, பத்மாவதி தாயார் உற்சவமூர்த்தி ஆஸ்தான மண்டபத்திற்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு, பத்மபீடத்தில் கொலு வைக்கப்பட்டது. அங்கு விஷ்வக்சேனர் வழிபாடு, புண்யாஹவச்சனம், கலசஸ்தாபனம், லட்சுமி சஹஸ்ர நாமர்ச்சனை, அஷ்டோத்தர சதநாமாவளி என ரோஜா, வேப்பிலை, மல்லிகை, சம்பங்கி, துளசி, பன்னீர், மருவம், தாமரை மலர்களால் தாயாருக்கு அர்ச்சனை செய்யப்பட்டது.

இதனையடுத்து கோயில் அர்ச்சகர் நிவாசன் வரலட்சுமி விரதம் திரேதா யுகத்தில் குண்டலினி நகரில் வாழ்ந்த சாருமதி என்ற பக்தர் வரலட்சுமி நோம்பை கடைப்பிடித்ததின் மூலம் கிடைத்த பலன்களை விளக்கினார். அவ்வாறு மஹாலட்சுமி செரூபமாக திருச்சானூரில் பத்மாவதி தாயார் எழுந்தருளி அருள் பாலித்து வரும் நிலையில் இங்கு வரலட்சுமி விரதத்தில் பெண்கள் பங்கேற்பதால் கணவன் மனைவி இல்லர வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், செல்வம், ஆரோக்கியம், பல சிறந்த பலன்கள் கிடைக்கும் என்பது புராணங்கள் மூலம் அறியப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பின்னர், பத்மாவது தாயாருக்கு 12 வகையான பிரசாதங்கள் நெய்வேத்தியம் சமர்பிக்கப்பட்டு மகா மங்கள ஆரத்தியுடன் வரலட்சுமி விரதம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு தங்க ரதத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாரை பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க நான்கு மாடவீதிகளில் வலம் வந்து அருள் பாலித்தார். வரலட்சுமி விரதத்தையொட்டி தோட்டக்கலைத்துறையின் மூலம் 20 பணியாளர்கள் 2 டன் மலர்கள் மற்றும் 20 ஆயிரம் ரோஜா மலர்கள் மூலம் ஐந்து நாட்கள் பணி புரிந்து தாயார் கோயில், ஆஸ்தானமண்டபம், விரத மண்டபம் ஆகியவற்றை அலங்கரித்தனர்.

ஆஸ்தான மண்டபத்தில் அமைக்கப்பட்ட விரத மண்டபம் பக்தர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதில் வெற்றிலை, ஆப்பிள், திராட்சை, சேனைக்கிழங்கு, அன்னாசி போன்ற பழங்களும், பல்வேறு மலர்களும் விரத மண்டபத்திற்கு அழகாக வடிவமைக்கப்பட்டு இருந்தது. மண்டபத்தின் மேல் ரோஜா, தாமரை போன்ற வண்ண மலர்களாலும் பிரமாண்டமாக அலங்கரிம் செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்தவர் அளித்த நன்கொடையில் மலர் அலங்காரம் செய்யப்பட்டதாக தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் னிவாசலு தெரிவித்தார்.

பக்தர்கள் அனைவரும் வரலட்சுமி விரதத்தை தரிசிக்கும் வகையில் ஆஸ்தான மண்டபத்தில் 2, புஷ்கரிணியில் 1, கங்குந்திரா மண்டபத்தில் 1 உட்பட 4 எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அறங்காவலர் குழு தலைவர் பூமண கருணாகர் தம்பதி, இணை செயல் அதிகாரிகள் சதா பார்கவி, வீரபிரம்ம தம்பதி, திருப்பதி நகராட்சி ஆணையர் ஹரிதா, எஸ்.வி.பி.சி. சி.இ.ஒ. சண்முக் குமார், கோயில் துணை செயல் அதிகாரி கோவிந்த ராஜன், ஏ.இ.ஒ. ரமேஷ், அர்ச்சகர்பாபு சுவாமி, கண்காணிப்பாளர் மதி வாணி, அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

The post திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலில் வரலட்சுமி விரத பூஜையில் ஆயிரக்கணக்கான பெண்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Varalakshmi ,Padmavathi temple ,Thiruchanur ,Swami Vethiula Tirumala ,Thiruchanur Padmavath Mother Temple ,Varalakshmi Vrat ,Thiruchanur Padmavati ,Temple ,
× RELATED நந்தீஸ்வரர் கோயில் வளாகத்தில் ரூ.1.12...