×

பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்

*பெற்றோர் அமோக வரவேற்பு

பொள்ளாச்சி : தமிழ்நாடு அரசு துவக்க பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் நோக்கத்தில், அரசு துவக்க பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதியன்று, முதல்வர் மு.க.ஸ்டாலின், மதுரையில் துவக்கி வைத்தார்.இந்த திட்டம் தற்போது விரிவுப்படுத்தி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதன்படி, அரசு துவக்க பள்ளிகளில், முதலமைச்சரின் காலை உணவு திட்டமானது நேற்று முதல் துவங்கப்பட்டது. பள்ளி நாட்களில் வெவ்வேறு நாட்களில் தினமும் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, கய்காறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் வழங்கப்படுகிறது.இதில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி கல்வி மாவட்டத்திற்கு உட்பட்ட நகர் மற்றும் கிராமபுறங்களில் உள்ள பள்ளிகளில் 1 முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு, கற்றல்திறன் மேம்பட காலை உணவு வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.

இதில், பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட நேதாஜி ரோட்டில் உள்ள அரசு துவக்க பள்ளியில் நேற்று தமிழ்நாடு அரசின் காலை உணவு திட்ட செயல்பாடு துவக்கப்பட்டது. இதற்கு, வருவாய் கோட்ட உதவி கலெக்டர் பிரியங்கா தலைமை தாங்கினார். ஆணையாளர் ஸ்ரீதேவி முன்னிலை வகித்தார். கவுன்சிலர் கந்தமனோகரி வரவேற்று பேசினார். நகர கழக துணை செயலாளர் தர்மராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நகர்மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு, 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கான, காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்தார். மேலும், நகர்மன்ற தலைவர் மற்றும் அதிகாரிகள் பலரும், பள்ளி மாணவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினர். அதுபோல், பொள்ளாச்சி வடக்கு, தெற்கு, ஆனைமலை ஊராட்சி ஒன்றிய பள்ளிகளிலும், நேற்று முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. அதிலும் கிராமபுற மாணவர்களுக்கு காலை உணவு திட்டத்தை செயல்படுத்திதற்கு, மாணவர்களின் பெற்றோர் அமோக வரவேற்பு அளித்து மகிழ்ச்சியடைந்ததுடன், அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

The post பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Animalai Thaluga Government Schools ,Pollachi ,Amoka Reception ,Tamil ,Dinakaran ,
× RELATED பொள்ளாச்சியில் ஓய்வுபெற்ற பெண் கும்கி யானை உயிரிழப்பு..!!