*22,712 பள்ளி மாணவ, மாணவியர் பயன்
*எம்எல்ஏக்கள், கலெக்டர் தொடங்கி வைத்தனர்
கம்பம்/தேனி : கிராமப் பகுதிகளிலும், நகரப் பகுதிகளிலும், பள்ளி செல்லும் குழந்தைகள் காலையிலேயே புறப்பட்டு விடுவதால் பெரும்பாலான குழந்தைகள் காலை உணவு சாப்பிடுவது இல்லை என்ற தகவல் கிடைக்கப்பெற்றதன் காரணமாக அரசுப் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலக்கூடிய தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அனைத்துப் பள்ளி நாட்களிலும் காலை வேளையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 7.5.2022 அன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்கள் விதி 110&ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.
நாட்டிலேயே முன்னோடி திட்டமான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை 15.09.2022 அன்று மதுரை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி முதலமைச்சர் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில், இத்திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் ரூ.33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1,545 பள்ளிகளில் தொடங்கப்பட்டு, 1,14,095 மாணவர்கள் பயன்பெறுமாறு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது.
இதில் தேனி மாவட்டத்தில் முதற்கட்டமாக 15.09.2022 அன்று கடமலைக்குண்டு ஊராட்சி ஒன்றிய பகுதியில் மட்டும் 51 தொடக்கப்பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலுகின்ற 2633 மாணவ, மாணவியர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டு இத்திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 20.03.2023 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டன்ற பேரவை கூட்டத்தொடரில் காலை உணவுத்திட்டத் தினை மேலும் 1937 தொடக்கப் பள்ளிகளில் விரிவாக்கம் செய்யப்படும் என அறிவித்தார்கள்.அதன்படி தமிழ்நாட்டில் 31,008 அரசு பள்ளிகளில் பயிலும் 15,75,000 மாணவர்கள் பயன்பெறும் வகையில், முதலமைச்சரின் காலை உணவு திட்டம் நேற்று மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் விரிவுபடுத்தப்பட்டது.
இதன்படி தேனி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 310 பள்ளிகளில் பயிலும் 16,173 மாணவ, மாணவியர்களும் ஊரக பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 52 பள்ளிகளில் பயிலும் 2467 மாணவ, மாணவியர்களும், நகராட்சி பகுதிகளில் 40 பள்ளிகளில் பயிலும் 2106 மாணவ, மாணவியர்களும், நகர் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 24 பள்ளிகளில் பயிலும் 1966 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 426 பள்ளிகளில் பயிலும் 22,712 மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில் காலை உணவு திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது.
கம்பத்தில், நகராட்சி முகைதீன் ஆண்டவர்புரம் நகராட்சி தொடக்கப்பள்ளியில் கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா காலை உணவுத்திட்டத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர்கள் மதுமதி (ஊரக வளர்ச்சி முகமை), ரூபன் சங்கர்ராஜ் (மகளிர் திட்டம்), உத்தமபாளையம் கோட்டாட்சியர் பால்பாண்டி, முதன்மை கல்வி அலுவலர் இந்திராணி, கம்பம் நகராட்சி ஆணையர் வாசுதேவன், பொறியாளர் ஐயனார், திமுக மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு இணைச்செயலாளர் இரா.பாண்டியன், மாவட்ட துணை செயலாளர் குரு இளங்கோ, மற்றும் திமுக மாநில, மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு பொறுப்பாளர்கள், நகர்மன்ற உறுப்பினர், பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதையடுத்து எம்எல்ஏ ராமகிருஷ்ணன், கலெக்டர் ஷஜீவனா, நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், துணைத்தலைவர் சுனோதா செல்வகுமார் மாணவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டனர்.
இதேபோல் தேனி அல்லிநகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தினை பெரியகுளம் எம்எல்ஏ சரவணக்குமார், தேனி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் துவக்கி வைத்தனர். இதில் தேனி நகர் மன்றத் தலைவர் ரேணுப்பிரியாபாலமுருகன், நகர்மன்றத் துணைத் தலைவர் வக்கீல்.செல்வம், தேனி நகர திமுக செயலாளர் நாராயண பாண்டியன், முன்னாள் நகர திமுக பொறுப்பாளர் பாலமுருகன், நகராட்சி ஆணையர் கணசேன் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ஆண்டிபட்டி எம்எல்ஏ மகாராஜன் தெப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், நகர செயலாளர் சரவணன், ஆண்டிபட்டி பேரூராட்சி மன்ற தலைவர் சந்திரகலா, துணை தலைவர் ஜோதி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
எம்எல்ஏ ராமகிருஷ்ணன் பேசுகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாணவ மாணவியர்கள் பசியின்றி பள்ளிக்கு வருதல், ஊட்டச்சத்து குறைபாட்டினை போக்கிடவும், ஊட்டச்சத்து நிலையை உயர்த்துதல், பள்ளிகளில் மாணவர்களின் வருகையை அதிகரித்தல். கற்றல் இடைநிற்றலைத் தவிர்த்திடும் பொருட்டு வேலைக்குச் செல்லும் தாய்மார்களின் பணிச்சுமையை குறைத்தல் மாணவ, மாணவியர்களின் கல்வியினை ஊக்கப்படுத்திட ஆகியவற்றை முக்கிய குறிக்கோளாகக் கொண்டு இந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது, என்றார்.
மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பேசுகையில், தேனி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 310 பள்ளிகளில் பயிலும் 16,173 மாணவ, மாணவியர்களும் ஊரக பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 52 பள்ளிகளில் பயிலும் 2467 மாணவ, மாணவியர்களும், நகராட்சி பகுதிகளில் 40 பள்ளிகளில் பயிலும் 2106 மாணவ, மாணவியர்களும், நகர் பகுதிகளை ஒட்டியுள்ள பேரூராட்சி பகுதிகளில் 24 பள்ளிகளில் பயிலும் 1966 மாணவ, மாணவியர்களும் என மொத்தம் 426 பள்ளிகளில் பயிலும் 22,712 மாணவ, மாணவியர்கள் இந்த காலை உணவு திட்டத்தால் பயன்பெறுவர், என்றார்.
ஏழைக் குழந்தைகளுக்கு மகத்தான திட்டம்
காலை உணவுத் திட்டத்திற்கான அரசாணை வெளியிட்ட அன்று முதலமைச்சர் ஸ்டாலினின் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு, எண்ணற்ற மக்கள் நலத் திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்ட போதிலும், இந்த காலை உணவுத் திட்டத்திற்கான கோப்பில் கையெழுத்திட்டபோது எனக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. பள்ளிக்கல்வியை மேலும் பரவலாக்குவது, கற்றலை இனிமையாக்குவது என்ற நோக்கத்தில் இந்த “முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்” முக்கியமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதிலும், ஏழைக் குழந்தைகளின் வாழ்க்கையில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதிலும் சந்தேகம் இல்லை.
சுவையான, தரமான உணவுகள்
காலை உணவுத்திட்டத்தில் திங்கள் கிழமை ரவா உப்புமாவுடன் காய்கறி சாம்பார், செவ்வாய் கிழமை ரவா காய்கறி கிச்சடியுடன் காய்கறி சாம்பார், புதன்கிழமை வெண்பொங்கலுடன் காய்கறி சாம்பார், வியாழக் கிழமை அரிசி உப்புமாவுடன் காய்கறி சாம்பார், வெள்ளிக் கிழமை சேமியா காய்கறி கிச்சடியுடன் காய்கறி சாம்பார் வழங்கப்படும். இந்த காலை உணவுத்திட்டத்தினை சுய உதவிக்குழுக்களை சார்ந்த பெண்கள் தயாரிக்கின்றனர். இவர்கள் காலை 6.00 மணிக்கு பணிகளை தொடங்கி 8.15 மணிக்குள் உணவுகளை தயார் செய்யவார்கள். மாணவ, மாணவியருக்கு காலை 8.30 மணியிலிருந்து 9.00 மணிக்குள் சுவையான மற்றும் தரமான உணவுகள் பரிமாறப்படும்.
The post தேனி மாவட்டத்தில் காலை உணவுத்திட்டம் 426 பள்ளிகளில் விரிவாக்கம் appeared first on Dinakaran.

