×

3 குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்ற மசோதா ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

சென்னை: மூன்று குற்றவியல் சட்டங்களின் பெயர்களையும், சட்ட பிரிவுகளையும் மாற்றம் செய்து மறுசீரமைக்கும் ஒன்றிய அரசின் நடவடிக்கையை கண்டித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றம் செய்தும், இந்திய சட்ட பிரிவுகளில் மாற்றம் செய்தும் ஒன்றிய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல் செய்தது. இதற்கு நாடெங்கிலும் வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்றங்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஒன்றிய அரசின் இந்த ெசயலை கண்டித்தும் அந்த சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் சென்னை உயர் நீதிமன்ற ஆவின் நுழைவாயில் முன்பு, ஜனநாயக வழக்கறிஞர்கள் மையம், உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், திமுக எம்.பி. இரா.கிரிராஜன், வழக்கறிஞர்கள் ஏ.அருள்மொழி, விஜயகுமார், பார்கவுன்சில் உறுப்பினர் எம்.வேல்முருகன் உள்ளிட்டோர் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். அப்போது, ‘இந்தியா’ என்ற பெயரில் வெறுப்புணர்வை காட்டவே ஒன்றிய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.

இது அரசியலமைப்புக்கு எதிரானது என்று வழக்கறிஞர்கள் கண்டன குரல் எழுப்பினர். அப்போது திமுக எம்பி இரா.கிரிராஜன் பேசும்போது, ஏற்கனவே தமிழ்நாடு -புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பினர் தமிழ்நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் தொடர் முழக்க போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தின் மிக பழமையான வழக்கறிஞர் சங்கமான மெட்ராஸ் பார் அசோசியேசனும் மூன்று சட்டங்களின் பெயரை மாற்றி மறுசீரமைக்கும் ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த மசோதாவை திரும்ப பெறும்வரை போராட்டம் தொடரும் என்றார்.

The post 3 குற்றவியல் சட்டங்களின் பெயர் மாற்ற மசோதா ஒன்றிய அரசை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Union government ,Chennai ,Dinakaran ,
× RELATED 2ஜி தீர்ப்பில் தெளிவு தேவை என்ற...