×

கருவிகள் செயல்பட தொடங்கியது நிலவில் 8 மீட்டர் பயணித்த ரோவர்: இஸ்ரோ தகவல்

சென்னை: நிலவில் இறங்கிய ரோவர் 8 மீட்டர் பயணித்துள்ளதாகவும், ரோவரின் கருவிகள் செயல்பட தொடங்கியுள்ளதாகவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக கடந்த ஜூலை 14ம் தேதி எல்எம்வி 4 ராக்கெட் மூலம் சந்திரயான் 3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டு புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது. இதை தொடர்ந்து புவி வட்ட பாதை மற்றும் நிலவின் சுற்றுவட்ட பாதைகளில் சரியாக பயணித்து. முக்கிய கட்டமாக கடந்த 17ம் தேதி உந்துவிசை கலனில் இருந்து லேண்டர் தனியாக பிரிந்து தனது பயணத்தை மேற்கொண்டு கடந்த 23ம் தேதி மாலை 6 மணியளவில் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

நிலவில் தரையிறக்கப்பட்ட லேண்டரில் உள்ள கருவிகள் பிரத்யேகமான சோதனைகளை தரையிறக்கப்பட்ட இடத்தில் மேற்கொள்ளும். இந்நிலையில் ரோவரை நிலவில் இறக்கி விட இரவு 10 மணியளவில் லேண்டரில் உள்ள 4 பக்கங்களில் ஒரு பக்கம் மட்டும் மெதுவாக திறந்து மிகுந்த கவனத்துடன் நிதானமாக நிலவில் சாய்வு தளம் ஏற்படுத்தப்பட்டது. லேண்டரில் இருந்த ரோவர் மிகவும் நிதானமாக சாய்வு தளத்தில் நிலவில் தரையில் இறக்கப்பட்டது. இதையடுத்து ரோவர் நிலவில் தனது பயணத்தை தொடங்கியது. நிலவில் இறங்கிய ரோவர் 8 மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரோ வெளியிட்ட டிவிட்டர் பதிவு: ரோவரின் அனைத்து திட்டமிடப்பட்ட நகர்வுகளும் சரி பார்க்கப்பட்டது. ரோவர் வெற்றிகரமாக 8 மீட்டர் தூரம் பயணித்துள்ளது. ரோவரில் உள்ள லிப்ஸ் மற்றும் ஏபிஎக்ஸ்எஸ் கருவிகள் செயல்பட தொடங்கியது. உந்துவிசை கலன், லேண்டர், ரோவரில் உள்ள அனைத்து கருவிகளும் சரியாக செயல்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் நிலவில் தரையிறக்கப்பட்டுள்ள விக்ரம் லேண்டரை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் படம் எடுத்துள்ளது.

இதைத்தவிர லேண்டரில் இருந்து ரோவர் இறங்குவதற்காக லேண்டரின் கதவுகள் திறக்கப்பட்டது. மேலும் லேண்டரில் இருந்து ரோவர் நிலவில் தரையிறங்கிய விடியோக்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. ரோவரில் செயல்பட தொடங்கிய 2 கருவிகள் நிலவின் வளிமண்டலம் மற்றும் நிலவின் தரைப்பரப்பில் இருக்கும் ரசாயன கலவை மற்றும் கனிமங்கள் கலவை குறித்தும், நிலவின் பரப்பில் உள்ள மண் மற்றும் கற்களில் உள்ள அலுமினியம், மெக்னீசியம், பொட்டாசியம், சிலிகான், இரும்பு ஆகியவற்றின் ரசாயன கூறுகள் கலவை மற்றும் அளவு குறித்து ஆய்வு செய்யும்.

The post கருவிகள் செயல்பட தொடங்கியது நிலவில் 8 மீட்டர் பயணித்த ரோவர்: இஸ்ரோ தகவல் appeared first on Dinakaran.

Tags : Isro ,Chennai ,South of the Moon ,ISRO Info ,
× RELATED இந்தியாவில் வெப்ப அலையின் தாக்கம்...