×

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு

சென்னை: தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளனர். தங்கம், வெள்ளி, வெண்கலம் வெல்வோருக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பாக சர்வதேச மற்றும் தேசிய அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறும் விளையாட்டு வீரர்களுக்கு உயரிய ஊக்கத் தொகை வழங்கிட 2019-ஆம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. அந்த அரசாணையில் பின்வரும் போட்டிகளான ஒலிம்பிக் போட்டிகள், உலகக் கோப்பை போட்டிகள், காமன் வெல்த் போட்டிகள், ஆசிய போட்டிகள், தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள், அகில இந்திய பல்கலைகழங்களுக்கிடையேயான போட்டிகள் மற்றும் தேசிய அளவிலான போட்டிகள் இடம் பெற்றிருந்தன.

தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகை வழங்கும் பிரிவு இடம் பெறவில்லை. தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகளுக்கு உயரிய ஊக்கத்தொகைகள் வழங்கப்படாத குறையினை கண்டறிந்து அதனை களைய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்லும் மாற்றுத் திறனாளி வீரர், வீராங்கனைகள் மூத்தோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.5 லட்சம், ரூ.3 இலட்சம் மற்றும் ரூ.2 லட்சம் எனவும் இளையோர் பிரிவில் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கம் வெல்பவருக்கு உயரிய ஊக்கத்தொகைகள் முறையே ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் மற்றும் ரூ.1.50 லட்சம் எனவும் வழங்குவதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

 

The post தேசிய அளவிலான போட்டிகளில் பதக்கம் வெல்லும் மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு ஊக்கத்தொகையை உயர்த்தி அரசாணை வெளியீடு appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...