×

இமாச்சல பிரதேசத்தில் மாண்டி மாவட்டத்தில் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 51 பேர் மீட்பு

இமாச்சல பிரதேசம்: இமாச்சல பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் வெள்ளப்பெருக்கில் சிக்கிய 51 பேரை தேசிய பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டுள்ளனர். இமாச்சல பிரதேச மாநிலம் மாண்டி, குளு, சிம்லா, உனா, சோலன் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த ஒரு மாதமாக மீண்டும் மேகவெடிப்பு ஏற்பட்டு பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது.

மாண்டி மாவட்டத்தில் அதி கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பொதுமக்கள் 51 பேர் சிக்கி கொண்டனர். அவர்களை பேரிடர் மீட்பு படையினர் கயிறு கட்டி பத்திரமாக மீட்டுள்ளனர். இமாச்சலில் உள்ள குளு மாவட்டத்திலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அண்மையில் பெய்த கனமழையில் குளு மாவட்டத்தில் மட்டும் 2,237 வீடுகள் முற்றிலும் இடிந்து தரைமட்டமாகி விட்டன. 9,924 கடைகள் பாதி இடிந்து விட்டன. இவற்றுடன் 4,783 மாட்டு கொட்டகைகள் சேதமடைந்துள்ளன.

வீடுகளை இழந்து நிர்கதியாக நிற்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று கனமழை பெய்த நிலையில் இன்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழைக்கான மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் முதல் இன்றைய நாள் வரை இமாச்சலில் 80 செ.மீ. மழை பெய்துள்ளது. இது வழக்கத்தை விட 41% அதிகமாகும். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து பெய்து வரும் கனமழையில் சிக்கி 238 பேர் மரணமடைந்துள்ளனர்.

The post இமாச்சல பிரதேசத்தில் மாண்டி மாவட்டத்தில் மேகவெடிப்பால் வெள்ளப்பெருக்கு: காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய 51 பேர் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Mandi district ,Himachal Pradesh ,Himachal Territoria ,Dinakaran ,
× RELATED நடிகை கங்கனாவுக்கு எதிராக முன்னாள்...