×

மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளும் அசாமுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

டெல்லி: மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக, சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளும் அசாமுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மணிப்பூரில் இரு சமூகங்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்தது. கிட்டத்தட்ட 3 மாத காலமாக நீடித்த இந்த வன்முறையில் 160க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். உயிருக்குப் பயந்து ஏராளமானோர் ஊரை காலி செய்து வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர். உள்கட்டமைப்புகள் கடுமையாக சேதமடைந்துள்ள நிலையில், தொடர்ந்து பதற்றம் நீடிக்கிறது.

இந்த வன்முறை உச்சத்தில் இருந்தபோது நடந்த பாலியல் வன்கொடுமைகள், படுகொலைகள் தொடர்பான தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக 2 பெண்களை ஆடையின்றி மானபங்கம் செய்தபடி ஊருக்குள் இழுத்து வந்தது தொடர்பான வீடியோ கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து மணிப்பூரில் பெண்களை நிர்வாணமாக இழுத்து பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக, சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளும் அசாமுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் இன்று வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, மணிப்பூர் மாநிலத்தின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மணிப்பூரில் வழக்கை விசாரிக்கக்கூடிய நீதிபதிகள், ஏதேனும் ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்தவராக இருப்பதால், வழக்கு விசாரணை நேர்மையாக நடைபெறாது என்ற கருத்து நிலவுகிறது. மேலும் குற்றவாளிகளை ஆஜர்படுத்துவது போன்ற பல்வேறு விவகாரங்களில் பாதுகாப்பு சிக்கல் உள்ளதால் இந்த வழக்கை அண்டை மாநிலமான கவுஹாத்திக்கு மாற்றுவது சிறப்பானதாக இருக்கும் என யோசனை தெரிவித்தார்.

தொடர்ந்து, மனுதாரர்களான பழங்குடியினர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், சிபிஐ வழக்குகள் அசாமுக்கு மாற்றப்பட்டால் மொழி சிக்கல் ஏற்படும் என ஆட்சேபம் தெரிவித்தனர். இருப்பினும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் பரிந்துரையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், வழக்குகளை அசாம் மாநிலத்திற்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. நியாயமான விசாரணையை உறுதி செய்ய வழக்கு வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

மணிப்பூர் மாநிலத்தின் ஒன்று அல்லது 2 மொழிகளை தெரிந்த நீதிபதியை, கவுஹாத்தி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி நியமிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் பயணம் செய்வதில் உள்ள சிக்கல்களை கருத்தில் கொண்டு, தொடர்புடைய குற்றம் சாட்டப்பட்டவர்களை காணொலி வாயிலாக ஆஜர்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நியாயமான விசாரணையை உறுதி செய்ய பாதிக்கப்பட்டவர்களுக்கும், சாட்சிகளுக்கும் உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

The post மணிப்பூர் பாலியல் வன்முறை தொடர்பாக சிபிஐ விசாரித்து வரும் 21 வழக்குகளும் அசாமுக்கு மாற்றம்: சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : CPI ,Delhi ,Supreme Court ,Manipur ,Assam ,CBI ,Dinakaran ,
× RELATED மணல் குவாரி வழக்கில் தேவையில்லாமல்...