×

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்கள்.  இதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சி, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் தேனாம்பேட்டை மண்டலம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களும், சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில், கோடம்பாக்கம் மண்டலம், மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களும், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதி, வி.க.நகர் மண்டலம், மடுமாநகர் சென்னை நடுநிலைப் பள்ளியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்களும் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக, மதுரை, ஆதிமூலம் மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் 15.09.2022 அன்று தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட மாதவரம் மண்டலம், சென்னை தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் அமைச்சர் பெருமக்களால் 16.09.2022 அன்று தொடங்கி வைக்கப்பட்டு, முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் இராயபுரம் ஆகிய மண்டலங்களில் உள்ள 37 சென்னை தொடக்கப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 5,941 மாணவ, மாணவியர்கள் பயன்பெற்று வந்தனர்.

இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் எர்ணாவூர், ஆல் இந்தியா ரேடியோ நகர் (மேற்கு) சென்னை தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 62 மாணவ/மாணவியருக்கு காலை உணவு வழங்கிடும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 01.02.2023 முதல் 38 சென்னை தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் இராயபுரம் ஆகிய மண்டலங்களில் 6 மைய சமையற்கூடங்கள் மூலமாக காலை உணவு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை தமிழ்நாடு மாநிலம் முழுவதும் அனைத்து அரசுப் பள்ளிகளில் விரிவாக்கம் செய்திடும் வகையில், இன்று (25.08.2023) நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் தொடங்கி வைத்ததைத் தொடர்ந்து, பெருநகர சென்னை மாநகராட்சியில் அமைச்சர் பெருமக்களால் சென்னை பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்தத் திட்டத்தின் மூலம் பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சென்னை தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என மொத்தம் 358 பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 65,030 மாணவ/மாணவியர் கூடுதலாக பயன்பெறுவர். இத்திட்டத்திற்கு 35 மைய சமையற்கூடங்களில் இருந்து காலை உணவு தயாரிக்கப்பட்டு, அதற்கான வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு காலை உணவு கொண்டு செல்லப்படும். சென்னை பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு திங்கட்கிழமை – காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா உப்புமா / சேமியா உப்புமா / அரிசி உப்புமா / கோதுமை ரவை உப்புமா; செவ்வாய்க்கிழமை – காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா காய்கறி கிச்சடி / சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி; புதன்கிழமை-காய்கறி சாம்பாருடன் கூடிய ரவா பொங்கல் / வெண்பொங்கல்; வியாழக்கிழமை-காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா உப்புமா / அரிசி உப்புமா / ரவா உப்புமா / கோதுமை ரவை உப்புமா; வெள்ளிக்கிழமை-காய்கறி சாம்பாருடன் கூடிய சேமியா காய்கறி கிச்சடி / சோள காய்கறி கிச்சடி / ரவா காய்கறி கிச்சடி / கோதுமை ரவை கிச்சடி ஆகியவை மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கிய அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு appeared first on Dinakaran.

Tags : Ministers ,Udhayanidhi Stalin ,Ma. Subramanyan ,B. K.K. Segarbabu ,Chennai ,Tamil Nadu ,Chief Minister ,
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...