×

பொது பாதையை அடைத்ததால் கிராமமக்கள் தர்ணா போராட்டம்

திருச்சுழி, ஆக.25: காரியாபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு நூறு ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப்பாதையை மக்கள் பயன்படுத்தி வந்தனர். பாதைக்கு சிலர் உரிமை கோரியதால் இருதரப்பினர் இடையே பிரச்சனை உருவானது. இதனால் இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடினர். நீதிமன்றம் பாதையை தனி நபர்கள் தடைசெய்யக்கூடாது என உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவின் படி வருவாய்த்துறை மற்றும் காவல்துறை பாதுகாப்புடன் தற்காலிகமாக பாதை போடப்பட்டது. இந்நிலையில் சாலை யை தனிநபர்கள் டிராக்டர் வைத்து உழுது சேதப்படுத்தி விட்டனர். மேலும் அந்தப் பகுதியில் யாரும் செல்ல முடியாத அளவிற்கு முள்வேலி அமைத்துள்ளனர்.

இதனால் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கிராமமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் நேற்று காரியாபட்டி தாலுகா அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பாதையை சேதப்படுத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தாசில்தார் சுப்பிரமணியத்திடம் மனு கொடுத்தனர். இதனைப் பெற்ற தாசில்தார் நில அளவை செய்து பாதை சரி செய்து தரப்படும் என உறுதியளித்தார். இதனையடுத்து பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

The post பொது பாதையை அடைத்ததால் கிராமமக்கள் தர்ணா போராட்டம் appeared first on Dinakaran.

Tags : Dharna ,Tiruvukshi ,A.25 ,Pichampatti ,Gariyapatti ,Tarna ,
× RELATED எஸ்ஐ கர்ப்பமாக்கியதாக பெண் போலீஸ் தர்ணா