×

தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் ஆங்கிலத்தில் பேசி அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்

 

காரைக்கால்,ஆக.25: காரைக்கால் மாவட்ட அரசு பள்ளி மாணவர்கள், எளிமையாக, ஆங்கில வாசிப்பு கற்க காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் முயற்சியால் திஷா என்ற தன்னார்வ இயக்கம் மற்றும் இ.எல்.எப் இங்கிலிஷ் என்ற நிறுவனத்துடன் இணைந்து அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஆங்கிலம் வாசிப்பு திட்டம் கடந்த ஜூலை மாதம் தொடங்கப்பட்டது. அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு, ஆங்கிலம் கற்றலின் மேலுள்ள பயத்தை நீக்கி, தன்னம்பிக்கை மற்றும் ஆர்வத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் காரைக்கால் மாவட்டத்தில், நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்காக 84 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் 2,447 மாணவ மாணவிகள் பயன் பெரும் வகையில் அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி முகாம் 80 நாட்களுக்கு நடத்தப்பட்டது.

திஷா மற்றும் இ.எல்.எப் ஆங்கிலம் நிறுவனத்தின் மூலம் 4 மற்றும் 5ம் வகுப்பு அந்தந்த பள்ளி ஆங்கில ஆசியர்களுக்கு ஆங்கில வீடியோ பாடங்கள், கற்றல் பொருட்கள் கொண்டு பள்ளி மாணவர்களுக்கு எளிமையாக ஆங்கிலம் எப்படி கற்பிப்பது, பேசுவதும், ஆங்கிலம் கற்றல் எளிமையாக இருக்க பயிற்சிகள் அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது பயிற்சி பெற்ற ஆங்கில ஆசிரியர்கள் அந்தந்த பள்ளிகளில் தாங்கள் கற்ற ஆங்கிலம் வாசிப்பு மற்றும் கற்பிக்கும் திறனை மாணவர்களிடையே கற்பித்து வருகின்றனர். இதனால் முன்பை விட சுலபமாக ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆங்கில மொழியை எளிதாக கற்பிக்கின்றனர்.

இதே போல் அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் என்பது அறிந்து கொள்ள முடியாத பாடம் என்ற இருந்த நிலையில் 4ம் வகுப்பு மாணவன் கூட சர்வ சாதரணமாக சிபிஎஸ்இ பாட புத்தக ஆங்கில பாடத்தை அற்புதமாக படித்தும், தன்னுடன் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கும் கற்பித்து வருவது மகிழ்ச்சியாக உள்ளது என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து பயிற்சி பெற்ற பள்ளி ஆசிரியர்கள் கூறுகையில், மாணவர்களுக்கு சிபிஎஸ்இ பாடத்திட்டம் என்பதால் ஸ்மார்ட் வகுப்புகள் கொண்டு எளிதாக பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம் வாசிப்பு திட்டத்தை செயல்படுத்த முடிகிறது.மாணவர்கள் பள்ளியில் இருக்கும் நேரம்,வீட்டில் தங்களது பெற்றோரோடு உரையாடல்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் இருப்பது தனியார் பள்ளி மாணவர்களை மிஞ்சும் வகையில் இருப்பதாக பெற்றோர்கள் தெரிவிப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

மேலும் மாணவர்கள் சரளமாக ஆங்கிலம் பேசி கற்பிக்க தீவிர நடவடிக்கையில் ஈடுபட்ட கலெக்டர் குலோத்துங்கன் வெற்றி பெற்றுவிட்டார் என ஆசிரியர்கள் பாராட்டி வருகின்றனர்.
முதலமைச்சரின் காலை உணவு விரிவாக்கும் திட்டம் திருக்குவளையில் கலைஞர் படித்த பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற நாளில் இருந்து தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகிறார். அரசு தொடக்கப் பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் படிப்பை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், வருகை பதிவேட்டை அதிகரித்து கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் காலை உணவு திட்டம் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டது.

இதில் முதற்கட்டமாக 1,545 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வந்த காலை உணவு திட்டம், இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளிலும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. அதன்படி இன்று (25ம்தேதி) காலை 8.30 மணிக்கு நாகை மாவட்டம் திருக்குவளையில் முன்னாள் முதல்வர் கலைஞர் தொடக்க கல்வி பயின்ற திருக்குவளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு மாணவர்களுக்கு காலை உணவாக கிச்சடி, சாம்பார், சர்க்கரை பொங்கல் வழங்கப்படுகிறது. இத்திட்டம் முதல் முதலாக தொடங்கப்படுவதால், பொங்கலும் சேர்த்து வழங்கப்படுகிறது. அதை தொடர்ந்து கலைஞர் இல்ல வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான பந்தலில் மகளிர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடுகிறார்.

பின்னர் கலைஞர் பிறந்த இல்லத்திற்கு செல்லும் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலைஞரின் தந்தை முத்துவேலர், தாய் அஞ்சுகம் அம்மையார், முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறன் ஆகியோரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துகிறார். இந்த காலை உணவு திட்டத்தை எம்பி மற்றும் எம்எல்ஏக்கள் அவரவர் தொகுதியில் உள்ள ஏதேனும் ஒரு அரசு தொடக்க பள்ளியில் தொடங்கி வைத்து சிறப்பிக்க வேண்டும் என்று, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், நாட்டிற்கே முன்னோடியாய், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற பகுதிகள் மற்றும் ஊரக பகுதிகளில் உள்ள 31,008 அரசு தொடக்கப் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் மூலம் 15.75 லட்சம் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறுகின்றனர்.

The post தனியார் பள்ளிகளை மிஞ்சும் வகையில் ஆங்கிலத்தில் பேசி அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள் appeared first on Dinakaran.

Tags : Karaikal ,Karaikal district ,Collector ,Kulothungan ,Dinakaran ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...