×

ஊட்டியில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

 

ஊட்டி, ஆக.25: ஊட்டி கலெக்டர் அலுவலகம் முன்பு அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் விடுபடாமல் அடையாள அட்டை வழங்க கோரி ஆர்ப்பாட்டம் நடந்தது. சிஐடியு நீலகிரி மாவட்ட சாலையோர வியாபாரிகள் சங்கம் சார்பில் ஊட்டி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு சாலையோர வியாபாரிகள் சங்க தலைவர் ரவிக்குமார் தலைமை வகித்தார். இதில், சாலையோர வியாபாரிகளை விடுபடாமல் கணக்கிட்டு அனைத்து வியாபாரிகளுக்கும் முகவரியுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். வெண்டிங் கமிட்டி தேர்தலை நேர்மையான முறையில் நடத்திட வேண்டும்.

சாலையோர வியாபாரிகள் வாழ் வாதார பாதுகாப்பு சட்டம்-2014 குறித்து அரசு அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாலையோர வியாபாரிகளுக்கும் இலவச தள்ளு வண்டிகளை வழங்கிட வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி வட்டியில்லாத கடனாக ரூ.15 ஆயிரத்தை கூட்டுறவு வங்கியில் வழங்கிட வேண்டும். சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார பாதுகாப்பு சட்டத்திற்கு விரோதமாக வலுகட்டாயமாக அப்புறப்படுத்தும் போக்கினை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத், தமிழ்நாடு சாலையோர வியாபாரிகள் சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் சந்தியாகு ஆகியோர் முன்னிலை வகித்து கோரிக்கைகளை வலியுறுத்தினர். தொடர்ந்து கோஷம் எழுப்பப்பட்டன. இதில், சிஐடியு மாவட்ட தலைவர் சங்கரலிங்கம், மாவட்ட பொருளாளர் நவீன்சந்திரன், ரபீக், கோகிலா, ஜயக்குமார், ரூபா, பிரியா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post ஊட்டியில் சாலையோர வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Ooty ,Ooty Collector ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...