×

5 பை நிறைய ஆவணங்களை தம்பி கொண்டு வந்தார் எடப்பாடி சொல்லித்தான் கொடநாடு கொள்ளை நடந்தது: 2 செல்போன்களை அழித்தது இன்ஸ்பெக்டர்; டிரைவர் கனகராஜ் அண்ணன் திடுக் தகவல்

சேலம்: கொடநாடு பங்களாவில் எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் கொள்ளை சம்பவம் நடந்தது என்று கனகராஜின் அண்ணன் திடுக் தகவல் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017ல் கும்பல் புகுந்து காவலாளியை கொலை செய்து, ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து கேரளா கூலிப்படையை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். இந்த கொள்ளைக்கு மூளையாக இருந்து செயல்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் டிரைவர் கனகராஜை போலீசார் தேடி வந்த நிலையில், அவர் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மர்மமான முறையில் விபத்தில் உயிரிழந்தார்.

அவரது செல்போன் ஆவணங்களை அழித்ததாக கனகராஜின் அண்ணன் தனபாலன் (45) என்பவரை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், மேச்சேரி அருகே நிலம் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக புரோக்கராக செயல்பட்ட தனபாலனை மேச்சேரி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் சிறையில் இருந்த தனபாலனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்தநிலையில் ஜாமீனில் வெளியே வந்த தனபாலன் நேற்று சேலத்தில் அளித்த பேட்டி: மேச்சேரியை சேர்ந்த வாசுதேவன் என்பவர் அவரது 4 ஏக்கர் நிலத்தை வைத்து கடன் வாங்க முயற்சி மேற்கொண்டார். நான் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சித்தன் என்பவரை அழைத்துச் சென்று நிலத்தை மட்டும் காட்டினேன். அதன்பிறகு நிலம் கொடுத்தார்களா? கடன் பெற்றார்களா? என எனக்குத் தெரியாது. நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்ட என்னை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்த ஜெயில் சூப்பிரெண்டுக்கும், தமிழ்நாடு முதல்வருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நான் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி மீது புகார்களை கூறி வருகிறேன். ஆனால், அவரிடம் போலீசார் இதுவரை விசாரித்ததாக தெரியவில்லை. ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் ஆவணங்கள் இருப்பதாக கூறி அதனை எடுத்து வரச்சொன்னதே எடப்பாடி பழனிசாமி தான் என்று எனது தம்பி கனகராஜ் என்னிடம் கூறினார். நடப்பது நமது ஆட்சி, எனக்கு சொந்தமான ஆவணங்கள் உள்ளே இருக்கிறது என்று எடப்பாடி பழனிசாமி கூறியதாகவும் எனது தம்பி கூறினார்.

எனது தம்பியின் செல்போனை அழித்ததாக சிபிசிஐடி போலீசார் என் மீது வழக்கு பதிவு செய்ததாக தெரிவித்தனர். ஆனால் அந்த செல்போனை நான் அழிக்கவில்லை. எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக இருக்கும், இடைப்பாடி இன்ஸ்பெக்டராக இருந்த சுரேஷ்குமார்தான் என் தம்பியின் 2 செல்போன்களையும் என்னிடம் இருந்து வாங்கிச் சென்றார். அவர் தான் அதில் இருந்தவற்றை எல்லாம் அழித்தார். இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவதாக என்னை மிரட்டினார். உயிர் பயத்தால் நான் அதை சொல்லவில்லை. ஆனால் சிபிசிஐடியிடம் நடந்த விவரங்களை முழுமையாக தெரிவித்து இருக்கிறேன்.

ஆனால் அவர்கள் எப்படி வாக்குமூலம் எழுதியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். கொடநாட்டில் இருந்து 5 பைகள் நிறைய ஆவணங்களை எனது தம்பி கொண்டு வந்தார். பெருந்துறையில் வைத்து அதனை என்னிடம் காண்பித்தான். அதில், 3 பை சங்ககிரிக்கும், 2 பை சேலத்திற்கும் எனது தம்பி கொடுத்தார். அப்போது சயானும் உடனிருந்தார். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இதனை எனது தம்பி செய்தார். ஆனால் எனது தம்பியை பலிகடாவாக்கி விட்டனர். தற்போது எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post 5 பை நிறைய ஆவணங்களை தம்பி கொண்டு வந்தார் எடப்பாடி சொல்லித்தான் கொடநாடு கொள்ளை நடந்தது: 2 செல்போன்களை அழித்தது இன்ஸ்பெக்டர்; டிரைவர் கனகராஜ் அண்ணன் திடுக் தகவல் appeared first on Dinakaran.

Tags : 5 ,Bye ,Edabadi ,Kadanadu ,Kanakaraj Anne ,Salem ,Kodanadu ,Edapadi Palanisami ,5 Bye ,Dinakaran ,
× RELATED சிவகாசியில் ரூ.5 லட்சம் பட்டாசுகள் பறிமுதல்