×

முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி

சென்னை: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று அளித்த பேட்டி: சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து 3 அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் திமுக மீதும், தமிழ்நாடு அரசு மீதும் களங்கம் ஏற்படுத்தும் முயற்சி நடைபெறுகிறது. எனவே அதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டிய கடமை திமுகவிற்கு உள்ளது. பொதுவாக, நீதிமன்றங்கள் மீது எங்களுக்கு அளவு கடந்த நம்பிக்கையும், மரியாதையும் உள்ளது. பல்வேறு வழக்குகளில் நீதிமன்றத்தை நாடி நல்ல தீர்ப்பை நாங்கள் பெற்றுள்ளோம்.

அதில் குறிப்பாக ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சொல்லலாம். அதேபோல கலைஞர் இறந்தபோது, அண்ணாவின் நினைவிடம் அருகே மெரினாவில் இடம் வழங்க அன்றைய அரசு மறுத்தபோது, நாங்கள் நீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தி தான் அந்த உரிமையை பெற்றோம். அப்படிப்பட்ட திமுக, நீதிமன்றம் மீது நம்பிக்கை வைத்துள்ள நாங்கள், கடந்த ஒரு வாரமாக ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை மீண்டும் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தது கொள்வதை சட்டரீதியாக எதிர்கொள்ள தயாராக தான் உள்ளோம். முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு டெண்டரில் ரூ.3,300 கோடி அளவுக்கு முறைகேடு செய்தது குறித்து நான் 2018ல் தொடர்ந்தேன்.

அந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றம் சென்று தடை வாங்கினார். பின்னர் மறுவிசாரணைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பு வந்தபோது, அவர் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்று நீதிபதி சொன்னார். ரூ.3,300 கோடி முறைகேடு குறித்த வழக்கில் இவ்வாறு சொன்ன அதே நீதிபதி தான், இன்றைக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் மீதான 44 லட்சம் அளவிலான வழக்கை, அதுவும் முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை விசாரிப்பேன் என சொல்கிறார். இதேபோன்ற நிலை தான் அமைச்சர் பொன்முடி வழக்கிலும், தங்கம் தென்னரசு வழக்கிலும் உள்ளது. இதனை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்திற்கு நாங்கள் எடுத்துச் சொல்வோம்.

ஏற்கனவே, இதேபோன்ற வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன், வளர்மதி ஆகியோர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த முகாந்திரத்தின் அடிப்படையில் அந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்களோ, அதே அடிப்படையில் தான் திமுக அமைச்சர்களும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். நீதிமன்றத்திற்கும், நீதிபதிக்கும் எந்தவொரு வழக்கையும் தாமாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள உரிமை உள்ளது. ஆனால் வழக்குகளை தேர்வு செய்வதில் உள்நோக்கம் இருக்கக்கூடாது என்பதே விதி. ஆனால் இப்படி பாகுபாடு பார்த்து உயர் நீதிமன்றம் வழக்குகளை தேர்வு செய்வதை நிச்சயம் உச்ச நீதிமன்றம் சென்று வழக்கு தொடர்ந்து முன்வைப்போம்.

எந்தவொரு வழக்கையும் தாமாக முன்வந்து எடுத்து விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு உரிமை உள்ளது என்றாலும், ஆனால் தவறான முறையில் அதனை பயன்படுத்த கூடாது என கடுமையான அறிவுறுத்தி உள்ளது. இதையெல்லாம் உச்ச நீதிமன்றத்தில் எடுத்து வைப்போம். ஏற்கனவே ஆளுநர் ஒரு பக்கம் இந்த அரசுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதுபோன்ற வழக்குகள் மூலம் மக்களுக்கு குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதால் தான் இவ்வாறு விளக்கம் அளிக்க வேண்டி உள்ளதே தவிர வேறெந்த காரணமும் இல்லை. யார் எந்த வழக்கு போட்டாலும் நிச்சயம் அவற்றை நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.இவ்வாறு அவர் கூறினார்.

The post முடித்து வைக்கப்பட்ட வழக்குகளை தாமாக முன்வந்து நீதிமன்றம் மீண்டும் விசாரிப்பதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார்: திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேட்டி appeared first on Dinakaran.

Tags : DMK ,RS Bharti ,Chennai ,Anna University ,Chennai High Court ,Dinakaran ,
× RELATED திமுக இளைஞர் அணிக்கு மாவட்ட வாரியாக...