×

சந்திரயான்-3 அளிக்கும் தகவல்கள் நிலவில் ஆய்வகம் அமைக்க உதவும்: ‘பிரம்மோஸ்’ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேட்டி

நாகர்கோவில்: சந்திராயன்-3 அளிக்கும் தகவல்கள் நிலவில் விண்வெளி ஆய்வகம் அமைக்க உதவும் என்று பிரம்மோஸ் ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை தெரிவித்தார். நாகர்கோவில் இந்துக் கல்லூரியில் நடந்த சர்வதேச கருத்தரங்கில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் முன்னாள் தலைமை அதிகாரியான ‘பிரம்மோஸ்’ ஏவுகணை விஞ்ஞானி சிவதாணுபிள்ளை கலந்துகொண்டு பேசினார். பின்னர் அவர் கூறியதாவது: சந்திரனின் தென் துருவத்தில் உலக அளவில் யாரும் இதுவரை அளவீடுகள், ஆய்வுகள் ஏதும் செய்யவில்லை. அதனால் சந்திரயான்-3 நிலவில் அதன் தட்பவெப்ப நிலை, நில அதிர்வுகள், என்னென்ன தாதுக்கள் அங்கு கிடைக்கும் என்பதை ஆய்வு செய்யும். அங்குள்ள மண்ணில் எவ்வளவு நீர் மூலக்கூறுகள் உள்ளது என்பதை ஆய்வு செய்யும் வசதி அந்த ரோவரில் உள்ளது.

தண்ணீர் இருந்தால்தான் நிலவில் மனிதன் ஆய்வுகளை நீண்ட நாட்கள் மேற்கொள்ள முடியும். ஒரு விண்வெளி ஆய்வகம் நிறுவ வேண்டுமானால் நிலவில் முக்கியமாக தண்ணீர் இருக்க வேண்டும். தண்ணீர் இருந்தால் ஆக்சிஜனை நாம் அங்கேயே உற்பத்தி செய்துகொள்ள முடியும். அங்கு நீர் மூலக்கூறுகள் இருப்பது நமக்கு பெரிய வரப்பிரசாதம். அப்படியிருந்தால் அந்த பகுதியில் நாம் விண்வெளி ஆய்வுக்கூடத்தை நிறுவ சாத்தியக்கூறுகள் உள்ளது. சந்திரயான் அனுப்பும் தகவல்கள் ஆய்வுக்கூடம் அமைக்க உதவும். 14 நாட்களில் ஆய்வு செய்து அது நமக்கு தகவல்களை தரும். உலகத்திற்கே முதன் முறையாக இந்த தகவல்கள் தெரியவரும்.

லேண்டரிலும் 4 கருவிகள் உள்ளன. அதில் இருந்தும் சுற்றுவட்டார பகுதிகள் எவ்வாறு உள்ளது என்பது குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். இதனால் நமக்கு நிறைய விஷயங்கள் தெரியவரும். அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இந்தியா நாடுகள் ஒவ்வொரு இடத்திலும் தங்களுக்கு ஒரு விண்வெளி ஆய்வுக்கூடத்தை கூட நிறுவலாம். இதற்கு பின்னால் ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளும் ஆர்வத்துடன் உள்ளன. எல்லோரும் இந்தியாவில் இருந்து என்னென்ன அளவீடுகள், தகவல்கள் வெளி வருகிறதோ அதனை மிகவும் பயன்படுத்த உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

The post சந்திரயான்-3 அளிக்கும் தகவல்கள் நிலவில் ஆய்வகம் அமைக்க உதவும்: ‘பிரம்மோஸ்’ விஞ்ஞானி சிவதாணுபிள்ளை பேட்டி appeared first on Dinakaran.

Tags : Moon ,Shivathanupillai ,Brahmos ,Shivatharupillai ,
× RELATED கும்பம்