×

விதிகளை மீறி அதிகாலை காட்சி திரையிட்ட விவகாரம் அபராதத்தை எதிர்த்து திரையரங்கு வழக்கு: காவல்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: விதிகளை மீறி, அதிகாலை காட்சி திரையிட்டதாக கூறி ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்த உத்தரவை எதிர்த்து ரோஹிணி திரையரங்கு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு பதிலளிக்கும்படி தமிழக டிஜிபி, சென்னை காவல் ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு சினிமா விதிகளில், திரையரங்குகள் ஒரு நாளைக்கு நான்கு காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும். பண்டிகை நாட்களில் ஒரு காட்சி கூடுதலாக திரையிட்டுக் கொள்ளலாம் எனவும் விதியை மீறும் பட்சத்தில் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி 11ம் தேதி அதிகாலை 5 மணிக்கு காட்சி திரையிடப்பட்டதாக கூறி சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகிணி திரையரங்கிற்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மார்ச் 31ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அந்த உத்தரவின் அடிப்படையில் கடும் நடவடிக்கைகள் எடுக்க தடை விதிக்க கோரியும் ரோகிணி திரையரங்கு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், ஏற்கனவே ஓ.டி.டி. போன்றவற்றால் திரையரங்குகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில், அரசின் கட்டுப்பாடுகள் எங்களுக்கு கடும் இழப்பை ஏற்படுத்துகிறது.

கடந்த ஜனவரி 11ம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், 4 மணிக்கும் காட்சிகள் திரையிட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், எந்த முறையான விசாரணையும் நடத்தாமல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, காவல்துறை தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி, தொடர்ந்து விதிகளை மீறி திரைப்படத்தை திரையிட்டுள்ளதால் விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று வாதிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, செப்டம்பர் 13ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக டி.ஜி.பி.க்கும், சென்னை மாநகர காவல் ஆணையருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.

The post விதிகளை மீறி அதிகாலை காட்சி திரையிட்ட விவகாரம் அபராதத்தை எதிர்த்து திரையரங்கு வழக்கு: காவல்துறை பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Rohini Theatre ,
× RELATED சென்னை ரெட்டேரி அருகே புத்தகரத்தில்...