×

சமத்துவ திட்டம்

‘சாதிகள் இல்லையடி பாப்பா… குலத் தாழ்ச்சி உயர்ச்சி சொல்லல் பாவம்’ என்றார் மகாகவி பாரதி. ஜாதி, மத பேதமின்றி அனைவரையும் சமமென கருத வேண்டும் என்றார் தந்தை பெரியார். அவர் வழி வந்த கலைஞர் முதல்வராக இருந்தபோது, கடந்த 2.10.1970ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற புரட்சிகரமான திட்டத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றினார். இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், தமிழக அரசின் சட்டத் திருத்தம் செல்லும். அதே நேரம், ஆகம விதிகளுக்கு உட்பட்டு அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் 1972ல் தீர்ப்பு வழங்கியது. மேலும், பல வழக்குகளும் தொடரப்பட்டன. இடைக்கால தடை கூட பெறப்பட்டது.

கடந்த 2021, மே 7ல் திமுக அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும் அறநிலையத்துறையில் பலவிதமான வரவேற்கத்தக்க மாற்றங்கள் உருவாகின. ஆக்கிரமிப்பில் இருந்த பல நூறு கோடி கோயில் நிலங்கள் மீட்கப்பட்டன. நூற்றுக்கணக்கான கோயில்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு குடமுழுக்கு உள்ளிட்ட நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை, மூன்று வேளை அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு அதிரடி திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

பெரியாரின் எண்ணத்தில் உதித்ததை, கலைஞர் சட்டமாக கொண்டு வந்ததை, நிறைவேற்றிடும் வகையில் ஆட்சிப் பொறுப்பேற்ற 100வது நாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2021, ஆக. 14ல் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் திட்டத்தை சென்னையில் தொடங்கி வைத்தார். இவ்விழாவில், முதல்வர் மு.க.ஸ்டாலின், அர்ச்சகர் பயிற்சி முடித்த 29 ஓதுவார்கள் உள்பட 58 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கினார். தமிழக அரசின் இந்த திட்டத்துக்கு அனைத்து தரப்பில் இருந்தும் ஆதரவு பெருகியது. அதே நேரம் சென்னை ஐகோர்ட், ஐகோர்ட் மதுரை கிளையில் நியமனங்களை எதிர்த்தும் வழக்குகள் தொடரப்பட்டன.

இச்சூழலில், சேலம், சுகவனேஸ்வரர் கோயில் அர்ச்சகர்கள் நியமன அறிவிப்பில், ஆகம விதிகளை பூர்த்தி செய்யவில்லை என அர்ச்சகர் முத்து சுப்ரமணிய குருக்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த தனி நீதிபதி, உச்சநீதிமன்ற உத்தரவின்படி அர்ச்சகராக நியமிக்க, பரம்பரை உரிமையை மனுதாரர் கோர முடியாது. சுகவனேஸ்வரர் கோயில் ஆகம அடிப்படையிலானது என்பதால், அதன்படியே அர்ச்சகர் நியமனமும் இருக்க வேண்டும். ஆகம விதிப்படி, முறையான பயிற்சி, பூஜை செய்வதற்கான தகுதி பெற்றவர்களாக, அர்ச்சகர்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். இதையே சென்னை ஐகோர்ட் இரு நீதிபதி அமர்வும் உறுதி செய்திருந்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு மனு செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழக அரசு வக்கீல் எடுத்து வைத்த வாதங்களை ஏற்ற நீதிபதிகள், ஆகம விதிகளின்படி தேர்ச்சி பெற்றவர்களாக, முறையான பயிற்சி, பூஜை செய்வதற்கான தகுதி பெற்றவர்கள் யாரை வேண்டுமானாலும் எந்த சாதியை சேர்ந்தவராக இருந்தாலும் அர்ச்சகர்களாக நியமிக்கலாம் என உத்தரவிட்டுள்ளனர். இந்த தீர்ப்பானது அனைத்து தரப்பினரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இனி அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சிப்பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும். இதில் முறையான பயிற்சி பெற்றவர்களை, அர்ச்சகர் காலியிடங்களில் நிரப்ப வேண்டும். அனைவரும் ஒன்றே என்ற சமத்துவம் பல்கி பெருக வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாகும்.

The post சமத்துவ திட்டம் appeared first on Dinakaran.

Tags : Mahakavi Bharati ,
× RELATED காசியில் வாழ்ந்த வீட்டில் பாரதியின்...