×

குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களையெல்லாம் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல்

மயிலாடுதுறை: முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை அருள்மிகு மாயூரநாத சுவாமி திருக்கோயிலில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு திருக்குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு, அங்கு நிறைவுபெற்றுள்ள திருப்பணிகளையும், மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து சீர்காழி, அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில் வளாகத்தில் கண்டெடுக்கப்பட்டு திருக்கோயிலிலேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள பல அரிய செப்பேடுகள், உலோக திருமேனிகள் மற்றும் பூஜை பொருட்களை நேரில் பார்வையிட்டார். பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, முதலமைச்சர் இன்று மாலை தருமபுரம் ஆதீனத்தின் முப்பெரும் விழாவில் பங்கேற்று சிறப்பு சேர்க்க உள்ளார்கள்.

அந்த இனிய நிகழ்வில் பங்கேற்கும் வேளையில் வருகின்ற செப்டம்பர் மாதம் மூன்றாம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெறவுள்ள மயிலாடுதுறை, அருள்மிகு மாயூரநாதர் சுவாமி திருக்கோயில் மற்றும் துக்காச்சி, அருள்மிகு சௌந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயிலில் நிறைவு பெற்றுள்ள திருப்பணிகளையும், திருக்குடமுழுக்கிற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடு பணிகளையும் ஆய்வு செய்தோம்.

மயிலாடுதுறை, அருள்மிகு மயூரநாதர் சுவாமி திருக்கோயிலுக்கு 18 ஆண்டுகளுக்குப் பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ரூ. 2 கோடி மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.7 கோடி ஆக மொத்தம் ரூ. 9 கோடி மதிப்பீட்டிலும், துக்காச்சி, அருள்மிகு சௌந்தர்யநாயகி அம்பாள் உடனுறை ஆபத்சகாயேசுவரர் திருக்கோயிலுக்கு ரூ,3.66 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இரண்டு திருக்கோயில்களுக்கும் வரும் மூன்றாம் தேதி குடமுழுக்கு நடைபெற இருக்கின்றன.

துக்காச்சி திருக்கோயிலை பொறுத்தளவில் இதற்கு முன்பு குடமுழுக்கு நடைபெற்றதுக்கு உண்டான எந்த சான்றும் இல்லை. தகவல் சேகரிக்க முற்பட்டபோது கடந்த 50 ஆண்டுகளுக்குள் குடமுழுக்கு நடைபெற்றதாக எந்த விதமான சான்றும் கிடைக்கப்பெறவில்லை. புதிதாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி ஏற்பட்ட பிறகுதான் இதுவரையில் 918 திருக்கோயில்கள் குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது.

அதில் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருள்மிகு ஆதிகேச பெருமாள் திருக்கோயில் 400 ஆண்டுகளுக்கு பிறகும், காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி அருள்மிகு கரியமாணிக்க வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் 150 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு நடைபெற்று இருக்கின்றது. மேலும் 1,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சுமார் 30க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளது.

தருமபுர ஆதீனத்தில் இருக்கின்ற 27 திருக்கோயில்களில் 23 திருக்கோயில்களுக்கு இரண்டு ஆண்டுகளில் குடமுழுக்கு நடத்திட அனுமதி அளிக்கப்பட்டு திருப்பணிகள் நிறைவுற்று குடமுழுக்கு முடிந்திருப்பதும் ஒரு வரலாற்று சிறப்பாகும். சீர்காழி, அருள்மிகு சட்டநாதர் திருக்கோயிலுக்கு 32 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மாதம் குடமுழுக்கு நடைபெற்றது.

ஆண்டாண்டு காலமாக குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களை எல்லாம் கண்டறிந்து குடமுழுக்கு பணிகள் விரைவுபடுத்தப்பட்டு தெய்வங்கள் மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆட்சியாக இன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்களின் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கின்றது. அருள்மிகு சட்டநாதர் திருக்கோயில் குடமுழுக்கு பணிகளுக்காக மராமத்து பணிகள் மேற்கொள்ளப்படுவதற்கு பள்ளம் தோண்டிய போது பல அரிய செப்பேடுகளும், உலோக திருமேனிகளும், பூஜை பொருட்களும் கிடைத்திருக்கின்றன.

அதில் 110 செப்பேடுகள் முழுமையாகவும், 83 செப்பேடுகள் சிதலமடைந்ததும், 23 உலோக திருமேனிகள் முழு அளவிலும், 13 பூஜை பொருட்களும் கிடைத்திருக்கின்றன. இதுவரையில் தேவாரங்கள் ஓலைச்சுவடிகள் தான் கிடைத்துள்ளன. முதன் முதலில் இங்குதான் செப்பேடுகளில் தேவாரம் பாடல்கள் கிடைத்துள்ளது. இது தமிழகத்தின் வரலாறாகும். இவை பாதுகாப்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. செப்பேடுகளில் மொழிபெயர்க்க வேண்டிய பாடல்கள் அரிய பாடல்கள் இருப்பதால், தொல்லியல் துறையோடு கலந்தாலோசித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம்.

இதில் முதலமைச்சர் தகுந்த நல்ல முடிவினை எடுப்பார்கள். மேலும் பல செப்பேடுகள் இருப்பதாக தொல்லியல் துறை தெரிவித்துள்ளதை கருத்தில் கொண்டு, அவற்றையும் எடுப்பதற்கு உண்டான முயற்சிகளை முதலமைச்சரின் ஆலோசனையோடு மேற்கொள்ளப்படும். ஒட்டுமொத்தமாக இந்த ஆட்சியானது ஆன்மீக புரட்சிக்கு வித்திடுகின்ற ஆட்சியாகவும், ஆன்மீகவாதிகள், இறை அன்பர்கள், மடாதிபதிகள், சன்னிதானங்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருக்கின்ற ஆட்சியாகவும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது என்று தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் க.வீ. முரளீதரன், இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.பி. மகாபாரதி, நாடாளுமன்ற உறுப்பினர் செ,இராமலிங்கம், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா எம். முருகன்,எம்.பன்னீர்செல்வம், இணை ஆணையர் எஸ்.மோகனசுந்தரம், உதவி ஆணையர் ஆர். முத்துராமன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post குடமுழுக்கு நடைபெறாத திருக்கோயில்களையெல்லாம் கண்டறிந்து குடமுழுக்கு நடத்தும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு வருகின்றன: அமைச்சர் பி.கே.சேகர்பாபு தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,B. K.K. Segarbabu ,Mayeladuduram ,Chief Minister ,b.k. G.K. ,Stalin ,Hindu ,Chrisheries ,P. K.K. Segarbabu ,Mayiladudura District ,Mayiladudura Arulmigu Mayuranatha ,Dinakaran ,
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...