×

கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அதனை சுற்றியுள்ள கட்டடங்களை கட்ட எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறவில்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல்

சென்னை: கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிலை மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டடங்களை கட்ட எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது. கோவை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை நிறுவப்பட்டுள்ளது. சிலை அமைந்துள்ள பகுதியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வெள்ளியங்கிரி மலை பழங்குடியின பாதுகாப்பு சங்க தலைவர் முத்தம்மாள் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மலைவாழ் மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் வகையிலும் வனவிலங்குகளின் இயற்கையான வாழ்க்கை முறைக்கு இடையூறாகவும் சிலை அமைக்கப்பட்டுள்ளதாக மனு தாக்கல் செய்தார்.

வனப்பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுதாரர் தரப்பில் கோரியிருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதிகள் கங்கா புர்வாலா, ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக நகரமைப்பு திட்டமிடல் துறை தரப்பில், திட்ட அனுமதி அல்லது கட்டடங்களை கட்ட எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறவில்லை என தெரிவிக்கப்பட்டது. வழிபாட்டு தலத்திற்கான மாவட்ட ஆட்சியரின் தடையில்லா சான்றிதழ், சுற்றுச்சூழலுக்கான மாசு கட்டுப்பாட்டு வாரிய சான்றிதழ், மலை இடர் பாதுகாப்பு அமைப்பிடமிருந்து சான்றிதழ் என எதுவும் ஈஷா யோகா அறக்கட்டளையால் பெறப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

பட்டியலில் தரப்பட்டுள்ள நிலத்தில் அரசு புறம்போக்கு நிலமும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் ஆர்.அனிதா ஆஜராகி, ஈஷா பவுண்டேசனுக்கு கட்டிடம் கட்ட அனுமதியோ, தடையில்லா சான்றோ ஈஷா பவுண்டேசன் நிர்வாகி பெறவில்லை என்றும், அதற்கான ஆவணங்கள் இல்லை என்றும் அறிக்கை தாக்கல் செய்தார். இதன்பின்னர் உத்தரவிட்ட நீதிபதிகள், மனுதாரரும், ஈஷா அறக்கட்டளை தரப்பும் தாக்கல் செய்துள்ள ஆவணங்களை கோவை நகர திட்ட இணை இயக்குனர் ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அதில் சம்மந்தப்பட்ட கட்டடம் கட்டுவதற்கான அனுமதி தரப்படவில்லை என்று தெரிய வந்தால் உடனடியாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தவிட்டனர்.

The post கோவை ஈஷா யோகா மையத்தில் ஆதியோகி சிலை அதனை சுற்றியுள்ள கட்டடங்களை கட்ட எந்த முன் அனுமதியோ, தடையில்லா சான்றோ பெறவில்லை: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு தகவல் appeared first on Dinakaran.

Tags : Adiyogi ,Isha Yoga Center ,Coimbatore ,Tamil Nadu government ,ICourt ,Chennai ,Tamilnadu government ,
× RELATED ஈஷா யோக மைய நிறுவனர் சத்குரு வாக்களித்தார்