×

ஆச்சரியம் தந்த அந்தியூர் சந்தை!

தமிழர்கள் கால்நடைகளோடு வாழப் பழகியவர்கள். காலையில் துயில் எழுவதே சேவல்களின் கூவலில்தான். பின்பு வீட்டில் வளர்க்கும் ஆடு, மாடுகளுக்கு வேண்டிய தீவனம் வழங்கி, தண்ணீர் கொடுத்து தங்களுடைய குடும்பத்தில் ஒருவராகவே பாவித்து மகிழ்வார்கள். இதனால்தான் தாங்கள் கொண்டாடும் முக்கிய விழாக்களில் கூட கால்நடைகளுக்கு எப்போதும் முக்கித்துவம் அளிக்கிறார்கள்.

தமிழர்களின் முதன்மையான திருநாளான பொங்கல் திருநாளில் மாடுகளுக்கென்றே ஒரு நாளை ஒதுக்குகிறார்கள். தங்கள் பகுதிகளில் நடைபெறும் கோயில் திருவிழாக்களிலும் கால்நடைகளை இடம்பெறச் செய்கிறார்கள். இந்த வகையில் ஆண்டுதோறும் கால்நடைகளுடன் கொண்டாடப்படும் ஒரு திருவிழாதான் அந்தியூர் குருநாதசாமி கோயிலின் ஆடிப்பெருந்திருவிழா.

4 நாட்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் குதிரை சந்தை, பாரம்பரிய மாட்டு இனங்களின் சந்தை என கால்நடைகளில் விற்பனை களைகட்டும். இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருந்திருவிழா கடந்த வாரம் நடைபெற்றது. இந்தத் திருவிழா ஒரு முக்கிய திருவிழாவாக மாறியிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக இந்தத் திருவிழா நடத்தப்படவில்லை.

இதனால் இப்பகுதி மக்கள் ஆடிப்பெருந்திருவிழாவை ஆவலாக எதிர்பார்த்திருந்த நிலையில், கடந்த வாரம் கொண்டாடித் தீர்த்துவிட்டார்கள். தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட குதிரைகள், மாடுகள் நிரம்பிய சந்தை அனைவரையும் புருவம் உயர்த்த வைத்தது. மன்னராட்சிக் காலங்களில் போர் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்தது. நாட்டைப் பிடிப்பதில் இருந்து அங்குள்ள வளங்களைக் கவர்ந்து வருவது வரை போரையே ஒரு காரணியாக வைத்திருந்தார்கள்.

அத்தகைய போர்களுக்கு குதிரைகள் பெரும்பங்கு ஆற்றியிருக்கின்றன. மார்வார், நொக்ரா, கத்தியவார் என பல உயர்ரக குதிரைகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்த ரக குதிரைகள் எல்லாம் கடந்த வாரம் நடந்த அந்தியூர் சந்தையில் காட்சிப்படுத்தப்பட்டன. அவை ஒவ்வொன்றும் சுமார் ரூ.1 லட்சம் முதல் 30 லட்சம் வரை விலை வைத்து விற்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு பெயர் பெற்ற காங்கேயம் உள்ளிட்ட காளைகளும் இந்த சந்தையில் இடம்பிடித்திருந்தன.

அதுபோன்ற பல்வேறு நாட்டு இன மாடுகள், பால் தரும் பசுக்கள் என பலவும் இடம்பெற்ற இச்சந்தையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று மகிழ்ந்திருக்கிறார்கள்.

The post ஆச்சரியம் தந்த அந்தியூர் சந்தை! appeared first on Dinakaran.

Tags : Andhiyur Market ,Tamils ,Andhiur ,market ,
× RELATED ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே...