×

ஒருவழிப்பாதை கடைபிடிக்காததால் கழுகுமலையில் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படுவார்களா?

கழுகுமலை, ஆக. 24: கழுகுமலையில் ஒருவழிப்பாதையை கடைபிடிக்காததால் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கழுகுமலையில் உள்ள குடவரை கோயிலான கழுகாசலமூர்த்தி கோயில், மலையில் உள்ள சமணர் சிற்பங்கள், வெட்டுவான் கோயில் உள்ளிட்டவை பிரசித்திப் பெற்றவை. செவ்வாய் ஸ்தலமான இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் கோவில்பட்டியில் இருந்து சங்கரன்கோவில், புளியங்குடி, செங்கோட்டை மற்றும் கேரளா மாநிலம் புனலூர் செல்லும் வாகனங்கள் கழுகுமலை வழியாகத்தான் செல்கின்றன.

கழுகுமலை நகரின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மலை கிரிபிரகார பகுதியில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. பஸ் நிலையம் ஊருக்குள் இருப்பதால் பெரும்பாலான பேருந்துகள் கழுகுமலை மேலகேட் பகுதியில் உள்ள திருப்பத்திலேயே நின்று சென்றன. இதுதொடர்பான புகார்கள் வந்ததை தொடர்ந்து, பேருந்துகளை பஸ் நிலையம் சென்று வர போலீசார் நடவடிக்கை எடுத்தனர். கோவில்பட்டி, சங்கரன்கோவில் பகுதியில் இருந்து வரும் பேருந்துகள் மேலகேட், காவல் நிலையம் வழியாக பஸ் நிலையத்துக்கு சென்று, பயணிகளை ஏற்றி, இறக்கிவிட்டு மீண்டும் காவல்நிலையம், பேரூராட்சி அலுவலகம் வழியாக செல்லும் வகையில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்டது. இதனால் மேலகேட் பகுதியில் நெருக்கடி இல்லாமல் போக்குவரத்து சீராக இருந்து வந்தது.

இந்நிலையில், கடந்த சில வாரங்களாக பஸ் நிலையத்தில் இருந்து வரும் பேருந்துகள் காவல்நிலையத்தில் இருந்து இடப்புறமாக செல்லாமல், வலப்புறமாக திரும்பி மேலகேட்டுக்கு வருவதால் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயமும் காணப்படுகிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், கழுகுமலையில் ஒருவழிப்பாதை அமல்படுத்தப்பட்ட பிறகு மேலகேட் பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும், விபத்துகளும் குறைந்திருந்தன. தற்போது மீண்டும் பேருந்துகள் ஒருவழிப்பாதை வழியாக செல்ல தொடங்கியுள்ளது. கோவில்பட்டி காவல் உட்கோட்டத்தில் கழுகுமலை பெரிய நகராக உள்ளது. இங்கு போக்குவரத்தை சரிசெய்ய போக்குவரத்து காவலர் நியமிக்க வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம். ஆனால், இதுவரை போக்குவரத்து காவலர் நியமிக்கப்படவில்லை. எனவே, கழுகுமலையில் பேருந்துகள் ஒருவழிப்பாதை முறையாக கடைபிடிப்பதை கண்காணிக்க போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும், என்றனர்.

The post ஒருவழிப்பாதை கடைபிடிக்காததால் கழுகுமலையில் மீண்டும் போக்குவரத்து நெருக்கடி போக்குவரத்து போலீசார் நியமிக்கப்படுவார்களா? appeared first on Dinakaran.

Tags : Kalgumalai ,Kalkumalai ,Dinakaran ,
× RELATED அழகான குழந்தைப் பேறுக்கு அமைய வேண்டிய பொருத்தம்