×

நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த அட்மா பண்ணைப்பள்ளி துவக்கம்

ஜெயங்கொண்டம், ஆக.24: ஜெயங்கொண்டம் வட்டார வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் மாநில விரிவாக்கத் திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்புத் திட்டத்தின்கீழ் (அட்மா) நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த பண்ணைப்பள்ளி கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தண்டலை கிராமத்தில் முன்னோடி விவசாயி கருணாநிதியின் நிலக்கடலை சாகுபடித் திடலில் நடத்தப்பட்டது. அரியலூர் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர்(பொ) பழனிசாமி தலைமை வகித்து பண்ணைப் பள்ளியினை துவக்கி வைத்தார். அவர் பேசுகையில் விவசாயிகள் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை முறைகளைக் கடைபிடித்தும் நவீன வேளாண் தொழில் நுட்பங்களைத் தெரிந்து கொண்டும் பயிர் சாகுபடி மேற்கொண்டால் அதிக மகசூல் மற்றும் கூடுதல் வருவாய் பெறலாம் எனவும் உழவன் செயலியை பயன்படுத்தி இடுபொருட்கள் முன்பதிவு செய்யும் முறைகள் குறித்தும் விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார்.

வேளாண் அலுவலர் மகேந்திரவர்மன் கலந்து கொண்டு கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் குறித்தும் கிடங்கு இடுபொருட்கள் குறித்தும் விளக்கினார்.
கிரீடு வேளாண் அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுநர் அசோக் குமார் கலந்து கொண்டு விதை அளவு, டிரைக்கோடெர்மா விரிடி கொண்டு விதை நேர்த்தி செய்யும் முறை, மண் ஆய்வுப்படி உரமிடுதலின் அவசியம், உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் அடியுரமாக ஜிப்சம் இடுதல் ஆகிய தொழில் நுட்பங்கள் குறித்து விளக்கினார். இந்நிகழ்ச்சியில் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகள் கலந்து கொண்டு அலுவலர்களுடன் கலந்துரையாடி சாகுபடி குறித்த சந்தேகங்களுக்கு தீர்வு கண்டனர். முன்னதாக வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி, பண்ணைப்பள்ளி குறித்தும் அட்மா திட்ட செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டாரத் தொழில் நுட்ப மேலாளர் மீனாட்சி, உதவி தொழில் நுட்ப மேலாளர்கள் மகேஷ்குமார், குமணன், வட்டாரத் தொழில்நுட்பக்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், உழவர் நண்பர் சுந்தரவடிவேல் ஆகியோர் செய்திருந்தனர். நிலக்கடலை சாகுபடியில் களை நிர்வாகம், நீர் நிர்வாகம், உர நிர்வாகம், ஒருங்கிணைந்த பூச்சி நோய் கட்டுப்பாட்டு முறைகள், அறுவடை மற்றும் பின் அறுவடை தொழில் நுட்பங்கள், மதிப்பு கூட்டுதல் மற்றும் விற்பனை வாய்ப்புகள் ஆகிய பிற தொழில் நுட்பங்கள் பின்வரும் வகுப்புகளில் விவசாயிகளுக்கு விளக்கப்பட்டு பண்ணைப்பள்ளி நடத்தப்படும்.

The post நிலக்கடலையில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்த அட்மா பண்ணைப்பள்ளி துவக்கம் appeared first on Dinakaran.

Tags : Atma Farm School ,Groundnut ,Jayangondam ,Jayangondam District Agriculture Department ,
× RELATED ஜெயங்கொண்டம் அருகே பெண் குளிக்கும்...