×

அந்தி சாயும் வேளையில் நிலவில் ‘இந்தியா’ உதயம்: வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3; தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடு; இஸ்ரோ விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை

* பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்பட தலைவர்கள் வாழ்த்து
* நாடு முழுவதும் உற்சாக கொண்டாட்டம்

சென்னை: உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய நாடுகள் மட்டுமே நிலவில் ஆராய்ச்சி மேற்கொண்டு வந்தன. ஆனால், நிலவின் தென் துருவத்தில் இதுவரை எந்த நாடும் ஆராய்ச்சி மேற்கொண்டது இல்லை. இந்தியா மட்டுமே நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக சந்திரயான் திட்டத்தை தொடங்கியது. முதல் முறையாக கடந்த 2008ம் ஆண்டு சந்திரயான்-1 திட்டம் செயல்படுத்தப்பட்டது. சந்திரயான் 1 விண்கலம் நிலவின் சுற்றுபாதையில் வலம் வந்தும், பின்னர் நிலவில் மூன் இம்பாக்ட் ப்ரோப் மூலம் வேகமாக மோதி நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு அதன் ஆய்வுகளை வெற்றிகரமாக செய்து முடித்தது.

பின்னர் சந்திரயான்-2 திட்டத்தில் நிலவின் பரப்பில் கருவிகளை இறக்கி ஆய்வுகளை செய்ய திட்டமிடப்பட்டது. இதன்படி 2019ல் சந்திரயான்-2 விண்ணில் செலுத்தப்பட்டது. ஆனால் சந்திரயான்-2 லேண்டர் லேண்டர் சரியாக தரையிறங்காமல் நிலவில் மோதி திட்டம் தோல்வியில் முடிந்தது. கடந்த முறை அடைந்த தோல்வியில் இருந்து இம்முறை தவறுகளை திருத்திக்கொண்டு சரியாக நிலவில் லேண்டர் கருவியை தரையிறக்கும் பணியை விஞ்ஞாணிகள் மேற்கொண்டனர். அதை தொடர்ந்து 4 ஆண்டுகள் சந்திரயான்-3 திட்டமிட்டப்பட்டது.

முதல் ஒரு வருடம் சந்திரயான்-2 தோல்விகளை ஆராய்ந்தனர். பின்னர் 3 ஆண்டுகள் சந்திரயான் -3 விண்கலம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த ஜூலை 14ம் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்எம்வி3, எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டு சரியாக 17வது நிமிடத்தில் சந்திரயான்-3 விண்கலம் புவிவட்டபாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.

சந்திரயான்-3 நிலவை நோக்கிய தனது 40 நாள் பயணத்தில் முதல் கட்டமாக விண்கலம் புவி சுற்றுவட்டபாதையில் 17 நாட்கள் பயணித்தது. ஓவ்வொரு கட்டமாக, அடுத்தடுத்த சுற்றுவட்டபாதைக்கு உயர்த்தும் பணிகள் வெற்றிகரமாக நடைபெற்றது. இதையடுத்து நிலவின் சுற்றுவட்டப்பாதையில் பயணிப்பதற்கு ஏற்புடைய சூழல் விண்கலத்தில் ஏற்பட்டதை அடுத்து கடந்த 1ம் தேதி நள்ளிரவு 12.15 மணியளவில் புவியின் இறுதி சுற்றுவட்டப்பாதையில் இருந்து விலகி நிலவின் சுற்றுவட்ட பாதையை நோக்கி 4 நாட்கள் விண்கலம் பயணித்தது. இதையடுத்து கடந்த 5ம் தேதி லூனார் ஆர்பிட் எனப்படும் நிலவின் சுற்றவட்டபாதைக்குள் விண்கலம் நுழைந்தது.

அடுத்தக்கட்டமாக நிலவுக்கு அருகே விண்கலத்தை நகர்த்தும் விதமாக படிப்படியாக நிலவின் சுற்றுவட்டபாதையில் சந்திரயான் 3 விண்கலத்தின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது. இறுதியாக கடந்த 16ம் தேதி கடைசி சுற்று வட்ட பாதையில் சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை 153 கி.மீ., 163கி.மீ. தூரத்திற்கு உயரம் குறைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சந்திரயான் 3ன் உந்துவிசைக் கலனில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது. இதையடுத்து தனியாகப் பிரிந்த விக்ரம் லேண்டரும் தன்னுடைய தனிப் பாதையில் நிலாவைச் சுற்றத் தொடங்கியது.

இதன் பிறகு படிப்படியாக 2 கட்டங்களாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு தரையிறங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளபட்டது. இந்நிலையில் லேண்டர் உள் சோதனைகளை நடத்தி சூரிய உதயம் வரை காத்திருந்து நிர்ணயிக்கப்பட்ட இடத்தை சென்றடைந்தது. இதையடுத்து நேற்று நிலவில் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணிகளுக்கான முன்னேற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்றது. இஸ்ரோ விஞ்ஞானிகள் பய பக்தியுடன் மிகுந்த கவனத்துடன் பணிகளை மேற்கொண்டு வந்தனர். பெங்களூருவில் உள்ள இஸ்ரோ தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொடர்ந்து லேண்டரின் செயல்பாடுகளை கண்காணித்து வந்தனர்.

கடந்த முறை நடந்த தவறை திருத்திக்கொண்டு இம்முறை சரியாக தரையிரக்க வேண்டும் என்ற முனைப்பும், படபடப்பும் அவர்களிடம் தென்பட்டது. லேண்டர் அனுப்பும் தகவல்களை இஸ்ரோ விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வந்தனர். லேண்டரை தரையிறக்கும் நிகழ்வுக்காக வழிமுறைகள் ஏற்கெனவே பதிவேற்றப்பட்டது. இந்த வழிமுறைகளை ஆரம்பித்து வைக்கும் பணி தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து நேற்று சரியாக 5.44 மணிக்கு விக்ரம் லேண்டர் தரையிறக்கும் பணி தொடங்கியது. லேண்டர் நிலவில் இருந்து 30கி.மீ உயரத்தில் இருந்தபோது தரையிறக்கும் பணிகள் தொடங்கப்பட்டது.

இந்த பணி நான்கு கட்டங்களாக நடைபெற்றது. முதலில் 6048 கி.மீ வேகத்தில் சென்று கொண்டிருந்த லேண்டரின் வேகம் படிப்படியாக 1288கி.மீ ஆக குறைக்கப்பட்டது. அப்போது நிலவில் இருந்து 30 கி.மீ.லிருந்து 7.2 கிலோமீட்டருக்கு லேண்டர் வந்தடைந்தது. 5.50 மணிக்கு 20 கி.மீ உயரத்திலும் படிப்படியாக 5.52 மணிக்கு 15 கி.மீ., 5.54 மணிக்கு 10 கி.மீ., 5.55 மணிக்கு 8 கி.மீ., 5.56 மணிக்கு 6 கி.மீ., தொடந்து 5.57 மணிக்கு 2கி.மீ., 5.58 மணிக்கு 1 கி.மீ. தூரத்தில் இருந்தது. நிலவில் இருந்து 1 கி.மீ. தூரம் மட்டுமே இருந்த நிலையில் மிகவும் கவனமாக பணிகள் கண்காணிக்கப்பட்டது. நிலவில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் இருந்த நிலையில் 50 டிகிரி கோணத்தில் இருந்த லேண்டர் 90 டிகிரிக்கு அதாவது பக்கவாட்டில் இருந்த லேண்டர், செங்குத்தாக நிறுத்தப்பட்டது.

இதையடுத்து 6 மணிக்கு 200 மீட்டரிலும், 6.02 மணிக்கு 50 மீட்டரில் இருந்தது அப்போது 2 இஞ்ஜின்களை மட்டுமே பயன்படுத்தி மெதுவாக தரையிறக்கப்பட்டது. இதையடுத்து சரியாக 6.03 மணிக்கு நிலவில் சந்திரயான் விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பத்திரமாக தரையிறங்கியது. நிலவில் லேண்டர் தரையிரங்கியவுடன் தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த விஞ்ஞானிகள் அனைவரும் ஆனந்த கூச்சலிட்டு, கைத்தட்டி, ஒருவைரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதையடுத்து இஸ்ரோ தலைவர் சோம்நாத், ‘சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாகவும், நிலவில் இந்தியா கால்பதித்துள்ளது’ என மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்க வேண்டி, இந்தியா முழுவதும் உள்ள கோயில்கள், மசூதிகள், தேவாலயங்களில் மக்கள் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டனர். சந்திரயான் விண்கலம் தரையிறங்கும் நிகழ்வை நாடே எதிர்பார்த்து காத்துக்கொண்டு இருந்தது. பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தெரு முனைகளில் டிவிக்கள் மூலம் சிறப்பு ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சந்திரயான்-3 நிலவில் தரையிறங்கியதன் மூலம் நிலவில் தடம் பதித்த 4வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா தற்போது பெற்றுள்ளது.

இந்த வரலாற்று சாதனை வெற்றிக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் முக்கிய கட்சிகளின் தலைவர்கள் விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அதேநேரத்தில் இதுவரை 3 முறை சந்திராயன் ஏவப்பட்டுள்ளது. அதில் சந்திரயான்1ன் இயக்குநர் மயில்சாமி அண்ணாத்துரை. 2வது சந்திரயானின் திட்ட இயக்குநர் வனிதா. சந்திரயான்3ன் திட்ட இயக்குநர் வீரமுத்துவேல். இதனால் 3 சந்திரயான்களின் திட்ட இயக்குநர்கள் தமிழர்கள் என்பது பெருமைப்படக்கூடிய, மகிழ்ச்சியான செய்தியாகும்.

* நிலவில் இருந்து சந்திரயான் அனுப்பிய முதல் செய்தி
நிலவில் தரை இறங்கியதும் சந்திரயான்3 பெங்களூருவில் உள்ள தலைமை கட்டுப்பாட்டு அறைக்கு, இந்தியா-சேருமிடத்தை நான் அடைந்துவிட்டேன், உங்களையும் தான் என்று முதல் தகவல் அனுப்பியது.

* நிலவில் தரைஇறங்கிய 4வது நாடு
நிலவில் விண்கலத்தை அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா ஆகிய நாடுகள் மட்டுமே இதுவரை வெற்றிகரமாக தரை இறக்கி இருந்தது. இப்போது, 4வது நாடாக இந்தியாவும் இந்த சாதனையை படைத்துள்ளது.

* இஸ்ரோ தலைவருக்கு போனில் மோடி வாழ்த்து
தென் ஆப்பிரிக்காவில் இருந்தபடி விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை நேரலையில் பார்த்த பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளிடம் காணொலி காட்சி மூலம் பேசினார். பின்னர், இஸ்ரோ தலைவர் சோம்நாத்திடம் போனில் பேசிய பிரதமர் மோடி இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

சாதனைப் பாதை
* ஜூலை 14: ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் எல்எம்வி3 எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.
* ஜூலை 15: புவியின் சுற்றுவட்டப் பாதையில் படிப்படியாக சந்திரயானின் உயரம் உயர்த்தப்பட்டது. அதன்படி முதல் பாதையில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது.
* ஜூலை 17: 2வது சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது.
* ஜூலை18: 3வது சுற்றுவட்டப்பாதையை அடைந்தது.
* ஜூலை 20: 4வது சுற்றுவட்டப்பாதைக்கு உயர்த்தப்பட்டது.
* ஜுலை 25: 5வது மற்றும் இறுதி சுற்றுவட்டப்பாதைக்கு மாற்றப்பட்டது.
* ஆகஸ்ட் 1: புவியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விண்கலம் நிலவை நோக்கிய பயணத்தை தொடங்கியது.
* ஆகஸ்ட் 5: வெற்றிகரமான நிலவின் நீள்வட்ட பாதைக்குள் செலுத்தப்பட்டது. அங்கிருந்து நீள்வட்டப்பாதையின் உயரம் படிப்படியாக குறைக்கப்பட்டது.
* ஆகஸ்ட் 17: விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது.
* ஆகஸ்ட் 19: விக்ரம் லேண்டர் நிலவை சுற்றத் தொடங்கியது.
* ஆகஸ்ட் 20: லேண்டர் நிலவை நெருங்கத் தொடங்கியது.
* ஆகஸ்ட் 23: விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறக்கப்பட்டது.

* தலைவர்கள், திரையுலகினர் வாழ்த்து
ஜனாதிபதி திரவுபதி முர்மு: சந்திராயன் 3 வெற்றிகரமாக தரையிறங்கியதன் மூலம் இந்தியாவுக்கு மிக பெரிய பெருமை கிடைத்துள்ளது. வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே நடக்கும் இந்த நிகழ்வின் மூலம் விஞ்ஞானிகள் மிக பெரும் சாதனையை படைத்துள்ளனர்.
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர்: இது இந்தியாவின் எழுச்சியை காட்டுகிறது. இந்த சாதனையில் தொடர்புடைய விஞ்ஞானிகளுக்கும், தொலை நோக்கு பார்வையுடன் செயல்படும் நாட்டின் தலைமைக்கும் வாழ்த்துகள்.
உள்துறை அமைச்சர் அமித் ஷா: இந்த வரலாற்று சாதனைக்காக இஸ்ரோ மற்றும் விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். இதன் மூலம் தென் துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே: நமது விஞ்ஞானிகள்,இன்ஜினியர்கள், ஆராய்ச்சியாளர்கள் ஆகியோரின் கடுமையான உழைப்பு மற்றும் முயற்சியால் இந்த சாதனையை இந்தியா நிகழ்த்தியுள்ளது.
ராகுல் காந்தி எம்பி: 60 ஆண்டுகளுக்கும் மேலாக விஞ்ஞானிகள் உழைத்த உழைப்பின் பயனாக சந்திரயான் 3 நிலவில் இறங்கி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனைக்காக விண்வெளி விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துகள்.
இதேபோல், பாஜ தலைவர் நட்டா, புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன், ஓ.பன்னீர்செல்வம், கே.எஸ்.அழகிரி, ராமதாஸ், அன்புமணி, கே.பாலகிருஷ்ணன், கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன், த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன், சசிகலா, சரத்குமார், பாரிவேந்தர் எம்.பி, எர்ணாவூர் நாராயணன் உள்ளிட்டோர் வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளனர். நடிகர்கள் ரஜினி , ஷாருக்கான், சன்னி தியோல், ஹிருத்திக் ரோஷன், மனோஜ் பாஜ்பாய், சிரஞ்சீவி, பிரபாஸ், அனில் கபூர், சித்தார்த் மல்கோத்ரா, கார்த்திக் ஆர்யன், ரவீனா தாண்டன், சுனில் ஷெட்டி, மம்முட்டி, மோகன்லால், சிம்பு ஆகியோரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* லேண்டரை கண்காணித்த ஐரோப்பிய விண்வெளி நிறுவனம்
நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கிய விக்ரம் லேண்டரை இஸ்ரோ மட்டுமின்றி, ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் (இஎஸ்ஏ) 3 ஆய்வு மையங்கள் கண்காணித்துள்ளன. இது குறித்து ஜெர்மனியின் டார்ம்ஸ்டாட்டில் உள்ள ஐரோப்பிய விண்வெளி செயல்பாட்டு மையத்தில் பணியாற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் சேவை மேலாளரும் இஸ்ரோவுக்கான தொடர்பு அதிகாரியுமான ரமேஷ் செல்லத்துரை வெளியிட்ட வீடியோவில், “சந்திரயான்-3 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கும் பணிகளை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் அதன் கௌரோ (பிரெஞ்சு கயானா), கூன்ஹில்லி (இங்கிலாந்து) மற்றும் நியூ நோர்சியா (மேற்கு ஆஸ்திரேலியா) ஆகிய மூன்று நிலையங்களில் இருந்து கண்காணித்து ஆதரவு அளித்தது,” என்று கூறியுள்ளார்.

* இந்தியாவின் அடுத்த இலக்கு சூரியன்
நிலவில் கால் பதித்த இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகளின் அடுத்த இலக்கு சூரியன். சூரியனை ஆய்வு செய்வதற்காகஆதித்யா-எல்1 விண்கலத்தை இந்தியா விரைவில் ஏவ உள்ளது.இதற்கான ஏற்பாடுகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் ஆதித்யா-எல்1 ஏவப்பட உள்ளது.

* யூடியூபில் 50 லட்சம் பார்வையாளர்கள்
இந்தியா மட்டுமின்றி, உலக நாடுகளின் கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் சந்திரயான் – 3 லேண்டர் நேற்று மாலை 6.03 மணிக்கு வெற்றிகரமாக தரையிறக்கம் செய்யப்பட்டது. அதன்படி, சந்திரயான் – 3 நிலவில் தென் துருவத்தில் லேண்டர் செய்யப்படும் நிலவினை இஸ்ரோ தனது அதிகாரப்பூர்வ யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்பு செய்தது. இதனை 50 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். இதற்கு முன்பு, ஸ்பெயின் நாட்டின் ஐபாய் யூடியூப் பக்கத்தில் 34 லட்சம் பேர் பார்த்திருந்தது தான் உலக சாதனையாக இருந்தது. இந்த சாதனையை தற்போது சந்திரயான் – 3 லைவ் முறியடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* சந்திரயான்-3 க்கு உதவிய சந்திரயான்-2
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி ஒட்டு மொத்த அறிவியல் உலகமும், சந்திரயான் 2ன் தரை இறங்குதல் நிகழ்வை பார்த்துக் கொண்டிருந்த நேரம். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக விக்ரம் லேண்டர் நிலவின் மேற்பரப்பில் 2.5 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்த போது, இன்ஜின் கோளாறால் நிலவின் மேற்பரப்பில் மோதியது.
சந்திரயான் 2 திட்டத்தின் தரையிறங்கும் திட்டம் தோல்வி அடைந்தாலும், அதன் ஆர்பிட்டர் தொடர்ச்சியாக சுற்றி வந்தது. இதனால், ‘‘சந்திரயான்-2 திட்டம் முழுமையாக தோல்வி அடையவில்லை. பகுதியாக மட்டுமே தோல்வி அடைந்தது. தற்போது இதிலிருந்து நம்மால் பாடம் கற்றுக் கொள்ள முடியும். விரைவில் சந்திரயான்-2 ஆர்பிட்டர் பயன்படுத்தப்படும்’’ என இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கூறியிருந்தார்.
தற்போது அதே போல சந்திரயான்-3ன் வெற்றிக்கு சந்திரயான்-2 மிகவும் உதவி உள்ளது. இன்னமும் உதவப் போகிறது. சந்திரயான்-2ன் ஆர்பிட்டர் தந்த தகவல் மூலமாக பல விஷயங்களை இஸ்ரோ கற்றுக் கொள்ள முடிந்தது. இதுதான் சந்திரயான் 3 திட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு சாதகமாகவும் அமைந்தது. கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி சந்திரயான் 2ன் ஆர்பிட்டர், சந்திரயான் 3 லேண்டரோடு தொலைத் தொடர்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சந்திரயான்-3 லேண்டரும், ரோவரும் கண்டுபிடிக்கும் ஆய்வு முடிவுகள், சந்திரயான்-2 ஆர்பிட்டர் மூலமாக பூமிக்கு அனுப்பப்பட உள்ளது. இது இரட்டை பாதுகாப்பு அமைப்பாகும். சந்திரயான்-3ன் லேண்டர், ரோவர் ஏதாவது ஒரு கருவி தோல்வி அடைந்தாலும் இன்னொன்றின் தகவல் பூமிக்கு வந்தடைய வேண்டுமென்பதற்காக ஆர்பிட்டர் பயன்படுத்தப்பட்டுள்ளது.

* சினிமா படங்களை விட செலவு குறைவு
இந்தியாவின் முதல் நிலவு திட்டமான சந்திரயான்-1 கடந்த 2008ல் தொடங்கப்பட்டது. இதற்கு ஆன செலவு ரூ.386 கோடி. அடுத்ததாக சந்திரயான்-2 திட்டத்திற்கு ரூ.978 கோடி செலவிடப்பட்டது. இந்த திட்டம் தோல்வி அடைந்தது. மூன்றாவதாக வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்ட சந்திரயான்-3 திட்டத்திற்கு ஆனது ரூ.615 கோடி மட்டுமே. இது நிலவு பற்றிய ஹாலிவுட் படங்களை விட குறைந்த செலவாகும். இன்டர்ஸ்டெல்லர் எனும் ஹாலிவுட் படத்திற்கு ரூ.1368 கோடி செலவிடப்பட்ட நிலையில், சந்திரயான்-3 ரூ.615 கோடியில் சாதித்திருப்பதாக உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் டிவிட்டரில் பாராட்டி உள்ளார். இதுமட்டுமின்றி மற்ற நாடுகளை விட நிலவு திட்டத்திற்கு இந்தியா மிகக் குறைவான செலவில் சாதித்துள்ளது. சமீபத்தில் தோல்வி அடைந்த ரஷ்யாவின் லுனா-25 நிலவு திட்டத்திற்காக செலவிடப்பட்டது சுமார் ரூ.1000 முதல் ரூ.1600 கோடி. இதே போல சீனா கடந்த 2019ல் நிலவில் வெற்றிகரமாக தரை இறக்கிய சாங் 4 விண்கலத்திற்காக ரூ.1400 கோடி செலவிட்டது.

* நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கி சாதித்தது இந்தியா
அமெரிக்கா, சீனா மற்றும் சோவியத் யூனியனுக்குப் பிறகு நிலவில் வெற்றிகரமாக கால்பதித்த 4வது நாடு இந்தியா. அதே சமயம், நிலவின் தென் துருவப் பகுதியில் தரை இறங்கிய உலகின் முதல் நாடு என்ற சாதனையையும் இந்தியா படைத்துள்ளது. இதன் மூலம் உலக விண்வெளி ஆய்வில் இந்தியா தனி முத்திரை பதித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) 3வது நிலவு திட்டம் சந்திரயான்-3. இந்த விண்கலம் கடந்த ஜூலை 14ம் தேதி எல்விஎம்3-எம்4 ராக்கெட் மூலம் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

பயணித்த பாதை
* புவி சுற்றுவட்டப்பாதையில் 5 கட்டங்களாக விண்கலம் உயர்த்தப்பட்டது.
* நிலவை நோக்கி விண்கலம் பயணித்தது
* நிலவின் சுற்றுவட்டப்பாதை
* விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக பிரிந்தது
* நிலவின் சுற்றுவட்டப்பாதையில் குறைக்கப்பட்ட உயரம்
* நிலவில் தரை இறங்கிய இடம்

எப்படி தரை இறங்கியது?
* விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் பிரிந்த பிறகு, 100 கிமீ உயரத்தில், நிலவின் கடைசி கட்ட சுற்றுவட்டப்பாதையில் நுழைந்தது
* 30 கிமீ உயரத்தில் இருந்தபோது லேண்டரின் வேகம் குறைக்கப்பட்டது
* நிலவை 100 மீட்டர் உயரத்தில் நெருங்கியதும், தரை இறங்கக் கூடிய மேற்பரப்பில் உள்ள இடர்பாடுகளை செயற்கை நுண்ணறிவு கருவி மூலம் லேண்டர் ஆய்வு செய்தது
* தரை இறங்கக் கூடிய இடத்தில் எந்த பிரச்னையும் இல்லை என உறுதியானதும், லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரை இறங்கியது.

* லேண்டர் ‘விக்ரம்’
நான்கு கால்களைக் கொண்ட இந்த வாகனம், ரோவர் கருவியுடன் நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. இந்த லேண்டரில் தான் முக்கியமான ஆய்வுக் கருவிகள் இடம் பெற்றுள்ளன.
ஆயுட்காலம்: 1 நிலவு நாள் (14 பூமி நாட்கள்)
எடை: 1,749.86 கிலோ (ரோவருடன் சேர்த்து)
லேண்டர் அளவு: 200 X 200 X 116.6 செமீ
தகவல் தொடர்பு: ரோவர், கட்டுப்பாட்டு மையம், சந்திரயான்-2 ஆர்பிட்டர்

* ரோவர் ‘பிரக்யா’
ஆறு சக்கரங்கள் கொண்ட இந்த வாகனம் சோலார் மூலம் இயங்கக் கூடியது. இதில் நிலவை குடைந்து ஆய்வு செய்யும் லேசர் கருவிகள் இடம் பெற்றிருக்கும்.
ரோவர் ஆயுட்காலம்: 1 நிலவு நாள் (14 பூமி நாட்கள்)
எடை: 26 கிலோ
அளவு:91.7 X 75.0 X 39.7 செமீ
தகவல் தொடர்பு: லேண்டர்

சந்திரயான்-3 திட்டம் வெற்றிபெற பிரார்த்தனை


* நிலவில் சந்திரயான்-3 நல்லபடியாக தரை இறங்க வேண்டும் என்று இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கோயில்களில் பொதுமக்கள் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.
* டெல்லியில் உள்ள ஜன்கல்யாண் சமிதியில் சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற யாகம் வளர்த்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.
* டெல்லியில் உள்ள பங்களா சாகிப் குருத்வாராவில் மத்திய அமைச்சர் ஹர்தீப்சிங் பூரி உள்ளிட்டோர் சிறப்பு பிராத்தனை நடத்தினார். காஷ்மீர் நகரில் உள்ள ஹஸ்ரட்பால் தர்காவில் முஸ்லிம்கள் சிறப்பு ெதாழுகையில் ஈடுபட்டனர்.
* இவை தவிர பல்வேறு இடங்களில் கோயில்களில் பொது மக்கள் சிறப்பு வழிபாடுகள் நடத்தியதுடன், நிலவில் தரையிறங்கியதும் பட்டாசு வெடித்து நாடு முழுவதும் கொண்டாடினர். இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.

விக்ரம் லேண்டரின் பணி என்ன?

* நிலவின் தென் துருவப் பகுதியில் 70 டிகிரி அட்சரேகையில் லேண்டர் தரையிறங்குகிறது. அந்த பகுதியில் தான் சந்திரயான்-3 தனது ஆய்வுகளை செய்யப்போகிறது.
* நிலவில் வெப்பம் அதிகமாக இருக்கும் மண் பகுதியில் நடக்கும் மாற்றங்களை அறிவது, நிலவில் உள்ள பொருட்கள் என்ன நிலையில் உள்ளன, அங்குள்ள வெப்பத்தை தாங்கும் தன்மை கொண்டதா அல்லது வெப்பத்தில் உடையக்கூடிய பொருளாக உள்ளனவா என்பது போன்ற தகவல்களை கண்டறிவது ஆகிய பணிகளை செய்யும். மேலும், பூமியைப் போலவே நிலவிலும் நில அதிர்வுகள் உள்ளதா, இப்போது இல்லை என்றால் முன்பு இருந்ததா, போன்ற தரவுகளையும் சேகரிக்கும்.

புதிய அத்தியாயம்
பிரிட்டன் முதல் விண்வெளி வீராங்கனை ஹெலன்: * பிரிட்டனின் முதல் விண்வெளி வீராங்கனையான ஹெலன் ஷர்மன் கூறும் போது, சந்திரயான் திட்டம் இந்தியாவின் புதிய அத்தியாயத்தின் தொடக்கம். நீங்கள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப இருந்தால் நிச்சயம் உங்கள் பனி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அவர்கள் நீர் குடிக்க விரும்புவார்கள். அவர்கள் தண்ணீரை ஹைட்ரஜன் மற்றும் ஆக்சிஜனாக பிரித்து சுவாசிக்க விரும்புவார்கள். அதிலிருந்து ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருளையும் தயாரிக்கலாம். எனவே பனி மிகவும் அவசியம். ஆனால் நிலவின் தென் துருவத்தில் உள்ள அந்த பள்ளம் உண்மையில் உயர்ந்த விளிம்பைக் கொண்டுள்ளது. மேலும் அந்த விளிம்பில் ஒரு சில பகுதிகளில் நிலையான சூரிய ஒளி இருக்கும். ஒருசில பகுதிகளில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சூரிய ஒளி இருக்கும்.

எனவே நீங்கள் சோலார் மின்சாரத்தை உருவாக்கும் இயந்திரத்தை அங்கு வைத்தால் தொடர்ந்து மின்சாரத்தை உருவாக்கிக் கொண்டே இருக்க முடியும். மனிதர்கள் இல்லாமல் நிலவில் தரையிறங்குவது, மனிதர்களுடன் தரையிறங்குவதை விட கடினமானது. குழுவினர் இல்லாமல் செல்வதால், உங்கள் கருவிகள் சரியான முறையில் வேலை செய்ய வேண்டும். தென் துருவத்தில் மலைகளும் பள்ளங்களும் அதிகமாக இருக்கும். எனவே நிச்சயமாக அது சவாலான விஷயம்தான். அங்கு இயந்திரங்கள் வேகமாக வேலை செய்ய வேண்டும். தூசுகள் பிரச்னைகளாக இருக்க வாய்ப்புள்ளது. இதற்கு முன்பு சீனா, அமெரிக்கா போன்ற நாடுகள் இதை சமாளித்துள்ளன. இந்தியாவில் அதை சமாளித்தால் அது பெரிய விஷயம். ஒட்டுமொத்தமாக விண்வெளி ஆய்வில் இந்தியாவில் நிலவு குறித்த திட்டம் புதிய அத்தியாயத்தின் தொடக்கம் என்று ஹெலன் கூறினார்.

The post அந்தி சாயும் வேளையில் நிலவில் ‘இந்தியா’ உதயம்: வெற்றிகரமாக தரையிறங்கியது சந்திரயான்-3; தென்துருவத்தில் இறங்கிய முதல் நாடு; இஸ்ரோ விஞ்ஞானிகள் வரலாற்று சாதனை appeared first on Dinakaran.

Tags : India ,Tenduruvam ,ISRO ,PM Modi ,Chief Minister ,Mueller G.K. ,Stalin ,Chennai ,South Dinakaran ,Dinakaran ,
× RELATED மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு...