×

காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்; அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி செல்ல கர்நாடகா முடிவு: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த திட்டம்

பெங்களூரு: காவிரி நதிநீர் பிரச்னை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்ற கூட்டம் பெங்களூருவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் நடந்தது.  இதில் துணைமுதல்வர் டி.கே.சிவகுமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமலதா, ஜக்கேஷ், தேஜேஷ்வி சூர்யா, அனுமந்தையா, எஸ்.முனிசாமி, ஜி.எம்.சித்தேஷ்வர், முன்னாள் முதல்வர்கள் எம்.வீரப்பமொய்லி, பி.எஸ்.எடியூரப்பா, டி.வி.,சதானந்தகவுடா, எச்.டி.குமாரசாமி, ஜெகதீஷ்ஷெட்டர், பசவராஜ்மொம்மை, முன்னாள் நீர்ப்பாசன துறை அமைச்சர் கோவிந்த்கார்ஜோள், பேரவை உறுப்பினர் தர்ஷன் புட்டணையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நடந்த ஆலோசனைக்கு பிறகு முதல்வர் சித்தராமையா பேசும்போது, ‘கர்நாடக மாநிலத்தின் நிலம் நீர் மொழி கலாச்சாரத்தை பாதுகாப்பதில் எந்த சமரசமும் கிடையாது. தமிழகத்துக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்ற வேண்டும் என உத்தரவு வந்துள்ள நிலையில் 10 ஆயிரம் கன அடி நீர் தான் திறந்துவிடப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டிற்கு இதுவரை 24 டி.எம்.சி. திறக்கப்பட்டுள்ளது. நமது மாநில அணைகளில் நீர் இல்லாத காரணத்தினால் நடுவர் மன்ற உத்தரவை பின்பற்ற முடியாத சூழ்நிலை நிலவுகிறது. உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தொடர்ந்துள்ள வழக்கு நாளை(இன்று) விசாரணைக்கு வருகிறது.

நமது மாநிலத்தின் நீரை நாம் காப்பாற்ற உச்சநீதிமன்றத்தில் உரிய வாதம் எடுத்து வைக்க வேண்டும். காவிரி மற்றும் மகதாயி நதிநீர் பங்கீடு திட்டங்களில் கர்நாடக மாநிலத்தின் உரிமையை காப்பாற்ற அனைத்து கட்சி தலைவர்கள் குழு டெல்லி சென்று பிரதமரை சந்தித்து மனு அளிக்க வேண்டும். அதற்கு நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மேலும் காவிரி பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டுமானால், காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவது மட்டுமே தீர்வாக இருக்கும். அணை கட்டும் திட்டத்திற்கு அனுமதி வழங்க ஒன்றிய அரசிடமும் அனைத்து கட்சி குழுவினர் வலியுறுத்த வேண்டும்’ என்றார்.

The post காவிரி நதிநீர் பங்கீடு விவகாரம்; அனைத்து கட்சி தலைவர்களுடன் டெல்லி செல்ல கர்நாடகா முடிவு: பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த திட்டம் appeared first on Dinakaran.

Tags : Cauvery ,Karnataka ,Delhi ,PM Modi ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,Dinakaran ,
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக...