×

புழல் சிறையில் பரபரப்பு 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன் பறிமுதல்

புழல்: புழல் சிறையில் 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புழலில் மத்திய விசாரணை சிறை, தண்டனை சிறை, மகளிர் சிறை என 3 சிறைகள் உள்ளன. இங்கு 150க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தண்டனை மற்றும் விசாரணை சிறைகளில் கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் பறிமுதல் செய்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் விசாரணை மற்றும் தண்டனை சிறையில் கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக சிறைத்துறை உயரதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நேற்று கைதிகளிடம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது விசாரணை சிறையில் இலங்கையை சேர்ந்த அலெக்சாண்டர் (40) என்பவர் தங்கியுள்ள அறை கழிவறையில் 2 செல்போன், சிம்கார்டு, பேட்டரி சார்ஜர் இருந்தது தெரியவந்தது. இவர், சென்னை போலீசாரால் போதை பொருள் தடுப்புப்பிரிவு வழக்கில் கைது செய்யப்பட்டு 2020ம் ஆண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேபோல் தண்டனை சிறையில் எர்ணாவூர் சுனாமி குடியிருப்பு பகுதியை சேர்ந்த ரகுமான் (32), நார்வேநாட்டை சேர்ந்த இஸ்ரோ அகஸ்தியன் (46), அலோசிய டேவிட் (50), கொலம்பியா நாட்டை சேர்ந்த எட்வின் ஹென்றி (48) ஆகிய கைதிகள் கழிவறை பின்புறம் செல்போனில் பேசியதை பார்த்து மடக்கிபிடித்தனர். இவர்களிடம் இருந்து 5 செல்போன், 5 பேட்டரிகள், சார்ஜர்கள், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து சிறைத்துறை சார்பில் புழல் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கைதிகளுக்கு செல்போன்கள் எப்படி கிடைக்கிறது. இவர்களுக்கு சிறைத்துறை காவலர்கள் உடந்தையா? அல்லது சிறையில் இருந்து நீதிமன்றம் செல்லும்போது எடுத்து வந்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் புழல் சிறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

The post புழல் சிறையில் பரபரப்பு 5 கைதிகளிடம் இருந்து 7 செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Bustle ,Puzhal Jail ,Puzhal ,Chennai ,
× RELATED புழல் சிறையில் பரபரப்பு காவலருக்கு...