×

குமரிக்குப் பெருமை சேர்க்கும் மட்டி வாழை!

அளவில் சிறியதாக இருக்கும். ஆனால் சுவையில் பட்டையைக் கிளப்பும். அதுதான் மட்டி வாழை. தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியின் அடையாளம் இந்த மட்டி வாழை. இம்மாவட்டத்தில் பிறந்த இந்த வாழைப்பழத்திற்கு இப்போது புவிசார் அடையாளம் கிடைத்திருக்கிறது. நேந்திரன், செவ்வாழை, பாளையங்கோட்டை, சிங்கன், மட்டி, தொழுவன், ரசகதளி என பல ரகங்கள் குமரியில் பயிரிடப்படுகின்றன. ஆனால் மட்டிக்கு எப்போதும் மவுசு ஜாஸ்தி. ஒரு ஆள் சாதாரணமாக ஒரு சீப்பு பழத்தை ஒரே மூச்சில் தின்றுவிடுவார்.

அந்தளவுக்கு ருசி மிகுந்தது. ருசியில் மட்டுமல்ல. பல்வேறு மருத்துவக்குணங்களும் நிறைந்திருப்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த பழமாக மாறியிருக்கிறது மட்டி. குமரிக்கு புவிசார் அந்தஸ்தைப் பெற்றுத்தந்த மட்டி வாழை குறித்து அறிய குமரிக்கு பயணமானோம். எறும்புக்காடு என்ற கிராமத்தில் தனது தென்னந்தோப்பில் இயற்கை முறையில் மட்டி வாழையைப் பயிரிட்டு வரும் மீனாட்சிசுந்தரம் என்ற விவசாயியை சந்தித்தோம். மட்டி வாழை சாகுபடி குறித்து மளமளவென அடுக்க ஆரம்பித்தார் மீனாட்சிசுந்தரம்.

“எம்ஏ ஆங்கிலம் முடித்திருக்கிறேன். கடந்த 1983ம் ஆண்டு முதல் முழுநேரமாக விவசாய பணியில் ஈடுபடுகிறேன். எனக்கு சொந்தமாக 8.5 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. தென்னந்தோப்பில் ஊடுபயிராக வாழை சாகுபடி செய்து வருகிறேன். இதில் செவ்வாழை, மட்டி, ரசகதளி போன்ற வாழை ரகங்களை சாகுபடி செய்திருக்கிறேன். இதில் மட்டி வாழையை 70 சென்ட் நிலத்தில் தென்னைகளுக்கு இடையே ஊடுபயிராக சாகுபடி செய்திருக்கிறேன். இதனைக் கடந்த 20 ஆண்டுகளாக சாகுபடி செய்து வருகிறேன்.

மட்டி வாழையை நடவு செய்வதற்கு, தரமான வாழைக்கன்றை தேர்வு செய்ய வேண்டும். நாங்கள் பெரும்பாலும் அருகில் உள்ள விவசாயிகளிடம் இருந்து தரமான விதைக் கன்றுகளை வாங்கிக்கொள்வோம். விதைக்கன்றை வாங்கி வந்து சூடோமோனாஸ் மருந்தை தண்ணீரில் கலந்து அதில் நனைத்து எடுப்போம். அப்படி எடுக்கும்போது வாழைக்கன்றின் கிழங்குப் பகுதியில் உள்ள வேர்ப்புழு அழிந்துபோகும். அதோடு வேர்வாடல் நோய்த்தாக்குதலும் கன்றுக்கு வராது. இவ்வாறு செய்த பின் 1×1×1 அடி அளவுள்ள குழியெடுத்து கன்றுகளை நடவு செய்வோம்.

நடவு செய்யும்போது தொழுவுரம் இட்டு உயிர்த்தண்ணீர் பாய்ச்சுவோம். பின்பு வாரத்திற்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுவோம். கன்று நடவு செய்யும்போது செடிக்கு செடி 7 அடி இடைவெளி இருக்க வேண்டும். கன்றுகளைச் சுற்றி 1 அடி தூர இடைவெளியில் வட்டப்பாத்தி அமைத்து நீர்ப் பாய்ச்சுவோம். உரமிடவும், பஞ்சகவ்யம் இடவும் இந்த பாத்தியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நான் நாட்டு ரக மட்டியைப் பயிர் செய்திருக்கிறேன். இது நல்ல மணமாக இருக்கும். ஒரு ஏசி ரூமில் ஒரு மட்டி வாழைப்பழத்தை வைத்தால் போதும். நல்ல வாசனை வரும். அதேபோல ருசியும் அபாரமாக இருக்கும். இதைக் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு முதல் உணவாக மட்டிப்பழத்தை மசித்து ஊட்டி விடும் பழக்கம் இன்றும் நடைமுறையில் இருக்கிறது. மட்டியில் செம்மட்டி போன்ற வேறு ரகங்களும் உள்ளன.

செம்மட்டி சிறிது புளிப்புச்சுவை கொண்டதாக இருக்கும். முந்திரிப்பழம் சாப்பிடும் உணர்வைத் தரும். எனது 70 சென்ட் நிலத்தில் 450 மட்டி வாழை மரங்கள் உள்ளன. மட்டியை தனிப்பயிராக சாகுபடி செய்தால் ஏக்கருக்கு 900 கன்றுகள் தேவைப்படும். ஊடுபயிராக செய்தால் 700 கன்றுகள் தேவை. கன்றை நடவு செய்ததில் இருந்து 3, 5, 7 ஆகிய மாதங்களில் சாண உரம் வைப்பேன். சாணம் உரத்துடன் அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டிரியா ஆகியவை கலந்து உரமாக வைக்கிறேன். அதனுடன் மண்புழு உரமும் வைத்து வருகிறேன்.

ஒரு டெம்போ சாணம் உரத்திற்கு அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்ரியா 1 கிலோ சேர்த்து கலந்து வைக்கவேண்டும். அசோஸ் பைரில்லம் காற்றில் உள்ள தழைச்சத்துகளை எடுத்து பயிருக்கு கொடுக்கும். பாஸ்போ பாக்டிரியா மணிச்சத்தை எடுத்து வாழைகளுக்கு கொடுக்கும். இதனால் வாழைகளுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து சத்துகளும் கிடைக்கிறது. ஒரு வாழைக்கு ஒரு பெட்டி (15 கிலோ) சாண உரம் வைக்கவேண்டும். மாதம் ஒருமுறை ஒரு மரத்திற்கு 1 கிலோ அளவில் மண்புழு உரம் இடுகிறோம். இதன்மூலம் மரத்திற்கு நல்ல சத்து கிடைத்து குலை திரட்சியாக காய்க்க உதவும்.

அதேபோல மாதம் ஒருமுறை 1 லிட்டர் பஞ்சகவ்யத்தை மரத்திற்கு இடுவோம். மட்டி வாழைக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ளது. இருந்தபோதும் மட்டியை நடவு செய்த 5வது மாதத்தில் தண்டுதுளைப்பான் பாதிப்பு ஏற்படும். எனவே 5வது மாதத்தில் இருந்து 15 நாட்களுக்கு ஒரு முறை என 3 முறை வாழையின் தண்டுகளில் வேப்ப எண்ணெயை அடித்து வருகிறேன். இது நல்ல பலனைத் தருகிறது.

இதுபோல் சிறப்பாக பராமரிப்பு செய்து வந்தால் நடவு செய்த 7வது மாதத்தில் குலை (தார்) வரத்தொடங்கும். குலை வந்து 120 நாட்கள் கடந்த பிறகு அறுவடை செய்யலாம். நடவு செய்து அறுவடை செய்யும் வரை வேலையாட்கள் கூலி, அதற்கு உண்டான உரம் என ஒரு மரத்திற்கு மொத்தம் ரூ.120 செலவு ஆகும். 450 மரத்தில் 50 மரங்கள் கழிவு போனாலும் 400 மரங்கள் நிச்சயம் பலன் அளிக்கும். 400 மரத்திற்கும் 48 ஆயிரம் செலவாகும். மட்டியைப் பொறுத்தவரை விற்பனையில் எந்த சிக்கலும் இருக்காது.

ஒட்டு மொத்தமாக வாழைப்பழங்களுக்கு விலையில்லாத போது கூட மட்டிப்பழம் குலை ரூ.250க்கு விலை போகும். தற்போது குமரி மாவட்டத்தில் மட்டி வாழையின் விலை உயர்ந்துள்ளது. சிறிய குலைகளே ரூ.600க்கு விற்கப்படுகிறது. பெரிய குலைகள் ரூ.1000 முதல் ரூ.1200 வரை விற்பனையாகி வருகிறது. ஒரு தார் குறைந்தபட்சம் ரூ.500க்கு விற்றால் கூட செலவு போக ஒரு தாருக்கு ரூ.380 லாபமாக கிடைக்கும்.

70 சென்டில் உள்ள 400 மரங்கள் மூலம் ரூ.1 லட்சத்து 52 ஆயிரம் தற்போதைய மதிப்பில் லாபமாக கிடைக்கும். மட்டிவாழை சாகுபடி செய்யும் விவசாயிகள் நஷ்டம் அடைவதே இல்லை. இப்பழத்திற்கு இப்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளதால் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பும் கூடியிருக்கிறது என்கிறார்.

மதிப்புக்கூட்டி விற்பனை

வாழைப்பழத்தை மதிப்புக்கூட்டி விற்பனை செய்தால் அதிக லாபம் ஈட்டலாம். திருச்சி மாவட்டம் துறையூரில் வாழைப் பழத்தை மதிப்புக்கூட்டி விற்பனை செய்கிறார்கள். அதுபோன்று மட்டி வாழைப்பழத்தை சாக்லேட் போன்று மதிப்புக்கூட்டி விற்பனை செய்ய முடிவு செய்திருக்கிறார் மீனாட்சிசுந்தரம். மட்டி வாழைப்பழத்தின் தோலை பிரித்து எடுத்துவிட்டு, பழத்தை 4 நாட்கள் உலர்ப்பானில் வைத்து உலரவைத்து, பாக்கெட்டுகளில் ஒரு பழம் வீதம் அடைத்து விற்பனை செய்யலாம். பழத்தை தேனில் ஊற வைத்து அதனை உலர்ப்பானில் காயவைத்தும் விற்பனை செய்யலாம். இதற்காக சில பிராசஸ் உள்ளது. அவற்றை சரிசெய்துவிட்டு மட்டி வாழைப் பழத்தை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளார்.

நேருவைக் கவர்ந்த மட்டிப்பழம்

ஜவகர்லால் நேரு பாரத பிரதமராக இருந்தபோது ஒருமுறை திருவனந்தபுரம் வந்திருக்கிறார். அப்போது அவருக்கு குமரியில் விளைந்த மட்டி வாழைப்பழத்தைக் கொடுத்து உபசரித்திருக்கிறார்கள். மட்டி வாழைப்பழத்தை ருசித்த நேரு, அதன் ரசிகராகவே மாறி இருக்கிறார். இந்தப் பழம் போல நான் வேறு ஒரு பழத்தை சாப்பிடவில்லை என மகிழ்ந்து கூறியிருக்கிறார். அதன்பிறகு அவரது விருப்பத்தின் பேரில் டெல்லிக்கு மட்டி வாழைப்பழங்களை அனுப்பி வைத்ததாக ஒரு கதை இருக்கிறது.

அடர்முறை சாகுபடி

கடந்த 2009ம் ஆண்டில் மீனாட்சி சுந்தரம் மட்டி வாழையை அடர்நடவு முறையில் சாகுபடி செய்திருக்கிறார். ஒரு வாழை நடவு செய்யும் இடத்தில் 3 வாழைகளை நடவு செய்திருக்கிறார். இதனால் அதிக மகசூல் கிடைத்துள்ளது. இதற்காக குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை ரூ.10 ஆயிரம் ரொக்கப்பரிசுடன், சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளது. அடர்நடவு முறையில் ஒரு சிக்கல் உள்ளது. ஒரு வாழையில் நோய்த்தாக்குதல் ஏற்பட்டால், அதன் அருகே நிற்கும் மற்ற இரண்டு வாழைகளும் பாதித்துவிடும். இதனால் அந்த முறையைக் கைவிட்டிருக்கிறார்.

புவிசார் குறியீடு

இந்தியாவில் சில பகுதிகளில் தனித்துவமாக உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு அளிக்கப்பட்டு அங்கீகாரம் தரப்படுகிறது. மற்ற மாநிலங்களை விட தமிழகமே அதிக அளவில் புவிசார் குறியீட்டைப் பெற்றிருக்கிறது. மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, பழனி பஞ்சாமிர்தம், மணப்பாறை முறுக்கு, சேலம் ஜவ்வரிசி, ஆத்தூர் வெற்றிலை, ஊட்டி வர்க்கி, கம்பன் பள்ளதாக்கு பன்னீர் திராட்சை, சேலம் சுங்குடி சேலை, காஞ்சிபுரம் பட்டு, திருவில்லிபுத்தூர் பால்கோவா உள்ளிட்ட தமிழகத்தின் தனித்துவம் வாய்ந்த 56 பொருட்களுக்கு இதுவரை புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டு அரசின் வேளாண் துறை சார்பில் குமரி மாவட்ட மட்டி வாழைக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு அறிவிப்பு வெளியானது. அதன்படி தற்போது குமரி மாவட்ட மட்டிப்பழத்திற்கு புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.

தொடர்புக்கு:
மீனாட்சிசுந்தரம் – 94438 44752

தொகுப்பு: ச.உமாசங்கர்

The post குமரிக்குப் பெருமை சேர்க்கும் மட்டி வாழை! appeared first on Dinakaran.

Tags : Kanyakumari, ,Kadakodi district ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED கன்னியாகுமரியில் கடல் சீற்றம்...