×

பக்தர்கள் உடமைகளை எளிதில் டெபாசிட் செய்து பெற திருப்பதியில் ₹3 கோடியில் கியூஆர் கோடு தொழில்நுட்பம்

*செயல் அதிகாரி தொடங்கி வைத்தார்

திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் உடமைகளை எளிதில் டெபாசிட் செய்து பெற்றுக்கொள்ள ₹3 கோடியில் கியூஆர் கோடு தொழில்நுட்பத்தை செயல் அதிகாரி தர்மா தொடங்கி வைத்தார்.உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு நாளுக்கு நாள் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்கள் வாரி மெட்டு, மற்றும் அலிபிரி மலைப்பாதையில் நடந்து செல்லும் பக்தர்களின் உடமை மற்றும் செல்போன்களை திருமலைக்கு இலவசமாக எடுத்துச்செல்லும் திட்டம் கடந்த 2008ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

இதேபோன்று திருமலையில் சுவாமி தரிசனத்திற்காக செல்லும் பக்தர்கள் தங்களது உடமைகள் மற்றும் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ஆங்காங்கே பல இடங்களில் உடமை பாதுகாப்பு மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் பக்தர்கள் தங்களது உடமை மற்றும் மொபைல் போன்களை விரைவாகவும், எளிதாகவும் டெபாசிட் செய்து திரும்ப பெற்றுக்கொள்ளும் வகையில் ₹3 கோடியில் பாலாஜி பேக்கேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் எனும் பெயரில் டிஜிட்டல் மற்றும் ஆட்டோமேஷன் மூலம் செயல்படுத்தப்படும் திட்டத்தை திருமலை அன்னமய்யா பவனில் நடந்த நிகழ்ச்சியில் செயல் அதிகாரி தர்மா நேற்று தொடங்கி வைத்து அறிமுகப்படுத்தினார்.

அதனை தொடர்ந்து, முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோருடன் இணைந்து செயல் அதிகாரி தர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது : செல்போன்களை டெபாசிட் செய்தால், திரும்ப பெறுவதில் தாமதம் ஏற்படும் என நினைத்து சில பக்தர்கள் செல்போன்களை கோயிலுக்கு கொண்டு செல்ல முயற்சி செய்கின்றனர். தற்போதைய முறையில், லக்கேஜ்கள், மொபைல் போன்கள் மற்றும் இதர எலக்ட்ரானிக் பொருட்களை டெபாசிட் செய்தால் நீண்ட நேரம் காத்திருக்காமல் எளிதாக திரும்ப பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பக்தர்கள் கவுண்டருக்கு வந்ததும், தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு, அவர்களின் விவரங்கள் ஆட்டோமெட்டிக் முறையில் தானாக சேமிக்கப்படும். தரிசன டிக்கெட் இல்லாத பக்தர்களுக்கு, அவர்களின் விவரங்கள் மற்றும் பெயரை உள்ளீடு செய்து கியூ ஆர் கோடு ஜெனரேட் செய்யப்பட்டு பையில் இணைக்கப்படும். பக்தர்களுக்கு அதே கியூஆர் கோடு கொண்ட ரசீது வழங்கப்படும்.

அதேபோல், மொபைல் டெபாசிட் செய்யும் போது, ​​தரிசன டிக்கெட், ஆதார் மற்றும் பக்தர்களின் விவரங்கள் சேகரிக்கப்படும். அதன்பின், மொபைல்களை, பையில் பாதுகாப்பாக வைத்து, கியூஆர் கோடு குறியீட்டுடன் இணைத்து, ரசீது பக்தர்களுக்கு வழங்கப்படும். பக்தர்கள் உடமைகள் கொண்டு செல்லும் வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல், லக்கேஜ் கவுன்டருக்கு வெளியே உள்ள டிஸ்பிளே இயந்திரத்தின் மூலம் ரசீதுகளை ஸ்கேன் செய்தால், லக்கேஜ் வந்ததா இல்லையா என்பதை தெரிந்து கொள்ளலாம். பக்தர்களின் ரசீதை எலக்ட்ரானிக் கருவி மூலம் ஸ்கேன் செய்வதன் மூலம் அவர்களின் மொபைல் எண் மற்றும் லக்கேஜ்கள் வைக்கப்பட்டுள்ள செல்ப் ரேக் ஆகியவை தெரிந்து கொண்டு உடமைகளை எளிதாக எடுக்கப்பட்டு வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் ஒரு மாதமாக சோதனை முறையில் தினமும் 60 ஆயிரம் செல்போன்கள், 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பைகள் டெபாசிட் செய்யப்பட்டு டெலிவரி செய்யப்படுகிறது. தற்போதைய முறைப்படி, 16 மையங்கள் மூலம் 44 கவுன்டர்களில் இந்த செயல்முறை கொண்டு வரப்பட்டுள்ளது. ₹300 சிறப்பு நுழைவு தரிசனம், திவ்ய தரிசனம், சர்வதர்ஷன், சுபதம், வாரி மெட்டு, அலிபிரி ஆகிய இடங்களில் உடமைகள் வைக்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல் லக்கேஜ் மையங்களில் 20 கவுன்டர்களும், ஜிஎன்சியில் 6 கவுன்டர்களும், டிபிசியில் 2 என திரும்ப பெறும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.அதைத்தொடர்ந்து, முதன்மை பாதுகாப்பு அதிகாரி நரசிம்ம கிஷோர், ஜிஎன்சி டோல்கேட்டில் உள்ள லக்கேஜ் டெபாசிட் கவுண்டரை ஆய்வு செய்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த இயந்திரத்தில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட ரசீதை ஸ்கேன் செய்து, லக்கேஜ் எங்கே உள்ளது என்பதை பக்தர்கள் சுலபமாக தெரிந்து கொண்டு பெறுவதையும் பார்வையிட்டார். மேலும் பக்தர்களுக்காக தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், புதிய செயல் முறையில் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளும்விதமாக அமைக்கப்பட்டுள்ளது என்றார்.

சென்னையை சேர்ந்தவர் ₹2 கோடி நன்கொடை

இந்த புதிய முறை செயல்படுத்த பெங்களூருவைச் சேர்ந்த நன்கொடையாளர் வேணுகோபால் ₹1 கோடியும், ஐதராபாத்தைச் சேர்ந்த ட்ராக் இட் தலைமை நிர்வாக அதிகாரி வேதாந்தம் சோமசேகர் ₹17 லட்சமும், சென்னையைச் சேர்ந்த கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த சார்லஸ் மார்டின் எனும் பக்தர் ₹2 கோடியில் ஹார்டுவேருக்காக நன்கொடை அளித்துள்ளார். ஏற்கனவே சார்லஸ் மார்டின் கொரோனா காலக்கட்டத்தில் தேவஸ்தானத்தின் பர்டு மருத்துவமனைக்கு ₹5 கோடி நன்கொடை வழங்கியது குறிப்பிடத்தக்கது என தேவஸ்தான செயல் அதிகாரி தர்மா தெரிவித்தார்.

The post பக்தர்கள் உடமைகளை எளிதில் டெபாசிட் செய்து பெற திருப்பதியில் ₹3 கோடியில் கியூஆர் கோடு தொழில்நுட்பம் appeared first on Dinakaran.

Tags : Tirupati ,Tirumala ,Tirupati Seven Malayan Temple ,
× RELATED 16 மணிநேரம் காத்திருந்து திருப்பதியில் தரிசனம்