×

22 மணி நேர சோதனை இன்று அதிகாலை நிறைவு கேரள மாஜி அமைச்சரின் ரூ.40 லட்சம் நிரந்தர வைப்பு தொகை திடீர் முடக்கம்: ஆவணங்கள் இல்லாமல் பினாமிகளுக்கு கடன் கொடுத்த பத்திரங்கள் பறிமுதல்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூர் அருகே கூட்டுறவு வங்கியில் ரூ.300 கோடி மோசடி நடந்தாக எழுந்த புகாரில் மாஜி அமைச்சரும், மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான மொய்தீனின் வீட்டில் நடந்த 22 மணி நேர சோதனை இன்று அதிகாலை 5 மணிக்கு நிறைவடைந்தது. அவரது ரூ.40 லட்சம் நிரந்தர வைப்பு தொகையை முடக்கி வைத்துள்ள அமலாக்கத்துறை, பினாமிகளுக்கு போதிய ஆவணங்கள் இல்லாமல் கடன் கொடுத்த பத்திரங்களை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள கருவன்னுரில் கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்த வங்கியில் சுமார் ரூ.300 கோடிக்கும் மேல் முறைகேடுகள் நடந்ததாக கடந்த வருடம் புகார் எழுந்தது. போதிய ஆவணங்கள் இல்லாமல் பலருக்கு கோடிக்கணக்கில் கடன் கொடுத்ததாகவும், கடன் வாங்கிய பலர் திருப்பி கட்டாமல் ஏமாற்றியதாகவும் புகார் கூறப்பட்டது. கடந்தாண்டு பினராயி விஜயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவரும், தற்போதைய மார்க்சிஸ்ட் எம்எல்ஏவுமான மொய்தீனின் உறவினர்களுக்கும் மோசடியில் தொடர்பு இருப்பதாக தகவல்கள் பரவின. இது தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

இந்நிலையில் நேற்று திருச்சூர் வடக்காஞ்சேரியில் உள்ள எம்எல்ஏ மொய்தீனின் வீட்டில் அமலாக்க துறையினர் திடீர் சோதனை நடத்தினர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை விடிய விடிய நடந்தது. இன்று அதிகாலை சுமார் 5 மணிக்கு தான் முடிவடைந்தது. 22 மணி நேரம் நடந்த இந்த சோதனையின் போது பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. எம்எல்ஏ மொய்தீனிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மொய்தீன் கேரள மார்க்சிஸ்ட் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவர்.

முதல்வர் பினராயி விஜயனுக்கு மிகவும் நெருக்கமானவர். அவரது வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி உள்ளது கேரள அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே எம்எல்ஏ மொய்தீனின் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் பல்வேறு முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அவரது பினாமிகள் பலருக்கு போதிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் பல கோடி ரூபாய் கடன் கொடுத்தது தொடர்பான பத்திரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேலும் இந்த வங்கியில் மொய்தீன் ரூ.40 லட்சம் நிரந்தர வைப்பு கணக்கில் வைத்திருந்தார். அந்த பணத்திற்கு போதிய ஆவணங்களை மொய்தீனால் காண்பிக்க முடியவில்லையாம். ஆகவே அதை அமலாக்கத்துறை முடக்கி வைத்துள்ளது. அவரிடம் விசாரணை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இது தொடர்பாக அமலாக்கத்துறை நோட்டீஸ் கொடுக்க தீர்மானித்துள்ளது.

The post 22 மணி நேர சோதனை இன்று அதிகாலை நிறைவு கேரள மாஜி அமைச்சரின் ரூ.40 லட்சம் நிரந்தர வைப்பு தொகை திடீர் முடக்கம்: ஆவணங்கள் இல்லாமல் பினாமிகளுக்கு கடன் கொடுத்த பத்திரங்கள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Kerala ,benami ,Thiruvananthapuram ,Thrissur, Kerala ,Dinakaran ,
× RELATED மனைவி பிரிந்ததால் வேதனை; தற்கொலையை...