×

படகு குழாம், நடைபயிற்சி மேடையும் அமைகிறது மீறுசமுத்திரம், தாமரைக்குளம் கண்மாய்களில் பூங்கா

*மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்ற நகராட்சி நடவடிக்கை

தேனி : தேனி நகரின் மத்தியில் உள்ள மீறு சமுத்திரம் கண்மாயில் படகுகுழாம் அமைத்து, நடைபயிற்சி மேடை மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேனி நகரின் மத்தியில் தேனி தாலுகா அலுவலகம் அருகில் சமார் 102 ஏக்கர் பரப்பளவில் மீறு சமுத்திரம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கு மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து வரும் நீரினை ஆதாரமாக கொண்ட பனசலாற்றில் இருந்து நீர்வரத்து உள்ளது. இந்த கண்மாய் நீரினைக் கொண்டு சுமார் 54 ஹெக்டேர் நிலப்பரப்பு பாசன வசதி பெற்று வருகிறது.

ஆண்டு முழுவதும் நீர்வரத்து உள்ளதால் இக்கண்மாயில் எப்போதும் நீர்நிரம்பியே உள்ளது. இதனால் இக்கண்மாய்க்கு அபூர்வ ரக பறவைகள் ஏராளமானவை வந்து இனப்பெருக்கம் செய்து செல்கிறது. இக்கண்மாயில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.4 கோடி மதிப்பீட்டில் கரையை பலப்படுத்தி, கண்மாய்க்குள் 3 உறை கிணறுகள் அமைக்கப்பட்டது. மேலும், 2 மதகுகள் புதுப்பிக்கும் பணியும் நடந்தது. இத்தகைய கண்மாய் நீரினை ஆதாரமாக கொண்டு தேனி அல்லிநகரம் நகராட்சியில் சுமார் 12 வார்டுகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து, இப்பகுதி மக்களுக்கான நிலத்தடி நீர்ஆதாரமாகவும் உள்ளது.

தேனி நகரானது மாவட்ட தலைநகரானதையடுத்து, கடந்த 26 ஆண்டுகளில் நகரின் மக்கள் தொகை ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 360 ஆக உயர்ந்துள்ளது. நாள்தோறும் பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியவும், பல்வேறு அரசுத் துறை அலுவலகங்களுக்கும், அலுவல் காரணமாக அலுவலகங்களுக்கும் என தேனி நகருக்கு நாள்தோறும் சுமார் 5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். ஆனால் தேனி நகரில் பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு அம்சத்திற்கு எந்தவொரு இடமும் இல்லாத நிலை உள்ளது. இதேபோல தேனி நகரில் வசிப்போர் நடைபயிற்சி செல்வதற்கும் இடவசதி இல்லை.

எனவே தேனி நகரின் மத்தியில் பொதுப்பணித்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள மீறு சமுத்திரம் கண்மாய் பகுதியில் நடைபயிற்சிக்கான நடைமேடையை கண்மாய் கரையில் அமைக்கவேண்டும், சிறுவர்கள் குடும்பத்தினருடன் சேர்ந்து விளையாடி மகிழ விளையாட்டு பூங்கா அமைக்க வேண்டும், இக்கண்மாயில் வருடம் முழுவதும் நீர் நிரம்பியே உள்ளதாலும், இக்கண்மாய் பாசனத்தை நம்பி விளைநிலங்கள் இல்லாத காரணத்தால் இக்கண்மாய்க்குள் படகு குழாம் அமைக்க வேண்டும் எனவும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தேனி நகரின் மத்தியில் அமைந்துள்ள மீறு சமுத்திரம் கண்மாய் போலவே தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தாமரைக்குளம் கண்மாய் உள்ளது. இக்கண்மாய்க்கான நீராதாரமாக மீறுசமுத்திரம் கண்மாயில் இருந்து மறுகால் பாயும் நீரும், கொட்டக்குடி ஆற்றில் இருந்து ராஜவாய்க்கால் நீரினையும் ஆதாரமாக கொண்டுள்ளது.

தேனி நகரில் சுமார் 44 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பாதாள சாக்கடை நீர் அனைத்தும் கருவேல்நாயக்கன்பட்டியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கழிவுநீரேற்று சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டு, சுத்திகரிக்கப்பட்ட சுத்தமான நீர் அங்கிருந்து தாமரைக்குளம் கண்மாயில் கொண்டு வந்து நிரப்பப்பட்டுள்ளது. இக்கண்மாய்க்கு நீர்க்காக்கைகள், பறவைகள் வந்து செல்கின்றன. இதனை பார்க்க கண்மாய் கரைக்கு ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.

தாமரைக்குளம் கண்மாய் பகுதியில் சமீபகாலமாக விரிவாக்க குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து வருகின்றன. எனவே, இப்பகுதி மக்களும் நடைபயிற்சி மேற்கொள்ள இடம் தேடி சிரமம் அடைந்து வருகின்றனர். மாநில சுகாதாரத் துறை நாள்தோறும் பொதுமக்கள் சுமார் 8 கிமீ தூரம் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தி வருகிறது. இதற்காக நடைபயிற்சி மேற்கொள்ள தகுதியான இடங்களை அந்தந்த மாவட்ட நிர்வாகம் தேர்வு செய்து வருகிறது. இதன்படி, தேனி நகரில் நடைபயிற்சி மேற்கொள்ள தகுதியான இடங்களாக மீறு சமுத்திரம் கண்மாய் மற்றும் தாமரைக்குளம் கண்மாய் உள்ளன. எனவே, இவ்விரு கண்மாய்கரைகளிலும் நடைபயிற்சி மேடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இது குறித்து தேனி அல்லிநகரம் நகர்மன்ற சேர்மன் ரேணுப்பிரியா பாலமுருகனிடம் கேட்டபோது, தேனி நகரில் நடைபயிற்சி மேற்கொள்ள தகுதியான கண்மாய்களாக மீறுசமுத்திரம் கண்மாய், தாமரைக்குளம் கண்மாய், சின்னக்குளம் கண்மாய் பகுதிகள் உள்ளன. இதில் மீறுசமுத்திரம் கண்மாயில் நடைபயிற்சி மேடை சிறுவர் பூங்கா, படகுதுறை அமைக்க நீண்டகாலமாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக கடந்த காலங்களில் பொதுப்பணித்துறை நிர்வாகம் திட்டமதிப்பீடு செய்துள்ளது. ஆனால் ஏதோ காரணங்களுக்காக இத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

தற்போது சுற்றுலாத்துறையினை மேம்படுத்த தமிழக அரசு முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்காரணமாக சமீபத்தில் தேனி வந்த சுற்றுலாத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. கோரிக்கையை கேட்ட அமைச்சரும், மீறுசமுத்தரம் கண்மாய் பகுதிக்கு நிதி ஒதுக்குவதாக உறுதி அளித்துள்ளார்.

மேலும், பொதுப்பணித் துறை நிர்வாக ஒத்துழைப்போடு மீறு சமுத்திரம் கண்மாய் பகுதியில் நடைபயிற்சி மேடை, சிறுவர்விளையாட்டு பூங்கா, படகுதுறை அமைக்கவும், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள தாமரைக்குளம் கண்மாய் கரையிலும் நடைபயிற்சி மேடை அமைக்க தேவையான நடவடிக்கைகளை நகராட்சி நிர்வாகம் எடுத்து வருகிறது. இதற்காக நகர்மன்றம் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விரைவில் இப்பணிகளை துவக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது என்றார்.

The post படகு குழாம், நடைபயிற்சி மேடையும் அமைகிறது மீறுசமுத்திரம், தாமரைக்குளம் கண்மாய்களில் பூங்கா appeared first on Dinakaran.

Tags : Kanmailai ,Prachidusamudram ,Tamaraikulam ,Theni ,Kardhu Samutram Kanmai ,
× RELATED கன்னியாகுமரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை!!