×

சேரங்கோடு ஊராட்சி கூட்டத்தில் குழந்தைகளுடன் வந்து அடிப்படை வசதிகள் கேட்ட பழங்குடி மக்கள்

பந்தலூர் : சேரங்கோடு ஊராட்சியின் மாதாந்திர கூட்டத்தில் சப்பந்தோடு குழிவயல் பழங்குடியின மக்கள் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வலியுறுத்தி கோரிக்கை வைத்தனர்.
நீலகிரி மாவட்டம், சேரங்கோடு ஊராட்சி மன்றத்தின் மாதாந்திர கூட்டம் தலைவர் லில்லி எலியாஸ் தலைமையில் நேற்று நடைபெற்றது. ஊராட்சி செயலாளர் சஜீத் வரவேற்றார.

சேரம்பாடி அருகே சப்பந்தோடு குழிவயல் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் மன்ற கூட்டத்திற்கு குழந்தைகளுடன் வருகை தந்து தங்கள் கிராமத்திற்கு அடிப்படை வசதிகளான நடைபாதை, மின்சாரம், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினர். தொடர்ந்து தலைவர் மற்றும் செயலாளரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர். அதனை தொடர்ந்து பழங்குடியின மக்கள் அங்கிருந்து சென்றனர்.

தொடர்ந்து துணை தலைவர் சந்திரபோஸ் பேசுகையில், ‘100-நாள் வேலைத்திட்ட பணிகள் தலைவருடைய கவனத்திற்கு தெரியாமல் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து விளக்கம் கொடுக்க வேண்டும் என்றார். கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன் பேசுகையில், ‘15 வது நிதிகுழு சார்பில் நடைபெற்ற பணிகள் குறித்து ஆய்வு செய்யவேண்டும். தரமற்ற பணிகள் நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இது தொடர்பாக மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி மாவட்ட கலெக்டருக்கு அனுப்புவதற்கு தலைவர் நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் ரூ.5 ஆயிரத்திற்கு மேல் செலவு செய்வதற்கு மன்றம் ஒப்புதல் பெற வேண்டும். இந்நிலையில் சாலையோரத்தில் முட்புதர்கள் அகற்றுவதற்கு, தலைவர் மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெறாமல் பொதுநிதியை செலவு செய்தது குறித்து விளக்கம் வேண்டும்.

விளக்கம் தரவில்லை என்றால் பெரும்பாலான கவுன்சிலர்களுடன் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் இதற்கு தலைவர் மற்றும் செயலாளர் விளக்கம் அளிக்கவேண்டும்’ என்றார்.
தலைவர் லில்லி பதில் அளித்து பேசுகையில், ‘சமீபத்தில் யானை தாக்கி பெண் பலியான சம்பவத்தின் போது சாலையோரத்தில் உள்ள முட்புதர்களை அகற்றுவதற்கு கோட்டாட்சியர் உத்தரவிட்டதால் அதன்படி சாலையோரத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றுவதற்கு நிதி செலவு செய்துள்ளோம்’ என்றார்.

கவுன்சிலர் வினோத்கண்ணா பேசும்போது, ‘ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி முறையாக நடைபெறவில்லை, மனித-வன விலங்குகள் மோதலை தடுப்பதற்கு ஊராட்சியில் யானை நடமாட்டம் உள்ள பகுதிகளில் சாலையோரத்தில் உள்ள முட்புதர்களை அகற்றவேண்டும். பிடிஓ உள்ளிட்ட அதிகாரிகள் மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும்’ என்றார். அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டில் உள்ள பிரச்சனைகள் குறித்து பேசினர்.

15-வது நிதி குழு சார்பில் நடை பெற்ற பணிகள் குறித்து தீர்மானம் நிறைவேற்றவேண்டும் என தலைவரிடம் கோரிக்கை வைத்து துணை தலைவர் உள்ளிட்ட பெரும்பான்மை கவுன்சிலர்கள் வலியுறுத்தினர். தலைவர் லில்லி உடல்நிலை சரியில்லை மருத்துவரிடம் செல்லவேண்டும் என மன்ற கூட்டத்தில் இருந்து சென்றார்.

அவரை தொடர்ந்து சில கவுன்சிலர்களும் வெளியே சென்றனர். செயலாளர் முக்கிய கூட்டம் இருப்பதாக கூறி சென்றார். துணை தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

The post சேரங்கோடு ஊராட்சி கூட்டத்தில் குழந்தைகளுடன் வந்து அடிப்படை வசதிகள் கேட்ட பழங்குடி மக்கள் appeared first on Dinakaran.

Tags : Cherangode ,panchayat ,Bandalur ,Sappantodu Valley ,
× RELATED பொது மயானத்தில் உணவு கழிவுகள் கொட்டுவதை தடுக்க கோரிக்கை