×

2022, 23ம் ஆண்டு குறுவை, சம்பா, கோடை பருவத்தில் 8 லட்சத்து 32 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல்

*விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1,778 கோடி ரொக்கம் வரவு வைப்பு

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் 2022, 23ம் ஆண்டு குறுவை, சம்பா மற்றும் கோடை பருவத்தில் 8 லட்சத்து 32 ஆயிரம் மெ.டன் கொள்முதல் செய்யப்பட்டு விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ.1,778 கோடி ரொக்கம் வரவு வைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணையானது கடந்தாண்டு வரலாற்றிலேயே இல்லாத வகையில் முன்கூட்டியே மே மாதம் 24ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் மூலம் திறந்து வைக்கப்பட்டது. அடுத்த ஒருசில நாட்களிலேயே கடைமடை வரை காவிரி நீர் சென்றடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடியை, விவசாயிகள் உடனடியாக துவங்கினர்.

அதன்படி, திருவாரூர் மாவட்டத்திலும் சாகுபடி பணிகள் துவங்கிய நிலையில் இதற்கான விதை, உரங்கள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இருப்பு வைக்கப்பட்டு வழங்கப்பட்டது. மேலும், குறுவை தொகுப்பு திட்டமாக மாவட்டத்திற்கு என ரூ.13 கோடியே 57 லட்சம் ஒதுக்கி 100 சதவீத மானியத்தில் ரசாயன உரங்கள், கூட்டுறவு துறையின் மூலம் விவசாய கடன்களும் வழங்கப்பட்டதால் சாகுபடி என்பது வழக்கமான பரப்பளவை விட கூடுதாலாக 57 ஆயிரம் ஏக்கரில் என மொதத்தம் ஒரு லட்சத்து 54 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது.

இந்நிலையில் தமிழக வரலாற்றில் இதுவரையில் இல்லாத வகையில் செப்டம்பர் 1ம் தேதியே குறுவை நெல் கொள்முதல் பருவம் துவங்கப்பட்டு விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இந்நிலையில் மாவட்டத்தில் ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 25 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மேலும் நெல்லுக்கான ஆதார விலையாக ஒன்றிய அரசு விலையுடன் பொது ரகத்திற்கு ரூ.75ம், சன்ன ரகத்திற்கு ரூ.100ம் உயர்த்தி வழங்கப்பட்டது.பொது ரகம் ரூ.2,115, சன்ன ரகம் ரூ.2,160க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

அடுத்ததாக சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடியை விவசாயிகள் மும்முரமாக மேற்கொண்டனர். மாவட்டத்தில் நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவு எனப்படும் செம்மை நெல் சாகுபடி மற்றும் சாதாரண நடவு முறை என சம்பா மற்றும் தாளடி பயிராக 3 லட்சத்து 72 ஆயிரத்து 994 ஏக்கரில் சாகுபடி நடைபெற்றது. தேவையான உரங்கள்தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வணிக வங்கிகள் மூலம் வழங்கப்பட்டது.

தேவையான ரசாயன உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்துக்கள் போன்றவையும் கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் உரிய காலத்தில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் அறுவடை நடைபெற்று வழக்கம் போல் இந்த நெல்கள் அனைத்தும் விவசாயிகளிடமிருந்து அரசு நேரடி நெல் கொள்முதல் செய்யும் நிலையங்கள் மூலம் கொள்முதல் செய்யப்பட்டன.

அதன்படி, சம்பா பருவத்தில் 5 லட்சத்து 40 ஆயிரத்து 238 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கோடை பருவமாக ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 80 மெ.டன் என 2022, 23ம் பருவத்திற்கு நேற்று முன் தினம் (21ம் தேதி) வரை மொத்தம் 8 லட்சத்து 32 ஆயிரத்து 343 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு இதற்காக 2 லட்சத்து 8 ஆயிரம் 52 விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. ஆயிரத்து 778 கோடியே 83 லட்சத்து 36 ஆயிரத்து 650 தொகை வரவு வைக்கப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்ட மேலாளர் ராஜராஜன் தெரிவித்துள்ளார்.

The post 2022, 23ம் ஆண்டு குறுவை, சம்பா, கோடை பருவத்தில் 8 லட்சத்து 32 ஆயிரம் மெ.டன் நெல் கொள்முதல் appeared first on Dinakaran.

Tags : Samba ,Thiruvarur ,Tiruvarur District ,
× RELATED செம்பனார்கோயில் பகுதியில் மண்வளத்தை மேம்படுத்த வயலில் ஆட்டுக்கிடை