×

சிதம்பரம் அருகே நான்கு வழிச்சாலை பணியால் புழுதி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி

சிதம்பரம் : கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் விழுப்புரம் -நாகப்பட்டினம் நான்கு வழிச்சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் ஆங்காங்கே பாலங்கள் கட்டுமான பணியும் நடைபெற்று வருகிறது. சிதம்பரத்திலிருந்து கடலூர் செல்லும் புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்று வரும் இந்த சாலை பணியின்போது அதிக அளவில் புழுதி பறப்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.

குறிப்பாக காலை நேரங்களில் பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அலுவலகப் பணிக்கு செல்வோர், டூவீலர், ஆட்டோ, வேன், கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் செல்லும்போது எதிரே வரும் வாகனம் தெரியாத அளவிற்கு புழுதி அதிகமாக பறக்கிறது. இதனால் காலை நேரங்களில் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது.

அதேபோல் சிதம்பரத்திலிருந்து கடலூர், புதுச்சேரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு, இந்த புறவழிச் சாலை வழியாக கார், பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் தினசரி அதிகமாக சென்று வருகின்றனர். மேலும் சாலை பணி நடைபெறும் இடத்திற்கு லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் மணல், ஜல்லி உள்ளிட்ட தளவாட பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் அதிக வேகமாக வருவதால் விபத்துக்கள் அதிகமாக நடைபெற வாய்ப்புள்ளது. மேலும் சிதம்பரத்திலிருந்து சி. முட்லூரில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள், அப்பகுதியில் உள்ள நீதிமன்றம் உள்ளிட்ட அலுவலக பணிக்கு செல்பவர்களும் சிரமப்பட்டு சென்று வருகின்றனர்.

அதேபோல் பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், பி.முட்லூர், பிச்சாவரம், கிள்ளை, கீழச்சாவடி, மண்டபம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் இருந்து சிதம்பரம் நகருக்கு வரும் பொதுமக்கள் இந்த வழியாக வரும்போது புழுதி அதிகமாக பரப்பதால் பாதுகாப்பற்ற நிலையிலே சென்று வருகின்றனர்.

டிராக்டர், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்களில் விவசாய இடு பொருட்களை கொண்டு செல்லும்போதும் புழுதி பறப்பதால் சிரமப்படுகின்றனர். எனவே பொதுமக்கள், விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோரின் நலன் கருதி நான்கு வழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும். அதேபோல் சாலைகளில் புழுதி பறக்காமல் இருப்பதற்கு அடிக்கடி தண்ணீரை தெளித்து பராமரிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

The post சிதம்பரம் அருகே நான்கு வழிச்சாலை பணியால் புழுதி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.

Tags : Chidambaram ,Villupuram-Nagapatnam ,Cuddalore district ,Dinakaran ,
× RELATED சிதம்பரம் அருகே புறவழிச்சாலையில்...