×

சங்க கால பொருட்கள் கண்டுபிடிப்பு

ஊத்தங்கரை, ஆக.23: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த உப்பாரப்பட்டியில் சங்க கால பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கி.பி 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுகள் மற்றும் சிற்பங்கள், ஆலயங்கள் கண்டறிந்த நிலையில், ஊத்தங்கரை அதியமான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் சவிதா தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்ததில், பழங்கால எச்சங்களை கண்டறிந்துள்ளனர். இதுகுறித்து சவிதா கூறியதாவது: அதியமான் மகளிர் கலை அறிவியல் கல்லூரி முதுகலை தமிழ்த்துறை 2ம் ஆண்டு மாணவி வனஜா கொடுத்த தகவலின்படி, ஏற்கெனவே உப்பாரப்பட்டியில் 800 ஆண்டுகள் பழமையான சிவலிங்கமும், சோழர்கால கோயிலும் கண்டறியப்பட்டது. அந்த பகுதியில் மேலும் கள ஆய்வு மேற்கொண்டோம். ஊருக்கு மேற்கு புறம் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு குன்று காணப்பட்டது.

அங்கு சென்று பார்த்தபோது அப்பகுதியில் ஏராளமான கருப்பு, சிவப்பு மண் பானை ஓடுகள், அந்த குன்று பகுதியில் ஏராளமாக சில்லுகளாக உடைந்த நிலையில் இருப்பதை காணமுடிந்தது. மேலும் மலையின் நடுபகுதிக்கு செல்லச் செல்ல புதியகற்கால கருவிகள் சிதைந்த நிலையில் கண்டறிய முடிந்தது. ஒரு பெண் சிலை தலைபகுதி இல்லாமல், மார்பு பகுதியிலிருந்து இடுப்பு பகுதிவரை கண்டறியப்பட்டது. அந்த சிலையில் ஒரு மார்பகம் முழுமையாகவும் மற்றொரு மார்பகம் சிதைந்த நிலையிலும் கரடுமுரடான கற்களால் ஆன உருவமாக இருந்தது. மேலும் அந்த பகுதியில் இரும்பு உருக்கப்பட்ட கட்டிகள் சிறுசிறு துண்டுகளாக கண்டறியப்பட்டன.

பல பெரிய துண்டுகளும் மண்ணில் புதைந்த நிலையில் பார்க்கமுடிந்தது. இந்த எச்சங்களை வைத்து பார்க்கும் போது இந்த பகுதியில் 2000 வருடத்திற்கு முன்பிருந்த மக்கள் வாழ்ந்திருக்க வேண்டும், வரலாற்றுக்கு முற்பட்ட காலமான புதிய கற்காலம், சங்ககாலம் மற்றும் இரும்பு காலம் வரையுள்ள எச்சங்கள் இந்த பகுதியில் காணமுடிகிறது. இந்த பகுதியை அகழாய்வு செய்து தொல்லியலாளர்கள் இதன் வரலாற்றை வெளிக்கொணர வேண்டும். இவ்வாறு சவிதா கூறினார். மாணவி வனஜா மற்றும் சுந்தர்ராஜன், அகில், யுவராஜ், மோகன சுந்தர் மற்றும் பூவிதழன் ஆகியோர் உடனிருந்து கள ஆய்வுக்கு துணை புரிந்தனர். இக்குழுவினருக்கு அதியமான் மகளிர் கலை அறிவியல் கல்லூரியின் முதல்வர் சீனி.திருமால் முருகன், செயலர் ஷோபா மற்றும் துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர் பாராட்டு தெரிவித்தனர்.

The post சங்க கால பொருட்கள் கண்டுபிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Sangam ,Uthangarai ,Upparaptti ,Uthangarai, Krishnagiri district ,Dinakaran ,
× RELATED சொந்த நிலத்தில் தகனம் செய்ய எதிர்ப்பு மூதாட்டி உடலுடன் சாலை மறியல்