×

ஏகாட்டூரில் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ரூ.8 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை

 

திருப்போரூர், ஆக.23: சென்னை புறநகர் பகுதியான கேளம்பாக்கம் அருகே ஏகாட்டூரில் ஓஎம்ஆர் சாலையையொட்டி சாலை புறம்போக்கு நிலம் உள்ளது. இந்த சாலை முன்பு ஏகாட்டூர் கிராமத்தில் இருந்து நத்தம் கிராமத்திற்கு செல்லும் வழியாக இருந்துள்ளது. இந்நிலையில், நகர மயமாக்கல் வளர்ச்சியின் காரணமாக இந்த சாலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு அதில் கடைகள், வீடுகள், வர்த்தக நிறுவனங்கள் கட்டப்பட்டன.

இந்நிலையில், சாலை புறம்போக்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டது குறித்து தனிநபர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம் வருவாய்த்துறை ஆவணங்களை சரி பார்த்தது. சாலையை ஆக்கிரமித்து கடைகள், வீடுகள் கட்டுவதை ஏற்க முடியாது என்று கூறிய உயர்நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டது.

இதையடுத்து, திருப்போரூர் வட்டாட்சியர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் சார்பில், ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ஆனால், ஆக்கிரமிப்புகளை அவர்களே அகற்றிக் கொள்ள முன் வராததால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நேற்று ஆக்கிரமிப்பு அகற்ற செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து, கேளம்பாக்கம் காவல் உதவி ஆணையர் ரவிக்குமரன், இன்ஸ்பெக்டர் கிளாட்சன் ஜோஸ் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு அங்கு கட்டப்பட்டிருந்த 7 வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களை திருப்போரூர் வட்டாட்சியர் பூங்கொடி, வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி ஆகியோர் முன்னிலையில், பொக்லைன் இயந்திரம் மூலமாக ஊழியர்கள் இடித்து அகற்றினர். மொத்தம் 65 சென்ட் பரப்பளவு உள்ள இடம் மீட்கப்பட்டதாகவும், அதன் மதிப்பு ரூ.8 கோடியே 55 லட்சம் எனவும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post ஏகாட்டூரில் ஆக்கிரமிப்பு பிடியில் இருந்த ரூ.8 கோடி மதிப்புள்ள அரசு நிலம் மீட்பு: அதிகாரிகள் நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Ekator ,Tirupporur ,OMR ,Ekatur ,Kelambakkam ,Chennai ,Dinakaran ,
× RELATED திருப்போரூர் – மாமல்லபுரம் இடையே கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை