×

வன்னியர் சங்க கட்டிடம் ‘சீல்’ வைத்த வழக்கு பரங்கிமலை நிலம் அரசுக்கு சொந்தமானது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம்

சென்னை: சென்னை அருகே பரங்கிமலையில் உள்ள 41,952 சதுர அடி நிலத்தை தற்காலிகமாக பயன்படுத்திக் கொள்ள காசி விஸ்வநாதர் தேவஸ்தானத்துக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்திருந்தது. இந்த இடத்தில் வன்னியர் சங்கக் கட்டிடம் கட்டப்பட்டு அலுவலகமாக செயல்பட்டுவந்தது. இந்நிலையில் இந்த நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக கூறி பல்லாவரம் தாசில்தால், அந்த நிர்வாகிகளுக்கு நோட்டீஸ் அனுப்பினார். இதையடுத்து, வன்னியர் சங்க கட்டிடத்துக்கு அரசு சீல் வைத்தது. அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக வன்னியர் சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில், சுமந்தா காமினி என்பவரிடம் இருந்து இந்த நிலத்தை சங்கம் வாங்கியது. தற்போது அந்த கட்டிடத்தில் உயர் கல்வி படிக்கும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களின் விடுதி செயல்பட்டு வருகிறது. எனவே, நிலத்தில் இருந்து காலி செய்யும்படி அரசு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க வேண்டும். நிலத்தில் சங்கம் செயல்படுவதில் தலையிட கூடாது என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை கடந்த வெள்ளிக்கிழமை விசாரித்து, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வு, வழக்கு தொடர்பாக இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ராமன் லால் ஆஜராகி, சம்மந்தப்பட்ட இடம் அரசுக்கு சொந்தமானது. தற்காலிகமாக அறநிலையத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதில் மனுதாரர் சங்கம் உரிமை கோர முடியாது என்று அதற்கான அரசாணையை தாக்கல் செய்தார். அதற்கு வன்னியர் சங்கம் சார்பில் மூத்த வழக்கறிஞர் என்.எல்.ராஜா, வழக்கறிஞர் கே.பாலு ஆஜராகி, வன்னியர் சங்கம் உள்ள இடம் ஆங்கிலேயரின் கிழக்கிந்திய கம்பெனியிடம் இருந்தது.

சுதந்திரத்திற்கு பிறகு அந்த இடம் கன்டோன்மென்ட் கட்டுப்பாட்டில் சென்று விட்டது. ஆனால், அரசு தரப்பில் கோயில் நிலம் என்றும் அரசு நிலம் என்று கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட இடத்தை வன்னியர் சங்கம் குத்தகைக்கு வாங்கியுள்ளது என்றனர். இதையடுத்து, இந்த வழக்கில் கன்டோன்மென்டையும் சேர்க்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்தனர். அதுவரை தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும். இருதரப்பும் கட்டிட வளாகத்திற்குள் செல்ல கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

The post வன்னியர் சங்க கட்டிடம் ‘சீல்’ வைத்த வழக்கு பரங்கிமலை நிலம் அரசுக்கு சொந்தமானது: ஐகோர்ட்டில் தமிழ்நாடு அரசு வாதம் appeared first on Dinakaran.

Tags : Vanniyar Sangha ,Tamilnadu Govt ,ICourt ,Chennai ,Kashi Vishwanath Devasthanam ,Parangimalai ,Vanniyar Sangh ,Tamil Nadu government ,
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...