×

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றார் பிரதமர் மோடி: சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு?

 

ஜோகன்னஸ்பர்க்: தென்னாப்பிரிக்காவில் நடக்கும் 15வது பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொள்ள 3 நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி தென்னாப்பிரிக்கா சென்றார். இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை கடந்த 2009ல் தொடங்கின. இதில் தென்னாப்பிரிக்கா 2010ம் ஆண்டில் இணைந்தது.இந்நிலையில், 15வது பிரிக்ஸ் உச்சி மாநாடு தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகன்னஸ்பர்க்கில் நேற்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கலந்துகொள்ள அதிபர் சிரில் ராமபோசாவின் அழைப்பின் பேரில், 3 நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி நேற்று தென்னாப்பிரிக்கா சென்றார்.

டெல்லியில் இருந்து தனி விமானத்தில் பிரிட்டோரியா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அவரை அந்நாட்டு துணை ஜனாதிபதி பால் ஷிபோகொசா மஷாதிலே வரவேற்றார். அந்நாட்டு நடன கலைஞர்கள் பாரம்பரிய நடனமாடி வரவேற்பு அளித்தனர். முன்னதாக, டெல்லியில் இருந்து புறப்படும் முன் பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், ‘‘பிரிக்ஸ் பல்வேறு துறைகளில் வலுவான ஒத்துழைப்பை பின்பற்றி வருகிறது. வளர்ச்சி மற்றும் பலதரப்பு அமைப்பின் சீர்திருத்தம் உள்ளிட்ட தெற்கு உலக நாடுகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கும் தளமாக பிரிக்ஸ் மாறியுள்ளது,” என்று மோடி கூறினார்.

மேலும் அவர், “இந்த உச்சிமாநாடு பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிர்கால ஒத்துழைப்புத் துறைகளை அடையாளம் காணவும், நாடுகளின் வளர்ச்சியை மறுஆய்வு செய்யவும் பயனுள்ள வாய்ப்பை வழங்கும்,’’ என்று தெரிவித்தார். இம்மாநாட்டில் பங்கேற்கும் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் மட்டுமின்றி, அழைப்பு விடுக்கப்பட்டுள்ள பல விருந்தினர் நாடுகளின் தலைவர்களையும் சந்தித்து பேச ஆவலாக இருப்பதாக மோடி தனது அறிக்கையில் கூறியுள்ளார். ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் உள்பட 20க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களுக்கும் உச்சி மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நாடுகளில் 23 நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினராக விண்ணப்பித்துள்ளன. எனவே, இது குறித்தும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. உச்சி மாநாட்டைத் தொடர்ந்து, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பினரல்லாத நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் பிரிக்ஸ்-ஆப்பிரிக்கா அவுட்ரீச் மற்றும் பிரிக்ஸ் பிளஸ் உரையாடல் நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். ரஷ்ய அதிபர் புடின் தென்னாப்பிரிக்கா வந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் பிறப்பித்த பிடிவாரண்ட் உத்தரவின் கீழ் கைது செய்யப்படும் சூழல் நிலவுவதால், பிரிக்ஸ் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்பார் என்று ரஷ்யா தெரிவித்திருந்தது.

இந்நிலையில், கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், அதிபர் புடின் காணொலி மூலம் பங்கேற்றாலும், அதில் முழுமையாக கலந்துகொண்டு உரையாற்றுவார். வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் ரஷ்யாவின் பிரதிநிதியாக வந்துள்ளார்,’’ என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜின் பிங் பங்கேற்கிறார். சீனா உடனான எல்லைப் பிரச்னை நீடிக்கும் நிலையில், பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜின்பிங்கை நேரடியாக சந்திப்பாரா? என்பது கேள்வி குறியாகி உள்ளது. மாநாட்டிற்கு பின் அங்கிருந்து, கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி வரும் 25ம் தேதி கிரீஸ் செல்கிறார். இதன் மூலம், 40 ஆண்டுகளுக்குப் பிறகு கிரீஸ் செல்லும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை மோடி பெறுகிறார்.

பிரிக்ஸ் சிறப்பம்சம்
இந்தியா, பிரேசில், ரஷ்யா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகியவற்றை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பு, உலக மக்கள்தொகையில் 41 %, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 24 %, உலகளாவிய வர்த்தகத்தில் 16 சதவீதத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் உலகின் ஐந்து மிகப் பெரிய நாடுகளை கொண்டது என்பது இதன் சிறப்பம்சமாகும்.

The post பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க தென்னாப்பிரிக்கா சென்றார் பிரதமர் மோடி: சீன அதிபர் ஜின்பிங்குடன் சந்திப்பு? appeared first on Dinakaran.

Tags : PM ,Modi ,South Africa ,BRICS conference ,Chinese President Xi Jinping ,Johannesburg ,15th BRICS conference ,
× RELATED பிரதமர் மோடியும் அவரின் இளம் நண்பர்களும்