×

குமரியில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டி பெயின்டர் படுகொலை

பூதப்பாண்டி: கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டியில் நடந்த திருமண நிகழ்ச்சியின்போது ஏற்பட்ட மோதலில், மண்டபத்தில் இருந்து அரிவாளை எடுத்து வந்த விவசாயி, நடுரோட்டில் நின்றுகொண்டிருந்த பெயின்டரை துண்டு துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே நாவல்காடு நம்பியான்குளம் பகுதியை சேர்ந்தவர் ராபர்ட் என்ற நெல்சன் (49). பெயின்டர். அவருக்கு மனைவி மற்றும் 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்டு (43). விவசாயி. அவரது நெருங்கிய உறவினர் ஒருவரின் வீடு ராபர்ட் வீட்டின் அருகே உள்ளது. அந்த நபருக்கும், ராபர்ட்டுக்கும் இடம் சம்பந்தமாக ஏற்கனவே பிரச்னை உள்ளது.

இதனால் ராபர்ட் மீது ரிச்சர்டுக்கு முன்விரோதம் இருந்துள்ளது. 2 பேரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்து உள்ளனர். இந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்பதற்காக இரவு சுமார் 8 மணி அளவில் ராபர்ட் சென்றார். அப்போது அங்கு ஏற்கனவே ரிச்சர்டும் இருந்துள்ளார். மதுபோதையில் இருந்த 2 பேருக்கும் அங்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றிய நிலையில் ரிச்சர்டு திடீரென்று மண்டபத்தின் உள்பகுதிக்கு சென்றார்.

ராபர்ட் மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நாவல்காட்டில் உள்ள ஒரு சர்ச் அருகே சாலையோரத்தில் நின்றுகொண்டிருந்தார். அப்போது இரவு 10 மணி இருக்கும். இந்நிலையில் மண்டபத்தின் உள்பகுதிக்கு சென்ற ரிச்சர்டு அங்கு சமையலறையில் இருந்த அரிவாளை எடுத்துக் கொண்டு கொலை வெறியுடன் வந்தார். மண்டபத்தில் ராபர்ட் இல்லாததை பார்த்த அவர், ராபர்ட்டை தேடி சாலைக்கு வந்தார். அங்கு ராபர்ட் நின்று கொண்டிருந்ததை பார்த்த ரிச்சர்டு ஓடிச் சென்று சரமாரியாக அரிவாளால் ராபர்ட்டை வெட்டினார். உடலில் பல இடங்களில் வெட்டப்பட்ட ராபர்ட் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.

அவர் இறந்துவிட்டதை உறுதி செய்துகொண்ட ரிச்சர்டு, அங்கிருந்து நேராக பூதப்பாண்டி போலீஸ் நிலையத்துக்கு சென்று சரணடைந்தார். அவரைக் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே ராபர்ட்டின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. மக்கள் நடமாட்டம் மிகுந்த நடுரோட்டில் பெயின்டரை, விவசாயி அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து போலீசார் கிடுக்கிப்பிடியாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post குமரியில் நடுரோட்டில் சரமாரியாக வெட்டி பெயின்டர் படுகொலை appeared first on Dinakaran.

Tags : Kumari ,Boothapandi ,Boothapandi, Kanyakumari district ,
× RELATED குமரி கடல் நடுவே அமைந்துள்ள...