×

தென்மேற்கு பருவ மழை குறைவால் குட்டையாக உருமாறிய தேவம்பாடி வலசு குளம்

*விவசாயிகள் வேதனை

பொள்ளாச்சி : பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி வலசில், சுமார் 65 ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்துக்கு மழைக்காலத்தில் வாய்க்கால் மற்றும் காட்டாற்று மழை வெள்ளத்தில் தண்ணீர் வரத்து அதிகமாக இருக்கும். இதன் மூலம், அந்த கிராமத்தை சுற்றியுள்ள பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தது. மேலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்வால் தண்ணீர் தட்டுப்பாடு என்பது பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்தது. ஆனால், சுமார் 18 ஆண்டுக்கு முன்பிருந்து இந்த குளத்துக்கு தண்ணீர் வரத்து என்பது மிகவும் குறைந்தது.

ஒவ்வொரு ஆண்டும் மழை பெய்தாலும் சொற்ப அளவிலே தண்ணீர் வரத்து இருந்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு வரையிலும், சில ஆண்டுகளாக அவ்வப்போது பருவமழை பெய்தாலும், குளத்துக்கு தண்ணீர் வரத்து இல்லாமல் பாலைவனமாக வறண்டு காணப்பட்டது. இந்த குளத்தையொட்டிய கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களை பாதுகாக்க, தேவம்பாடி வலசு குளத்துக்கு பிஏபி அணையிலிருந்து,வாய்க்கால் வழியாக தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து வலுத்தால் மட்டுமே தேவம்பாடி வலசு குளத்துக்கு தண்ணீர் வரத்து இருக்கும் என்ற நிலை ஏற்பட்டது.இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து, பகல் மற்றும் இரவு என தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக, குளத்துக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க துங்கியது. கடந்த 2022ம் ஆண்டில் பெய்த தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையால் பல்வேறு வாய்க்கால் வழிகளில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து வெள்ளப் பெருக்காக வந்தது. மேலும், பல்வேறு வழித்தடத்தில் தொடர்ந்து காட்டாற்று வெள்ளம் வந்ததால், குளத்தின் நீர்மட்டம்ட வெகுவாக உயர்ந்தது.

இதனால், தேவம்பாடி குளமானது முழுமையாக நிரம்பி கடல்போல் காட்சியளித்தது. பல ஆண்டுகளுக்கு பிறகு, தேவம்பாடி குளம் முழுமையாக நிரம்பியதுடன்,மறுகால் பாயும் அளவிற்கு இருந்ததால்,அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமப் பகுதி விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், இந்த ஆண்டில் கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் தொடர்ந்து பெய்ய வேண்டிய கோடைமழை சில நாட்கள் மட்டுமே பெய்து நின்று போனது.

அதன்பின், தென்மேற்கு பருவமழை ஒரு மாதம் தாமதமாகி கடந்த ஜூலை மாதம் பெய்துள்ளது. இந்த மழையும் சில வாரமே நீடித்தது. கடந்த சில ஆண்டுகளை போல், இந்த ஆண்டில் பருவமழை போதுமானதாக பெய்யாமல் ஏமாற்றமே மிஞ்சியது.கோடை மழை மற்றும் தென்மேற்கு பருவமழை குறைவால், குளத்தில் நீர் மெல்ல மெல்ல வற்ற துவங்கியுள்ளது. கடந்த ஆண்டில் இதே நேரத்தில், கடல் போல் கட்சியளித்த தேவம்பாடி வலசு குளம், இப்போது குட்டைபோன்று காட்சி அளிக்கிறது.

மேலும், சமவெளி பகுதியானது மேய்ச்சல் காடாக மாறியுள்ளது. இதனால், விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பருவமழை சில மாதமாக தொடர்ந்து பெய்தால் மட்டுமே, தேவம்பாடி வலசு குளத்துக்கு தண்ணீர் வரத்து இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் தெரிவித்தனர்.

The post தென்மேற்கு பருவ மழை குறைவால் குட்டையாக உருமாறிய தேவம்பாடி வலசு குளம் appeared first on Dinakaran.

Tags : Devambadi Valasu pond ,Pollachi ,Devambadi Valas ,
× RELATED பைக் ஏற்றி கணவரை கொலை செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்