×

ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனைக்கு பின்பே பொதுமக்களுக்கு அனுமதி

ஊட்டி : ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரும் பொதுமக்களை போலீசார் தீவிர சோதனை செய்த பின்னரே அனுமதிக்கின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வாரம் தோறும் திங்கட்கிழமை நடத்தப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது குறைகளை மனுக்கள் மூலம் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக தெரிவிப்பர். மாவட்ட கலெக்டர் நேரடியாக விசாரணை செய்து சம்பந்தப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அந்தந்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடுவார். இதனால் பெரும்பாலான மக்கள் தெரிவிக்கும் குறைகளுக்கு நிவாரணம் கிடைத்துவிடும். இதனால் வாரம் தோறும் இந்த கூட்டத்திற்கு ஏராளமானோர் வருகின்றனர்.

இந்நிலையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வரும்பொது மக்களில் சிலர் தங்களது குறைகள் பல நாட்களாக தீர்க்கப்படவில்லை என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவதும், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபடுவதும் மற்றும் தீக்குளிக்க முயற்சிப்பதும் என செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனை தடுக்க மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருக்கும். எனினும், போலீசாருக்கு தெரியாமல் சிலர் இது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கடந்த வாரம் திங்கட்கிழமை கோத்தர் பழங்குடியின தம்பதிகள் தங்களது விவசாய நிலத்தை மீட்டுதரக் கோரி திடீரென ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சித்தனர்.

இதனை தொடர்ந்து, ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தற்போது நாள் தோறும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.குறிப்பாக திங்கட்கிழமைகளில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நேற்று நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்திற்கு வந்த பொதுமக்கள் சோதனை செய்த பின்னரே கூட்டத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக, எளிதில் தீப்பற்றக் கூடிய பொருட்கள் உள்ளதா? என போலீசார் சோதனை மேற்கொண்டு பொதுமக்களை அனுமதித்தனர்.

The post ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் தீவிர சோதனைக்கு பின்பே பொதுமக்களுக்கு அனுமதி appeared first on Dinakaran.

Tags : Pinbay ,Feeder Collector's Office ,
× RELATED வாக்காளரின் ஒப்புதலை பெற்ற பின்பே...