×

மருவாய் -பின்னலூர் வரை கிடப்பில் போடப்பட்ட விகேடி சாலை விரிவாக்க பணி

*விரைந்து முடிக்க எதிர்பார்ப்பு

சேத்தியாத்தோப்பு : மருவாய் -பின்னலூர் வரை விகேடி சாலை விரிவாக்க பணிகளை கிடப்பில் போட்டு வருவதால் பணியை விரைந்து முடிக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கடலூர் மாவட்டம் மருவாய் – பின்னலூர் வரை உள்ள விகேடி சாலை விரிவாக்கப்பணியை பிரபல தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்று செய்து வந்தது. இந்நிலையில் பணிகளை விரைந்து முடிக்காமல் சாலை மற்றும் என்.எல்.சி.யின் உபரிநீர் செல்லும் பரவனாறு ஐந்து கண் பாலம் கட்டுமான பணி நீண்ட நாட்களாக கிடப்பில் போட்டுள்ளனர். பின்னலூர்-மீன்சுருட்டி வரை வேறொரு தனியார் நிறுவனம் ஒப்பந்தம் பெற்று 70 சதவீத பணிகளை பூர்த்தி செய்துள்ளது. ஆனால் மருவாய், கரைமேடு, பின்னலூர் பகுதிகளில் சாலை அமைத்துவரும் நிறுவனம் ஆமை வேகத்தில் பணிகளை செய்து வருகின்றது.

சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பேருந்து மற்றும் கரைக வாகனங்கள் சென்று வருகின்றது. வாகன விபத்துகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. மேலும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். விகேடி சாலைப்பணியை கண்காணித்து வரும் நகாய் திட்ட அதிகாரிகளும் இதனை கருத்தில் கொள்ளாமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். விகேடி சாலைப்பணி துவங்கி ஆண்டுகள் பல கடந்தும் பணிகள் முடிவு பெறாமல் உள்ளது.

இதற்காக நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு உரிமையாளர்களுக்கு இழப்பீடும் கொடுக்கப்பட்டது. கையகப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்த குடியிருப்பு கட்டிடம், வர்த்தக கட்டிடம், கிராமத்திற்கு அடையாள சின்னமாக இருந்த நிழல்தரும் மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. கரைமேடு கிராம பகுதியில் பேருந்து நிறுத்தப்பகுதியில் இருந்த மரத்தில் ஆயிரக்கணக்கான காக்கைகள் தனது விடாக கருதி தங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மரங்கள் இல்லாமல் போனபின்பு காக்கைகள் இடம்பெயர்ந்து சென்றுவிட்டன. ஆனால் மரங்கள் இருந்த பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டுவைக்காமல் சாலை பணியை மட்டுமே செய்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மருவாய், கரைமேடு, பின்னலூர் பகுதியில் கிடப்பில் போட்டு வைத்துள்ள விகேடி சாலைப்பணியை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post மருவாய் -பின்னலூர் வரை கிடப்பில் போடப்பட்ட விகேடி சாலை விரிவாக்க பணி appeared first on Dinakaran.

Tags : VKD ,Maruai-Pinnalur ,Chetiyathoppu ,Maruai- ,Pinnalur ,Maruai ,Pinnallore ,Dinakaran ,
× RELATED சேத்தியாத்தோப்பு பேரூராட்சியில் லஞ்ச...