×

திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை

நன்றி குங்குமம் ஆன்மிகம்

சீ ர்காழியிலிருந்து பூம்புகார் செல்லும் பாதையில் உள்ளது திருவெண்காடு திருத்தலம். இத்தலம், கல்விக்கும் அறிவிற்கும் அதிபதியான புதனின் தலம். பிரணவத்தின் தத்துவத்தை அறிய, இத்தல நாயகியான வித்யாம்பிகையை நோக்கி நான்முகனான பிரம்மதேவன், இத்தலத்தில் தவம் செய்தார். நான்கு திருக்கரங்களுடன் அழகே வடிவாய் தேவி, இத்தலத்தில் கொலுவீற்றிருக்கிறாள். நான்முகனாகிய பிரம்மனுக்கே வித்தைகளைக் கற்றுத் தந்ததால், இத்தேவி “பிரம்மவித்யாம்பிகை’’ என வழிபடப்படுகிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு கல்விச் செல்வத்தை வாரிவாரி வழங்கும் அன்னை, இந்த தேவி.

ஆறு விரல் அழகன்

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ள வளசரவாக்கம் சுப்பிரமணிய நகரில், பிரம்ம ஸ்கந்தனாகக் கோயில் கொண்டிருக்கிறார் முருகன். முன்பொரு சமயம், திருமால் மற்றும் நான்முகனின் படைக்கும் பொறுப்பை, முருகனே ஏற்றுக் கொண்டானாம். அதைக் குறிக்கும் வகையில், இத்தல முருகன் “பிரம்மஸ்கந்தர்’’ என வணங்கப்படுகிறார். ஆறு அடிக்கும் மேலான உயரத்தில் ஒரு கையில் கிண்டி, மறுகையில் ஜபமாலை ஏந்தி, வலது காலில் ஆறுவிரல்களுடன் வித்தியாசமாகக் காட்சி தருகிறார். இவரை, செவ்வாய்க் கிழமைகளில் எலுமிச்சைப் பழமாலை சாத்தி வழிபட, நினைத்தது நிறைவேறுகிறதாம்.

மூலநாத சுவாமி

மறுபிறவி வேண்டவே வேண்டாம் என்று விரும்புபவர்கள் வழிபட வேண்டிய கோயில், சோழவந்தான் அருகே உள்ளது. இந்தக் கோயிலில் இறைவன் மூலநாத சுவாமியாக எழுந்தருளியிருக்கிறார். இங்குள்ள நந்தி சூலாயுதத்துடன் காணப்படுவது தனிச் சிறப்புடையது.

பெண் தெய்வப் பெயர்களில் லிங்கங்கள்

திருவீழிமிழலையில் சரஸ்வதி, காயத்ரி, சாவித்ரி என சரஸ்வதி தேவியின் மூன்று வடிவங்களும் தனித் தனியே லிங்கங்களை நிறுவி வழிபட்டதாக ஐதீகம். அவர்கள் வழிபட்ட லிங்கங்கள் சரஸ்வதீஸ்வரர், காயத்ரீஸ்வரர், சாவித்ரீஸ்வரர் என்ற பெயரில் இத்தலத்தில் அருளாட்சி புரிந்து கொண்டிருக்கின்றன.

பஞ்ச வராகர் தலம்

ஸ்ரீமுஷ்ணத்தில் மூலவர் நீலவராகர், உற்சவர் யக்ஞவராகர், பூவராகர் (பூமி நாச்சியாருடன் அருள்வதால்), கோலவராகர், ஸ்வேதவராகர் என ஐந்து வித வராக மூர்த்திகளாக அருள்கிறார். அதனால், இத்தலம் பஞ்சவராகத் தலம் என்றும் போற்றப்படுகிறது.

தங்கமயில் வாகனன்

திண்டிவனத்திற்கு அருகில் உள்ளது மயிலம். பெயருக்கேற்றவாறு இத்தலத்தில் ஒரு பெரிய தங்கமயில் வாகனம் உள்ளது. திருக்கல்யாணக் கோலத்தில் முருகன், வள்ளி – தெய்வானையுடன் காட்சி தருகிறார். பங்குனி மாத உற்சவத்தின்போது, முருகப் பெருமான் தேவியருடன் தங்கமயில் வாகனத்தில் உலாவரும் காட்சி கண்ணுக்கும், மனதுக்கும் விருந்து.

தொகுப்பு: எஸ்.விஜயலட்சுமி

The post திருவெண்காடு பிரம்ம வித்யாம்பிகை appeared first on Dinakaran.

Tags : Thiruvenkadu ,Brahma Vidyambigai ,kalli ,poombugarh ,Tiruvenkadu ,
× RELATED அதிக வாக்கு வித்தியாசத்தில் திமுக...