×

சின்னமுட்டம் துறைமுகம் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க கூடாது

* கலெக்டரிடம் மீனவர்கள் கோரிக்கை

நாகர்கோவில் : பிரின்ஸ் எம்எல்ஏ தலைமையில் காங்கிரஸ் கிழக்கு மாவட்ட தலைவர் கே.டி உதயம் மற்றும் சின்ன முட்டம் துறைமுகம் புனித தோமையார் ஆலய பங்கு மேய்ப்புப் பணி பேரவை நிர்வாகிகள் நேற்று மாலை கலெக்டரிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: சின்னமுட்டம் மீனவ கிராமம் பாரம்பரிய கடல் தொழில் செய்கின்ற கிராமம். இங்கு சுமார் 3000 மக்கள் வாழ்கின்றார்கள்.

எங்களுடைய வாழ்வாதாரம் கடலை மட்டுமே நம்பி இருக்கிறது. கன்னியாகுமரி, ஹை கிரவுண்ட், பகுதியை சேர்ந்த ஒருவருக்கு சின்னமுட்டம் கடற்கரைக்கு மிக அருகில் நிலம் உள்ளது. அதன் அருகில் வீடுகள், சிறிய நாட்டு படகில் கடல் தொழில் செய்யும் மீனவர்கள் நாட்டுப்படகை நிறுத்துமிடமும், விசைப்படகு கட்டும் தளமும் மற்றும் அதன் எதிரில் அதிக மின்அழுத்தமுள்ள மின்மாற்றியும் உள்ளது.

இந்த நிலையில் சின்ன முட்டம் துறைமுகம் அருகே நிலம் உள்ள நபர் அந்த நிலத்தில் பொய்யான தகவல்களை கொடுத்து அனுமதி பெற்று கடற்கரை விதி முறைகளை மீறி பெட்ரோல் பங்கு அமைக்க முயற்சி செய்து வருகிறார். இதனால் மீனவ மக்கள் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது. மேலும் ஆர்டிஓ தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு சுமூகமான தீர்வு ஏற்படுத்தப்படும் என கூறப்பட்டதன் அடிப்படையில் போராட்டங்கள் கைவிடப்பட்டன.

எனவே ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மீனவர்களுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பொய்யான தகவல்களை கொடுத்து அதிகாரிகளிடமிருந்து பெற்ற அனுமதியை தாங்கள் மறுஆய்வு செய்து, மீனவர்களின் உயிருக்கும், உடைமைகளுக்கும், வாழ்வாதாரத்திற்கும் பாதுகாப்பு அளித்து, மேற்படி இடத்தில் பெட்ரோல் பங்கு அமைக்க அனுமதி கொடுக்கக் கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post சின்னமுட்டம் துறைமுகம் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் அமைக்க கூடாது appeared first on Dinakaran.

Tags : Chinnamuttam port ,Nagercoil ,Prince MLA ,Congress East District ,President ,KT Udayam ,Dinakaran ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...