×

மருங்காபுரி அருகே 67 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலில் குதிரை எடுப்பு விழா: 5 கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பு

துவரங்குறிச்சி, ஆக.22: மருங்காபுரி கவுண்டம்பட்டியில் பெரியாண்டவர், பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. 67 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் 5 கிராமங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டம் மருங்காபுரி கவுண்டம்பட்டியில் பெரியாண்டவர், பெரியநாயகி அம்மன் கோயில் உள்ளது. இதில் அண்ணன்மார் தெய்வங்கள் என்றழைக்கப்படும் பொன்னர் – சங்கர், அருக்காணி தெய்வங்களும் அருள்பாலித்து வருகின்றனர். இங்கு ஆடி மாதம்தோறும் கன்னிப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, சுக்காம்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கவுண்டம்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பங்காளி மக்களால் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். 67 ஆண்டுகளுக்கு பிறகு 5 கிராம இளைஞர்களின் முயற்சியால் நிகழாண்டு 3 நாட்களுக்கு நடைபெறும் திருவிழா நேற்றுமுன்தினம் இரவு தொடங்கியது.

தாரைத்தப்பட்டைகள் முழங்க, வாண வேடிக்கையுடன் கன்னிப்பட்டி, தாதகவுண்டம்பட்டி, சுக்காம்பட்டி, வெள்ளையகவுண்டம்பட்டி, கவுண்டம்பட்டி ஆகிய 5 கிராமங்களை சேர்ந்த பெண்கள் தலையில் பொங்கல் பானை, அரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் கூடை மற்றும் விறகுகளை சுமந்துகொண்டு  பெரியாண்டவர்,  பெரியநாயகி அம்மன் கோயில் திடலுக்கு வந்தடைந்தனர். பின்னர் அங்கிருந்து ஊர் முக்கியஸ்தர்கள் முன்னே செல்ல அவர்களை தொடர்ந்து அனைவரும் கவுண்டம்பட்டி ஊர் நாட்டாண்மை இல்லத்திற்கு நடந்தே சென்றனர். அங்கு 5 ஊர் விழா காரியஸ்தர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது.

அதனைத்தொடர்ந்து ராஜாபட்டியில் செய்து வைத்திருந்த 5 கிராம குதிரைகளுக்கும், வெள்ளை குதிரையில் இருந்த கருப்பசாமி, சப்த கன்னிமார் உள்ளிட்ட புரவிகளுக்கு தீபாரதனை செய்து கண் திறந்து 5 கிராம இளைஞர்கள் தோளில் சுமந்து கொண்டு வளநாடு குளம் கருவாடு பொட்டலுக்கு வந்தடைந்தனர். அங்கு அம்மனுக்கு கரகம் பாலித்தல் நடைபெற்றது. விடிய விடிய நடந்த திருவிழாவில் 5 கிராமங்களை சேர்ந்த பங்காளிகள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

The post மருங்காபுரி அருகே 67 ஆண்டுகளுக்கு பிறகு கோயிலில் குதிரை எடுப்பு விழா: 5 கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : Marungapuri ,Duvarangurichi ,Periyandavar ,Periyanaiki Amman ,Marungapuri Kaundampatti ,
× RELATED அடைக்கம்பட்டி ஊராட்சியில் 100 சதவீதம்...