×

₹10 கோடிக்கு பட்டுக்கூடு வர்த்தகம்

ராசிபுரம், ஆக.22: தமிழக அரசு பட்டு வளர்ச்சி துறை மூலம், பட்டுக்கூடு உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு 75 சதவீத மானியம் வழங்கும் நிலையில், ராசிபுரம் பட்டுக்கூடு விற்பணை மையத்தில் இதுவரை ₹10 கோடிக்கு வர்த்தகம் நடந்துள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போதிய மழையின்மை, ஆட்கள் பற்றாக்குறை, கூலி உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், விவசாயிகள் பலர் மாற்றுத்தொழிலை நாடிச் சென்றுவிட்டனர். பல விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட்டுகளாக மாறியுள்ளன. இருப்பினும் சிலர், விவசாயத்தில் மாற்று தொழில் நுட்பங்களை கையாண்டு, தங்களின் குடும்ப சூழ்நிலையை உயர்த்தி வருகிறார்கள். நாமக்கல் மாவட்ட விவசாயிகள் பலர் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடுகளை விவசாயிகள் நேரடியாக விற்பனை செய்ய வேண்டும் என்றால், தர்மபுரி அல்லது பெங்களூருவில் உள்ள பட்டுக்கூடு அங்காடிகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் போது, உரிய விலை கிடைக்காவிட்டால் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலின் போது, திமுக தேர்தல் வாக்குறுதியில் நாமக்கல் மாவட்டத்தில் பட்டுக்கூடு விற்பனை மையம் அமைக்கப்படுமென அறிவிக்கப்பட்டது. அதன்படி, ராசிபுரம் பகுதியில் பட்டுக்கூடு விற்பனை மையம் அமைக்கப்பட்டது. இந்த மையத்திற்கு வரும் விவசாயிகள் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் மங்களபுரம், முள்ளுக்குறிச்சி, நாமகிரிப்பேட்டை, சேந்தமங்கலம், எருமப்பட்டி, பரமத்தி, திருச்செங்கோடு, வெண்ணந்தூர், சேலம் மாவட்டத்தில் சேலம், ஆத்தூர், வாழப்பாடி மற்றும் ஈரோடு, திண்டுக்கல், கரூர், வேடசந்தூர், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, விவசாயிகள் பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

சேலம், நாமக்கல், தர்மபுரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, வியாபாரிகள் வந்து வாங்கி செல்கிறார்கள். இதுகுறித்து பட்டு வளர்ச்சி விற்பனை அதிகாரிகள் கூறுகையில், ‘ராசிபுரம் பட்டுக்கூடு விற்பனை மையத்திற்கு, விவசாயிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால் மையம் ஆரம்பித்ததில் இருந்து, இதுவரை 220 டன் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ₹10 கோடிக்கு மேல் வர்த்தகம் நடந்துள்ளது. இதன் மூலம் அரசுக்கு ₹16 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. பத்து லாட் கொட்டும் அளவிற்கு தான் மையம் உள்ளது. அதிகளவில் வரும்போது, அருகில் உள்ள வேளாண்மை அலுவலகத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. அதற்கு தகுந்தபடி, பெரிய இடத்திற்கு விற்பனை மையத்தை மாற்ற வேண்டும்,’ என்றனர்.

தற்போது வெண் பட்டுக்கூடு கிலோ ₹4 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ₹600 வரை விலை கூடுதலாக கிடைக்கிறது. ேமலும், தமிழ்நாடு பட்டு வளர்ச்சி துறை மூலம், விவசாயிகள் பட்டுக்கூடு உற்பத்தி செய்ய 75 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது. இதனை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

The post ₹10 கோடிக்கு பட்டுக்கூடு வர்த்தகம் appeared first on Dinakaran.

Tags : Rasipuram ,Tamil Nadu Government ,Silk Development Department ,
× RELATED தமிழகத்தில் தற்போது கோடை வெயிலில்...